Journey of a Civilization – Indus to Vaigai – நூலறிமுகம்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு), அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் அற்புதமான ஆய்வுநூல், ’Journey of a civilization – Indus to Vaigai.’ ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் வெளியீடு இது.
உலகின் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான சிந்துவெளி நாகரிகத்தின் நகர்வு குறித்த தம் பார்வையை இந்நூலில் மிகச் சிறப்பாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தியிருக்கின்றார் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட தொடராய்வுகளின் விளைச்சலைத் தாங்கிநிற்கும் கருத்துக் கருவூலம் இந்நூல் எனில் மிகையில்லை.
இந்நூலில் 17 பகுதிகள் (chapters) இடம்பெற்றுள்ளன. அவை குறித்து இக்கட்டுரையில் சிறியதோர் அறிமுகத்தைத் தமிழில் தந்திருக்கின்றேன்.
1. மனிதப் பயணத்தின் தொடக்கம்:
இப்பகுதியில் மாந்தர்களின் தொடக்க கால வாழிடம், அவர்களது நகர்வுகளின் பாதை, நாடோடிகளாகவும் காட்டுவிலங்காண்டிகளாகவும் வாழ்ந்த தொடக்க கால மாந்தக்கூட்டம் கருவிகளை உருவாக்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்து உற்பத்தியைப் பெருக்கி நிலைத்த வாழிடங்களில் வதியும் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி கண்டமை, மாந்தர்களின் மரபணு ஆராய்ச்சிகளில் கிடைக்கப்பெறும் உண்மைகள், அவை சிந்துவெளி நாகரிகத்தோடு பொருந்திவரும் தன்மை போன்றவை ஆராயப்பட்டிருக்கின்றன.
2. வெண்கலக் கால நாகரிகங்கள் – உலகின் பழமையான நாகரிகங்கள்:
வெண்கலக் காலகட்டத்தைச் சேர்ந்த உலகின் பழமையான நாகரிகங்களான சுமேரிய நாகரிகம், எலமைட் நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகியவை பற்றி இப்பகுதி பேசுகின்றது. குறிப்பாக, சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட விதம், அதன் அடிப்படைகள், அம்மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள் போன்றவற்றை இங்கே நமக்கு அறியத்தருகின்றார் ஆசிரியர்.
3. சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம், முடிவு குறித்து நீடிக்கும் புதிர்கள்:
இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தோன்றிய ஒன்றா? வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவை வந்தடைந்ததா? என்பது குறித்தும், சிந்துவெளி எழுத்துக்கள் திராவிடச் சார்புடையனவா? இந்தோ-ஆரியச் சார்புடையனவா? என்பது குறித்தும் பல்வேறு ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும், இந்நாகரிகத்தின் அழிவு பற்றிய ஆய்வாளர்களின் கருதுகோள்களும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
4. சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடச் சார்பை வெளிப்படுத்தும் கோட்பாடுகள்:
சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடச் சார்பை வெளிப்படுத்தும் கோட்பாடுகளையும் அவற்றை வெளிப்படுத்தியிருக்கும் அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல், கமில் சுவெலபில், சுனிதிகுமார் சாட்டர்ஜி, ஹென்றி ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பார்ப்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோரின் விளக்கங்களையும் இப்பகுதியில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்தோடு, பார்ப்போலா, மகாதேவன் ஆகியோர் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த சின்னங்கள் முத்திரைகள் எழுத்துக்கள் குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் ஈண்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.
