பேரா. பெஞ்சமின் லெபோ

வெள்ளம்!

கள்ளமில்லா மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம்! வீடு தோறும் வந்து நிறையும் இன்ப வெள்ளம்! ஊர் தோறும் ஒளி வெள்ளம்! உலகம் எங்கும் உவகை வெள்ளம்! இத்தனை வெள்ளப் பெருக்குக்கும் காரண ஊற்று – அவர் பிறப்பு! அவர்?

‘ஒருமொழி வைத்து’ உலகாண்ட பெரு நிலப் பேரரசர்களும் மன்னாதி மன்னர் யாவரும் மண்ணோடு மண்ணாகிப் போனதை ஊர் அறியும் ; உலகு அறியும்! பார் அறியும் ; வரலாறும் அறியும்! – ஆனால், ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் ஈடு இணையின்றி இன்றும் என்றும் அரசர் அனைவர்க்கும் அரசராக, மன்னர் யாவர்க்கும் மன்னராக, பேரரசர்களுக்கும் பேரரசராகிப்போனவர்!

வானவரும் வந்தடி தொழும் இறைமகன் ஆனவர்! ‘அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’ என முன்னுரைக்கப் பெற்றவர்! அவர்? அவர்தாம் எம்பெருமான் கிறித்து என்னும் இயேசு பிரான்!

அகிலம் முழுவதும் ஆரவாரமாகக் கொண்டாடும் அவர் பிறப்பு – வரலாற்றையே இரு கூறாய்ப் பிரித்தது தனிச் சிறப்பு! விண்ணையும் மண்ணையும் தன்னொரு சொல்லினாலே படைத்த

உருவில்லான் உருவாகி உலகிலொரு மகனுதிப்பக்
கருவிலாக் கருவாகிக் கன்னித்தாய் ஆன’

மரியாளின் திரு வயிற்றில், மாபரனே வெறும் பாமரனாய் அவதரித்த சிறப்புப் பிறப்பு! அந்தப் பிறப்பைச் சுற்றிதான் எத்தனை எத்தனை செய்திகள்!
அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு :

மாடடையும் கொட்டிலிலே மகான் வந்து பிறந்தார் என்றும் தலை அருகே மாடும் கழுதையும் படுத்திருக்கத் தேவ பாலன் மலைக்குகையில் அவதரித்தார் என்றும்…
வந்து பிறந்த ‘விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப் பொருளை’க் கந்தையிலே சுற்றி வைத்துக் கிடத்தினர் என்றும் மக்கள் மனமார நம்புகின்றனர் இன்றும் !

1 மாட்டுக் கொட்டில்

எம்பெருமான் இயேசு பிரானின் வரலாற்றை முதல் முதலாக எழுதியவர் நால்வர் :
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.
இவர்களுள் முதல்வரும் இறுதியானவரும் இறைமகன் இயேசுவின் காலத்தில் வாழ்ந்து அவருடன் நெருங்கிப் பழகியவர்கள். நடுவில் இருக்கும் இருவரும் இயேசுவுக்குப் பின் வாழ்ந்தவர்கள். இவர்களுள், இயேசு பிறப்பைப் பற்றி எழுதியவர்கள்: மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே!

முன்னவர் குறிப்பிடாத நிகழ்சிகளைப் பின்னவர் குறிப்பிடுவார் ; லூக்கா சொல்லாத செய்திகளை மத்தேயு சொல்லிச் செல்வார்.

கண்ணுள் வினைஞராகச் சொல்லென்னும் தூரிகையால் வண்ண ஓவியமாக நிகழ்ச்சிகளைத் துல்லியமாக வரைந்து காட்டுபவர் லூக்கா. இயேசு பிறப்பைப் பற்றி அவர் கூறுகிறார் :

‘ அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்….

தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,

5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.

7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்’. (லூக்காவின் நற்செய்தி : அதிகாரம் 2 ; திருவசனங்கள் :1 -7 ).

