குறளின் கதிர்களாய்…(444)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(444)
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.
-திருக்குறள் – 13 (வான் சிறப்பு)
புதுக் கவிதையில்…
பெய்யவேண்டிய காலத்தில்
பெய்யாமல் மழை
பொய்க்குமானால்,
பரந்து நீர் நிரம்பிய
கடலால் சூழப்பட்ட
பேருலகில்
பசி நிலைத்து நின்றே
உயிர்களை வருத்தும்…!
குறும்பாவில்…
உரிய காலத்தில் மழை
வராமல் பொய்த்தால், கடல்சூழ் பேருலகில் ,
பசிநிலைத்தே உயிர்களை வருத்தும்…!
மரபுக் கவிதையில்…
பரந்த கடல்சூழ் பேருலகில்
பருவ மழையும் வாராதே
கரந்தே பொய்த்துப் போயேதான்
கடமை தவறிச் சென்றாலே,
தரமே யில்லாப் பசியதுவும்
தானே நின்று நிலைபெற்றே
தரணி வாழும் உயிரெல்லாம்
தாங்கா வகையில் வருத்திடுமே…!
லிமரைக்கூ…
மழையிலை உரிய காலத்தில்
என்றாலே, பசியது நிலைபெற்றே வருந்தவைக்கும்
உயிரினத்தைப் பரந்த ஞாலத்தில்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் மழவேணும்
ஓலகம் செறக்க
ஒழுங்கா மழவேணும்..
பெய்யவேண்டிய காலத்தில
மழ வந்து
பெய்யாம போச்சிண்ணா,
கடலு சூழ்ந்த ஒலகத்தில
கடுமையான பசியே
நெலச்சி நின்னு
ஒலகத்து உயிருகள
ஒண்ணா
தும்பப்பட வச்சிருமே..
அதால
வேணும் வேணும் மழவேணும்
ஓலகம் செறக்க
ஒழுங்கா மழவேணும்…!