5. இடப்பெயர்களின் இடப்பெயர்வு:
மனிதர்கள் தாங்கள் இடம்பெயர்ந்தபோதெல்லாம் தாங்கள் வாழ்ந்த இடங்களின் பெயர்களையும் தம்முடனேயே பெயர்த்துச் சென்றிருக்கின்றனர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தோர் இங்கிலாந்தின் இடப்பெயர்களான பர்மிங்ஹாம் (Birmingham), இலண்டன் (London), ஷெப்பீல்டு (Sheffield) போன்றவற்றையும், தமிழகத்திலுள்ள திருநெல்வேலியிலிருந்து இலங்கை, யாழ்ப்பாணத்திற்குச் சென்றோர் திருநெல்வேலி என்ற பெயரையும் அங்குச் சூட்டியிருப்பதைப் சுட்டிக்காட்டும் ஆசிரியர், ஈதொத்த சான்றுகள் பலவற்றை எடுத்துக்காட்டி இக்கூற்றை உறுதிப்படுத்துகின்றார்.
6. பழந்தமிழ்நாடும் சங்க இலக்கியமும் – மறைந்த சிந்துவெளியின் தொடர்ச்சி தமிழிலக்கியத்தில் வெளிப்படும் காட்சி:
மறைந்த சிந்துவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சியைச் சங்க இலக்கியங்கள் தாங்கி நிற்பதனைச் சங்கப் பாடல்கள் வாயிலாக விரிவாகவும் தக்க சான்றுகளோடும் வெளிப்படுத்தியிருக்கின்றது இப்பகுதி. சங்க இலக்கிய ஆர்வலர்களுக்கு இப்பகுதி நல்விருந்தாக அமைவதோடல்லாமல், வரலாற்றுப் பின்னணியோடு தொடர்புடைய அதன் இன்னொரு முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது எனலாம்.
7. திராவிடச் சார்புக்குச் சான்றாய்த் திகழும் சிந்துவெளி இடப்பெயர்கள்:
கொற்கை, வஞ்சி, தொண்டி, கள்ளூர் போன்ற சங்க இலக்கிய இடப்பெயர்களும், நள்ளி, பாரி, பேகன், அதியன், அஞ்சி உள்ளிட்ட வேளிர்களின் பெயர்களும், மூவேந்தர்களின் பெயர்களும் சிந்துவெளிப் பகுதிகளில் (இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா) காணப்படுவதை நிலப்பட (map) ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இப்பகுதியில் தந்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன்.
8: திராவிட வடிவமைப்பில் (திராவிட மாடல்!) மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் விளங்கும் சிந்துவெளி நகரங்கள்:
ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன், லோத்தல் உள்ளிட்ட சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் நிலத்தின் மேற்குப்பகுதி உயர்ந்தும் அவ்வுயர்ந்த பகுதியில் கோட்டைகளும், நிலத்தின் கிழக்குப்பகுதி தாழ்ந்தும், அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டிகள், பண்டசாலை போன்றவையும் அமைந்திருந்தமையை அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் புலப்படுத்தின. இவைபோலவே தமிழ்நாட்டிலும் மேற்குப்பகுதி உயர்ந்தும் கிழக்குப்பகுதி தாழ்ந்தும் இருப்பதோடு மேல், கீழ் என்ற சொற்கள் உயர்வு/சிறப்பு, தாழ்வு/இழிவு எனும் பொருளைக் குறிக்கும் வகையிலும் புழக்கத்திலிருப்பதை இலக்கியச் சான்றுகளோடும் நிலவியல் சான்றுகளோடும் இப்பகுதியில் நாம் அறிந்துகொள்கின்றோம்.
9. சிந்துவெளி மக்களின் சிந்தை கவர்ந்த நிறம் திராவிடச் சிவப்பு:
சுட்ட செங்கல், செம்பு, சுட்ட மண்ணாலான (Terracotta) சிவப்புநிற வளையல், சிவப்புநிறக் கலைப்பொருட்கள், சிவப்புநிறப் பானை என்று சிந்துவெளி அகழாய்வில் வெளிப்பட்ட பெரும்பான்மையான பொருட்கள் சிவப்பு வண்ணத்திலேயே கிடைத்திருப்பது சிவப்பு வண்ணத்தின்மீது சிந்துவெளி மக்களுக்கிருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது. சங்க இலக்கியத்திலும் சிவப்பு, செம்மை எனச் சிவப்போடு தொடர்புடைய சொற்களும் பெயர்களும் மிகுதி. சிவப்பு நிறமுடைய சேயோனே மலைமக்களின் தெய்வம். செம்மை என்பது நிறத்தை மட்டுமல்லாது செங்கோல், செம்மொழி, செந்தமிழ், செம்புலம் என்று நேர்மையை/சிறப்பைக் குறிக்கும் சொல்லாகவும் தமிழ்நாட்டில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு சிந்துவெளி மக்கள் போற்றிய சிவப்பு, திராவிட/தமிழ்ப் பண்பாட்டிலும் நிறைந்திருப்பதை இப்பகுதி ஒப்புமையோடு விளக்குகின்றது.