உரோமைப் பேரரசின் உச்சியிலே உட்கார்ந்து இருந்தவர் அகுஸ்து சீசர் ; மக்கள் தொகைக் கணக்கெடுக்க ஆணை இட்டவர் அவர் …
வரலாறு வரைந்து காட்டும் உண்மைகள் இவை. இப்படி உள்ளதை உள்ளபடியே எழுதியவர் லூக்கா. பிறந்த குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் மரியா என்றுதான் எழுதி இருக்கிறார் ; இதனை வைத்துக்கொண்டு மாட்டுக் கொட்டில், மாடு, கழுதை, கந்தைதுணி எனக் கதை கட்டி விட்டனர்.

2 ஞானிகள்

இயேசு பிறப்பைப் பற்றிக் குறிப்பிடும் மத்தேயு கூறுகிறார்

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2 ‘ யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ‘ என்றார்கள்….

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்;
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து
பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்’.

பெரிய ஏரோது என அழைக்கப்பட்ட ‘Herod, the great’ வரலற்று மனிதன். அவன் காலத்தில் ஞானியர் அவனைத்தேடி வந்திருக்கக் கூடும்.

இதனைத்தான் மத்தேயு குறிப்பிடுகிறார். வந்தவர் எண்ணிகையையோ பெயர்களையோ அவர் குறிப்பிடவில்லை ; மாறாகக் காணிக்கைகள் மூன்று அவர்கள் கொடுத்ததாகச் சொல்கிறார். இதை வைத்துக்கொண்டு வந்தவர்கள் மூவர் எனக் கதை கட்டிவிட்டனர்.

பிற்காலத்தவர் இன்னும் ஒருபடி மேலே போய், அவர்களுக்கு, கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்று பெயரும் இட்டனர். இவர்களை ‘Apellus, Amerus, Damasius என அழைப்பதும் உண்டாம்.
(காண்க : Peter Comestor’s medieval Historia Scholastica -source: “A Lexicon of Christian Iconography,” by Bruce M. Metzger; Church History, Vol. 45, No. 1 (Mar., 1976), pp. 5-15.).

3 இயேசு பிறப்பு விழா :

எம்பெருமான் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடும்படி பைபிள் கூறவில்லை! அவரும் அதனைச் சொல்லவில்லை. லூக்கா, மத்தேயு எழுதியபடிப் பார்த்தால்,யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊரில் இயேசு பிறந்தார் ; அவர் பிறப்பின் போது உரோமைப் பேரரசின் அரியணையில் வீற்றிருந்தவன் அகுஸ்து சீசர் ; யூதேய நாட்டில் உரோமர்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்தியவன் பெரிய ஏரோது. மற்றபடி இயேசு பிறந்த நாளோ ஆண்டோ எங்கும் குறிக்கப்படவில்லை. இத்தகைய வரலாற்றுக் குறிப்புகளை வைத்துக்கொண்டு ஆராய்ந்தார், ‘ Dionysius Exiguus’ என்னும் கத்தோலிக்கத் துறவி, ஆறாம் நூற்றாண்டில். இந்தக் கணக்குகளின் அடிப்படையில், உரோமை நாள் காட்டி 753 -ஆம் ஆண்டு கிறித்துப் பிறப்பு நிகழ்ந்தது என்று நிறுவினார்.
உரோம் நிறுவப்பட்ட ஆண்டை முதல் ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படுவது உரோமை நாள் காட்டி ஆகும்.

 

உலக வரலாற்றை இரு கூறாக – கிறித்துவுக்கு முன் (கி.மு), கிறித்துவுக்குப் பின் (கி.பி) – என இவர் பிரித்துப் புது நாள் காட்டிக்கு வழி வகுத்து இருந்தாலும்ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட் (St. Bede) என்னும் ஆங்கிலத் துறவியே இதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தவர். (காண்க : http://historymedren.about.com/od/aterms/g/ad.htm ).

4 திசம்பர்த் திங்கள் 25 -ஆம் நாள் கொண்டாடப் படுவது ஏன்?