இந்தப் பகுதியின் உட்பிரிவுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் ”பானைத் தடம்” என்ற பிரிவானது, சிவப்பு, கருப்பு & சிவப்பு வண்ணத்தினாலான பானைகள் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்ததுபோலவே இராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரா போன்ற இடங்களிலும் தமிழ்நாட்டிலும் அகழாய்வில் கிடைத்திருப்பதையும், பானைகள் செய்யும் குயவனைக் ”கலஞ்செய் கோ”, ”வேட்கோ” என்று அரசனுக்கு நிகரான மரியாதையோடும், அறிவில் சிறந்தவனே எனும் பொருளில் ”முதுவாய்க் குயவ” என்றும் விளித்து எழுதப்பட்டிருக்கும் சங்கப் பாடல்களையும் எடுத்துக்காட்டிச் சிந்துவெளியில் தன் பயணத்தைத் தொடங்கிய பானையின் தடம் தமிழ்நாட்டில் நிறைவுறுவதைச் சுவைபடத் தெரிவிக்கின்றது; காலப்போக்கில் குயவர்கள் தம் சிறப்பினையிழந்து சாதியடுக்கில் கீழாக்கப்பட்ட அவலத்தையும் இப்பகுதி பேசத் தவறவில்லை.
10. திராவிட குஜராத் – வேளிர்களின் நடைபாதை:
நன்கு வளர்ச்சியுற்ற ஹரப்பா நாகரிகப் பகுதிகளாகக் கருதப்படுபவை குஜராத்திலுள்ள லோத்தல் (Lothal), டோலாவீரா (Dholavira), பெய்ட்டு துவாரகா (Beyt Dwarka) உள்ளிட்டவை. துவாரகையைத் ’துவரை’ என்று குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 201ஆவது பாடலில் வேளிர்களை அகத்திய முனிவர் துவரையிலிருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்த செய்தியைப் பதிவுசெய்திருக்கின்றார் சங்கப் பெரும்புலவரான கபிலர்.
இடைச்சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவன் ’துவரைக் கோமான்’ என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. அந்தத் துவரைக்கோமான் துவரையிலிருந்து இடம்பெயர்ந்த வேளிர்களுள் ஒருவனாக இருக்க வேண்டும்.
சிந்துவெளி மக்களின் வணிகச் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்தது சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வது. குஜராத்தில் லோத்தல் (Lothal), கோலா டோரா (Gola Dhora) போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளில் சங்குவளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டன. தமிழகத்திலுள்ள கொடுமணல், பொருந்தல் ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகளிலும் சங்குவளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கிடைத்திருக்கின்றன. அமைப்பிலும் இவ்வளையல்கள் ஒன்றுபோல் இருக்கின்றன. இன்றும் குஜராத், இராஜஸ்தான் பகுதிகளில் வாழும் மகளிர் சங்கு வளையல்களை அணிகின்றனர். தமிழகப் பெண்கள்தாம் அவ்வழக்கத்தை விட்டுவிட்டனர்.
ஒட்டகம், அத்திரி எனப்படும் கோவேறு கழுதை, சிங்கம் போன்ற, குஜராத்தில் வாழ்கின்ற, விலங்குகளைப் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் பலவிடங்களில் இடம்பெற்றிருப்பது அந்நிலப்பகுதிகளைத் தமிழ்மக்கள் அறிந்திருப்பதையே புலப்படுத்துகின்றது. சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள பெயர்களான ஓரி, போர், பாழி முதலியவை குஜராத்தில் இன்றும் இடப்பெயர்களாக இருப்பது தமிழ்மக்கள் ஒருகாலத்தில் வாழ்ந்த பகுதியாகவே குஜராத் இருந்திருக்கவேண்டும் என்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
இவ்வாறு குஜராத், ’திராவிட குஜராத்’தாக விளங்குவதை இலக்கியம், அகழாய்வு, இடப்பெயர் போன்ற பல்வகைச் சான்றுகளோடு இப்பகுதி நமக்குத் தெரிவிக்கின்றது.
11. திராவிட மகாராட்டிரா – பொன்படு கொண்கான நன்னன்:
கொண்கானம் கிழானான நன்னன் குறித்த செய்திகளை இருபது சங்கப் பாடல்களில் நாம் காண்கின்றோம். அவன் ஆண்ட பகுதியை ஏழில்குன்றம் என்றும் ’பொன்படு கொண்கானம்’ என்றும் குறிப்பிடுகின்றன சங்க நூல்கள். கொண்கானம் என்பது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோவா, மகாராட்டிரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்கும். மகாராட்டிராவில் சப்தசிருங்கி (ஏழில்குன்றம் எனப்பொருள்), பறம்பி (பறம்பு என்பதன் திரிபு), அரே (அரையம் என்பதன் திரிபு) போன்ற பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. ஏழில்குன்றத்துக் கொற்றவை என்று சங்கப் பாடல்கள் சுட்டும் தெய்வம் இன்று செங்கிருதக் கலப்பால் சப்தசிருங்கி துர்க்கையாகப் பெயர்மாற்றம் பெற்றுள்ளாள்.
இன்றைய மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்கானாவின் சில பகுதிகளை கி.மு.1 முதல் கி.பி.2 வரை ஆண்ட சாதவாகனர்களை ’நூற்றுவர் கன்னர்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றது சிலப்பதிகாரம். இவர்கள், சேரன் செங்குட்டுவனின் நண்பர்களாக இருந்ததையும் இந்நூல் தெரிவிக்கின்றது. ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்ட சாதவாகனர் நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிராகிருதமும் மறுபக்கத்தில் தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருப்பது சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதியில் தமிழும் முதன்மை மொழிகளுள் ஒன்றாக இருந்ததைப் புலப்படுத்துகின்றது. நன்னன், சாதவாகனர் எனும் இரு மன்னர்களும் மகாராட்டிராவின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டிருக்கின்றனர் என்பதை நாம் மேற்கண்ட தரவுகள் மூலம் அறிகின்றோம்.
12. கொங்கு மக்களிடமும் நகராத்தாரிடமும் காணப்படும் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சம் – ஒரு வரலாற்று ஆய்வு:
கொங்குப் பகுதியான, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, காங்கேயத்திலுள்ள காளைகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் காளைகளை ஒத்தவையாகப் பெருந் திமிலோடு (big hump) இருப்பவை. ஈரோடு கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் சூதுபவள மணிகள் (Cornelian Beads), லேபிஸ் லசூலி எனப்படும் நீலவண்ணக் கற்கள் (Lapis lazuli), நீலமாணிக்கம், படிகம் போன்றவை கிடைத்துள்ளன. இவற்றில் சூதுபவளமும், லேபிஸ் லசூலிக் கற்களும் குஜராத் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவையெல்லாம் சிந்துவெளிப் பகுதிகளோடு கொங்கு மக்களுக்கிருந்த தொடர்பைத் தெரிவிப்பனவாய் அமைந்துள்ளன.
நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வணிக வகுப்பைச் சேர்ந்தவர்கள். காரைக்குடிப் பகுதியில் வசித்துவரும் இவர்களின் முன்னோர் நாக நாட்டிலுள்ள கண்டியம் எனும் பகுதியிலிருந்து தமிழகத்தின் காஞ்சிக்கு வந்ததாகவும் அங்கிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்ததாகவும் அங்கு ஆட்சிசெய்த அரசன் செய்த கொடுமைகள் பொறுக்கமுடியாமல் அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்ள, அவ்வேளையில் பாண்டிய அரசன் அவர்களுக்கு அடைக்கலம் தர முன்வரவே, பாண்டி நாட்டிலுள்ள இளையாத்தங்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அம்மக்கள் குடியேறியதாகவும் அவர்களின் வரலாறு குறித்த தொன்மங்கள் தெரிவிக்கின்றன.
நகரத்தார் ஊர்ப்பெயர்களோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான பெயர்கள் இப்போதும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இருக்கின்றன. இவைபோன்ற அருமையான ஆய்வுச்செய்திகள் பல இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
13. சிலம்பின் பயணமும் தாய்த்தெய்வ வழிபாடும் – சிந்து முதல் வைகை வரை:
சிலம்பு என்பது தமிழ்ச் சமூகம் நன்கறிந்த ஓர் அணிகலன். பத்தினித் தெய்வமாகக் கருதப்படும் கண்ணகியின் சிலம்பின் பயணமே சிலப்பதிகாரக் காப்பியமாக மலர்ந்தது. கண்ணகி, அம்மனாகத் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வணங்கப்படுகின்றாள். ஒலித்தல் எனும் பொருளை அடிப்படையாகக் கொண்ட சொல் சிலம்பு. சிந்துவெளிப் பகுதியான மொகஞ்சதாரோவைச் சேர்ந்த பெண்கள் சிலம்புகளை அணிந்திருந்தனர் என்று அறிக்கை அளித்திருக்கின்றார் சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்தியவரான சர் ஜான் மார்ஷல். ஹரப்பா நாகரிகத்திலும் சிலம்பின் பயன்பாடு இருந்தது தெரியவருகின்றது.
தாய்த்தெய்வ வழிபாடு: தாய்த்தெய்வ வழிபாடு சிந்துவெளி மக்களிடம் இருந்திருக்கின்றது. அத்தி மரத்தில் நின்றகோலத்திலிருக்கும் பெண் தெய்வத்தையும், அவள் முன்பாகத் தலையை வெட்டிப் பலியிட வணக்கத்தோடு அமர்ந்திருக்கும் மனிதனையும் கொண்ட சிந்துவெளி முத்திரை இதனை உறுதிப்படுத்துகின்றது.
பத்தினித் தெய்வமான கண்ணகியைப் போலவே தன் முலையை அரிந்துகொண்ட வீரப்பெண்ணை, ’பகுச்சரா மாதா’ எனும் தாய்த்தெய்வமாக வணங்குகின்றனர் குஜராத்தியர்.
குஜராத்தியர் வழிபடும் மற்றொரு தாய்த்தெய்வம் குஜராத்தின் கிர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கங்கையம்மன். மகாராட்டிராவிலும் இந்தக் கங்கையம்மனுக்குக் கோயில்கள் உண்டு. கங்கையம்மன் சிலம்பணிந்தவளாக இக்கோயில்களில் காட்சிதருகின்றாள்.
தாய்த்தெய்வங்களும் சிலம்பும் சிந்துவெளி தொடங்கி குஜராத், மகாராட்டிரா தமிழ்நாடு என்று பயணித்திருப்பது இவற்றுக்கிடையேயுள்ள தொடர்பைக் காட்டுகின்றது.
14. புனிதமரமாய்க் கருதப்படும் வன்னியின் வேர்கள்:
வன்னி மரமானது இராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் காணக் கிடைக்கின்ற மரமாகும். தமிழ்ப் பேரகராதி வன்னியை வன்னியர் எனும் இனத்தாரோடு தொடர்புபடுத்துகின்றது.