இயேசு பிறந்த காலத்தைக் குறிக்க லூக்காவின் குறிப்பு ஒன்று உதவுகிறது :

‘ அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.’ (லூக்கா 2 :8 ).
அக்காலத்தில், வயல் வெளியில், இரவெல்லாம் தங்குவது மழைக் காலத்திலோ குளிர் காலத்திலோ இயலாது. எனவே லூக்கா கருத்துப்படி, இயேசு பிறப்பு, வெயில் காலத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆகவே, இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குளிர்கால நாள் (திசம்பர் மாதம்) இயேசுவின் பிறப்பு நாளாக இருக்கவே முடியாது. அப்படி இருக்க திசம்பர்த் திங்கள் 25 -ஆம் நாள் கொண்டாடப் படுவது ஏன்?

மார்ச்சு மாதம் 25 -ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25 -இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறித்துப் பிறப்புவிழா கொண்டாடலாயினர். முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறித்துப் பிறப்புவிழா கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. நான்காம் நூற்றாண்டில் தான் கிறித்துப் பிறப்புவிழா தலை காட்டத் தொடங்கியது. ஆனால் இந்த விழாவுக்கான மூலங்கள் , வேர்கள் கிறித்துப் பிறப்புக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய விழாக்களில் உள்ளன.

பழங்காலப் பாரசீகத்தில் (இக்கால ஈரான்) ‘மித்ரா’ (‘Mithra’ ) என்னும் இந்தோ-இரானிய கடவுளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒளியின் கடவுளாக வணங்கப்பட்டவர் இவர்! சூரியன் இவரின் சின்னம். கடந்த 2500 ஆண்டுகளாகச் சூரியன் சின்னம் ஈரானியக் கொடியில் இடம் பெற்றுள்ளது. இவரின் பிறந்த நாளைத் திசம்பர்த் திங்கள் 25 -ஆம் நாள் கொண்டாடி வந்தனர். இவருக்கும் இயேசு கிறித்துவுக்கும் ஏராளமான ஒப்புமைகள் உண்டு எனபது ஆய்வாளர்கள் கருத்து .
(காண்க :http://www.webnietzsche.fr/mythes.htm).

அலெக்சாண்டரின் கிரேக்கப் படை வீரர்கள் பாரசீகத்தை வென்ற பின் இத்தெய்வ வழிபாட்டை ஐரோப்பவுக்குக் கொண்டுவந்தனர். பின்னர் கி.பி நான்காம் நூற்றாண்டில் கிளை விட்டுப் படரத் தொடங்கிய கிறித்துவ மதத்துக்குச் சவால் விட்ட பெரிய மதமாக ‘மித்ரா’ மதம் விளங்கியது.

ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் பரவிய இம்மதத்தின் மையப் புள்ளியாக விளங்கிய கடவுளை ‘மித்ரா ‘ என்னும் ‘வெற்றி வீரச் சூரியக் கடவுள்’ ( ‘Deus Sol Invictus Mithras ‘) எனவும் அழைத்தனர். இத்தெய்வ வழிபாட்டைத் தங்கள் சனிக்கோள் (Saturn) மேல் ஏற்றிய உரோமர்கள் இதற்கான விழாவுக்குச் சனிக்கோள் விழா (saturnalia ) என்று பெயர் வைத்தனர். கி.மு 45 -இல் ஜூலியஸ் சீசர் தன் பெயர் கொண்ட நாள் காட்டியை அறிமுகபடுத்தியபோது, பகலும் இரவும் சமமாக வரும் நாளாக டிசம்பர் 25 அமைந்தது. (இப்போது இது டிசம்பர் 21 -ஆம் தேதி வரும்). இத் தேதியை உரோமர்கள் சனிக்கோள் விழா நாளாகக் கொண்டாடினர். இவ்விழா நாள்களில் அவர்கள் வீடுகளை மாலைகளால் அலங்கரித்தனர் ; பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொண்டனர் ; குடியும் கூத்துமாகக் கொண்டாடினர். கி.பி நான்காம் நூற்றாண்டில், கிறித்துவ மதம் இவ்விழாவைக் கிறித்துவ மயமாக்கிக்கொண்டது. ‘தானே உலகின் ஓளி’ எனக் கூறிய ‘கிறித்து’, ‘மித்ரா’ இடத்தில் வைக்கப்பட்டார்.