வன்னிமரம் தமிழ்நாட்டில் பல சமூகத்தாராலும் புனித மரமாய் வணங்கப்படுவதோடு பல கோயில்களில் தல விருட்சமாகவும் விளங்கி வருகின்றது. மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் தம் அஞ்ஞாத வாசத்தின்போது ஆயுதங்களை ஓர் வன்னி மரத்தின்கீழ் மறைத்துவைத்திருந்து அஞ்ஞாதவாசத்தின் முடிவில் அவற்றை எடுத்துக்கொண்டார்கள்; அதுவரை அம்மரம் அவர்களின் ஆயுதங்களைப் பத்திரமாகப் பாதுகாத்தது என்ற செய்தி சொல்லப்படுகின்றது.
இராஜஸ்தானில் ராணா எனப்படும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சில முக்கியச் சடங்குகள் செய்வதற்கு முன்பாக வன்னிமரத்தைத் தொழும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த உடையார் எனும் அரச வம்சத்தாரும் வன்னியைப் புனிதமாகக் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் குலாலர்கள் என்றழைக்கப்படும் குயவர்கள் வன்னிமரத்தை வழிபடுபவர்களே.
இந்துமதப் புராணங்களிலும் வன்னிமரம் பெண் தெய்வங்களோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது.
சுடுமண்ணாலான வன்னிமரம், வன்னிமரத்தில் அமர்ந்திருக்கும் பெண் உருவம் போன்ற முத்திரைகள் சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை, வன்னிமரமானது சிந்துவெளி மக்கள் தொடங்கித் தமிழ்மக்கள் வரை பெரும்பாலோரால் புனித மரமாகக் கருதப்பட்டமைக்குச் சான்றாகின்றன.
15. விளையாட்டோடு இணைந்த வாழ்க்கைமுறை:
தமிழர் திருநாளோடு இரண்டறக் கலந்தது சல்லிக்கட்டு விளையாட்டு (bull vaulting). மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்களில் நடைபெறும் சல்லிக்கட்டு விளையாட்டுக்களை தமிழ்மக்கள் பெரும் ஆர்வத்தோடு கண்டுகளிப்பது வழக்கம். இவ்விளையாட்டின் தொடக்கத்தை நாம் தேடிச்சென்றால் அது சிந்துவெளி நாகரிகத்தில் சென்று அதுமுடியும். சிந்துவெளி அகழாய்வில் ஜீபு (Zebu bull) எனும் பெருந் திமில் கொண்ட காளையின் முத்திரைகளும், ஏறுதழுவும் விளையாட்டில் காளையால் பந்தாடப்படும் வீரர்களைக் கொண்ட முத்திரைகளும் கிடைத்துள்ளன.
சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் ஏறுதழுவுதல் குறித்த விரிவான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆரியர்களின் ரிக் வேதத்தில் இந்த ஜீபு காளை குறித்த எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் காளைகளுக்கான ஓட்டப் பந்தயம் இன்றும் நடைபெற்று வருகின்றது. இசுலாமபாத்திலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள பிண்டு சுல்தானி (Pind Sultani) என்ற இடம் இப்பந்தயத்திற்குப் பெயர்பெற்றது. தென்கேரளாவில் நன்கு உழுதவயல்களில் இரண்டு காளைகளை, அவற்றை ஓட்டுபவர்கள், மரப்பலகையால் இணைத்து ஓடச்செய்யும் விளையாட்டு (bull surfing game) ஒவ்வோராண்டும், அறுவடைக் காலத்துக்குப்பின் நடைபெறுகின்றது.
16. உருளும் பகடைகள் – பண்டைய மக்களின் பொழுதுபோக்கு:
சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த சுடுமண்ணாலான விளையாட்டுப் பொம்மைகள், விலங்குகளின் உருவங்கள், மண்ணால் செய்யப்பட்ட சிறிய வண்டிகள் ஆகியவை விளையாட்டிலும் – பொழுதுபோக்குகளிலும் அம்மக்களுக்கிருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. ”கிடைத்துள்ள விலங்கு உருவங்களில் குதிரைகள், போருக்கான தேர்கள் முதலியவை காணப்படாமை இம்மக்கள் போரின்மீது ஆர்வம்கொண்ட மக்களல்லர் என்பதைப் புலப்படுத்துகின்றது” என்கிறார் சிந்துவெளிப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட திரு. எர்னஸ்ட் மக்கே (Ernest J. H. Mackay) எனும் தொல்லியல் ஆய்வாளர்.
சுடுமண்ணாலான ஆறு பக்கங்கள் கொண்ட கனச்சதுர வடிவிலான பகடைகள் சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே முதன்முதலில் அறுபக்கக் கனச்சதுரப் பகடைகளைப் பயன்படுத்தியவர்கள் சிந்துவெளி மக்களே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வேதப் பண்பாட்டுக் காலத்தையும் சிந்துவெளியையும் ஒப்பிட்டு ஆய்ந்து தம் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கும் தொல்லியல் ஆய்வாளரான திரு. டி.என். ராய் (T.N. Ray)., வேத காலத்து மக்கள் பயன்படுத்திய பகடைகள் குறித்து அறிய அவர்களின் இலக்கியங்களில் போதிய தரவுகள் கிடைக்கவில்லை; எனினும், அவர்கள் சூதாட்டங்களுக்கு நான்கு பகடைக்காய்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது என்கிறார்.
17. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி – தமிழரின் தொப்புள்கொடி உறவு
ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், கருப்பு & சிவப்பு மற்றும் கருப்புநிற முதுமக்கள் தாழிகள், எலும்புகளின் எச்சங்களோடு, அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றோடு, இரும்பு மற்றும் செம்பிலான பொருட்களும், செங்கல் சூளைகளும், மணிகளில் அணிகள் செய்யும் கொல்லரின் குடியிருப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் எழுத்துப் பொறிப்புகளோடு கூடிய பானையோடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பானையோடுகளின் கழுத்துப்பகுதியின்கீழ் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. சங்க காலச் சமூகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டளவிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதை இந்த ஆய்வுகள் நமக்குத் தெள்ளிதின் புலப்படுத்துகின்றன.
அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட கட்டுமானச் சுவர்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் இவற்றில் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. இக்கட்டுமானங்கள் இத்தனை காலம் அழியாமல் வலுவோடு இருப்பதற்குத் தரமான இக்கட்டுமானப் பொருட்களே காரணம் என்பது தெரியவருகின்றது.
இவ்வாறு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சுவையான தலைப்புகளில் அரிய கருத்துக்களைத் தாங்கிநிற்கும் இந்நூல், தொல்லியலாய்வு (archaeology), இலக்கியம் (literature), பெயராய்வு (onomastics), மொழியியலாய்வு (linguistics), பழைய நிகழ்வுகள் குறித்த நினைவுத் தொகுப்புகள் (corpus of collective memories) ஆகியவற்றின் அடிப்படையிலான ஆதாரங்களோடு நமக்கு அறியத்தருவது, இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் தோன்றி மறைந்த சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை நாம் இந்தியாவின் தென்கோடிப் பகுதியான தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என்பதே.
நூலாசிரியர் திரு. ஆர். பாலகிருஷ்ணனின் வரிகளில் சொல்வதானால் ”சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!”
இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் இதனை வாசித்துப் புரிந்துகொள்வது தமிழ்மக்களுக்குக் கடினமாய் இருக்கலாம் எனக் கருதி இதனை, “ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை” என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன். விரைவில் இந்நூல் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அதுகுறித்த விவரங்களை இக்கட்டுரையிலுள்ள தமிழ் நூலட்டையில் காண்க!
தமிழ்மக்கள் அனைவரும் படித்துப் பயனுற வேண்டிய – பெருமிதப்படவேண்டிய ஆய்வு நூலிது!
*****