இப்படியாகப் பிறந்ததுதான் கிறித்துப் பிறப்பு விழா. இன்று உலகளாவிய வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏழை முதல் பணக்காரர் வரை, பெரு வணிக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய வெளி ஆடம்பரத்தில் கிறித்து பிறப்பின் முக்கியத்துவம் மழுங்கிவிடுகிறது. உண்மையில் கூறப் போனால் கிறித்துப் பிறப்பு விழாவில் கிறித்துதான் இருப்பதில்லை. இதனை என் கதை ஒன்றில் தெளிவாக எடுத்து கூறி இருக்கிறேன்!
(காண்க: கிறிஸ்து பிறப்பு விழாவும் மைசூர் ரசமும் :http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=805&Itemid=60).

5 கிறித்துப் பிறப்பு விழாவின் குடில் :

இன்று உலகம் எங்கும் கொண்டாடப்படும் பெரு விழாவான கிறித்துப் பிறப்பு விழாவின் சிறப்பு அம்சம் : குடில். மலைக் குகை, மாட்டுக் கொட்டில், அன்னை மரியாள், சூசையப்பர், குழந்தை இயேசு சுரூபங்கள், இடையர்கள், ஞானியர் மூவர், ஆடு, மாடு, கழுதை …பொம்மைகள் … பிற அலங்காரப் பொருள்கள்… இக்குடிலில் இடம் பெறும். குடில் சோடிக்கும் வழக்கம் எப்படிப் பிறந்தது?

பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டு அசிசி என்னும் நகரில் வாழ்ந்த துறவி அருளாளர் புனித பிரான்சிஸ். விலங்கினங்களும் பறவை இனங்களும் இறைவன் படைப்பே ; அவற்றிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் அவர். சுருக்கமாக் கூறப் போனால் அக்காலத்து வள்ளலார் அவர் .

அசிசி நகர் அருகில் உள்ளது கிரேச்சியோ (‘Greccio ‘) காடு. அங்கேதான் உலகின் முதல் குடில் – உயிர் உள்ள குடில் – 1293 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் அனைவரும் போற்றிய, புனித வாழ்வு வாழ்ந்து வந்த மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜான் (Messier Giovanni Velitta). அவருடைய நண்பர்தாம் பிரான்சிஸ் அசிசியார் ; கிறித்துப் பிறப்பு விழாவுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தார் அசிசியார். பெத்தேலகேமில் நடைபெற்ற கிறித்துப் பிறப்பு நிகழ்ச்சியை உயிருள்ள விதத்தில் நடத்திக் காட்ட என்ன என்ன செய்யலாம் என்று ஜானுக்கு விளக்கினார். அவர். ஜானும் அவர் சொல்படி எல்லாம் செய்து குடிலை அமைத்து முடித்தார். அந்த நாளும் வந்தது. உயிர் உள்ள மனிதர்கள், குழந்தை… உண்மையாகவே அக்குடிலில் இடம் பெற்றனர் ; ஆடுகள் , மாடு, கழுதை… அங்கே நிறுத்தப் பெற்றன.

அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள், பலவேறு இடங்களில் இருந்து வந்த துறவிகள்… என அனைவரும் அங்கே ஒன்று கூடினர். வத்திகள், ஓளி விளக்குகள்…என அந்த இடமே தேவ லோகம் போல விளங்கியது. சுருங்கச் சொன்னால், இயேசு பிறந்த பெத்லகேமாகவே மாறியது. புனித பிரான்சிஸ் அசிசியார், இறைமகன் பிறந்த பகுதியைக் கூறும் நற்செய்தியை இனிமையாகப் பாடினார். பின் அருமையான மறை உரை நிகழ்த்தினார். பிறகு அந்தக் குடிலுக்குச் சென்று கைகளை விரித்து மனமுருகச் செபித்தார்.

என்ன வியப்பு …அந்தக் குடிலில் இயேசு பாலன் பிரசன்னமானாராம் ; குடில் முழுக்க தெய்வீக ஓளி சூழ்ந்ததாம்!

இப்படியாகத்தான், குடில் சோடிக்கும் வழக்கம் வந்தது என்பர். இன்றும் ஐரோப்பிய நாடுகளில் உயிர் உள்ள குடில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றைக் கண்டு மகிழ மக்கள் பெரும் அளவில் கூடுவர். இந்தியாவில், சுரூபங்கள், பொம்மைகளை வைத்தே குடில் சோடிக்கின்றனர் ; வண்ண வண்ண விளக்குகளால் குடிலை அலங்கரிப்பர். இக்காலத்தில், உலகெங்கும் உள்ள பெரிய நகரங்களில் தெருக்கள், கடைகள், வீதிகள்…எல்லாம் ஓளி வெள்ளத்தில் மிதக்கும். அவற்றைப் பார்ப்பதே கண் கொள்ளாக் காட்சியாகும். இப்பழக்கம் இப்போது இந்தியாவிலும் பெருகி உள்ளது.

6 கிறித்துமசு மரம் :

கிறித்துமசு மரம் வைக்கும் பழக்கம் தோன்றியது செருமானிய நாட்டில். அவர்கள் இதனை உரோமர்களிட்ம் இருந்து கற்றுக்கொண்டனர் ; பாபிலோனிய எகிப்திய நாடுகளில் இருந்து உரோமர்களுக்கு இது வந்தது.

 

(காண்க : Walsh, Curiosities of Popular Customs, p. 242). ஆங்கிலத்தில் ‘fir’ என்றும் பிரஞ்சில் ‘sapin’ என்றும் அழைக்கபடும் மரத்தைத் தமிழில் ஊசி இலை மரம் என அழைக்கலாம். இம்மரத்தின் இலைகள் என்றும் பசுமையாகவே இருக்கும் ; இவற்றின் இலைகள் உதிர்ந்தாலும் மீண்டும் மீண்டும் துளிர்க்கும். ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள மரங்கள், இலை உதிர் காலத்தில் மொட்டையாகி நெட்டை நெடு மரங்களாக நிற்கும். ஆனால், இந்த ஊசி இலை மரம் மட்டும் பச்சைப் பசேல் என்று அடர்த்தியான இலைகளோடு துளிர்த்தும் தளிர்த்தும் வாழும். இறைமகன் இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்பது கிறித்துவ விசுவாசம். எனவே, இவரைக் குறிக்கும் முகமாக இம்மரம் விளங்குகிறது. ஆகவே அமெரிக்க, ஐரோப்பிய… நாடுகளில் இம்மரக் கன்றுகளை வீடுகளில் வைத்துச் சோடிப்பர். குடில் அருகே இம்மரத்தை வைப்பவர்களும் உண்டு. குடில் வைக்காதவர்கள் கூட இம்மரத்தை மட்டுமே இல்லத்தில் நடு நாயகமாக வைப்பர். வண்ண வண்ண மின் விளக்குகள், மாலைகள், அலங்கரிப்போடு கூடிய சிறு சிறு குண்டுகள் (‘chrsitmas balls’), சிறு பொம்மைகள்… பளபளக்கும் சரிகைச் சரங்கள்… இம்மரத்தை அழகு செய்யும். இரவுகளில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளாய்க் கண் சிமிடடும் மின்விளக்குகளோடு இதைக் காண மிக அழகாக இருக்கும். இதன் அடியில் (கிறிஸ்மஸ் ) பரிசுகளை வைத்திருப்பார்கள். விழா நாளன்று (திசம்பர்த் திங்கள் 25 -ஆம் தேதி) பரிசுப் பொருள்களைப் பிரிப்பார்கள். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் கூட மிக மகிழ்ச்சியான தருணம் இது . இத்தருணத்துக்காகவே வணிகர்கள் பல கோடி செலவு செய்து வணிகம் செய்வர் ; மக்களும் பலப்பல கோடி செலவு செய்து பொருள்களை வாங்கிக் குவிப்பார். விலை தள்ளுபடி விற்பனை வேறு உண்டு. இப்படியாகக் கிறித்துப் பிறப்பு விழா உலகளாவிய வணிகப் பெருக்கத்துக்கு வழி கோலுகிறது. கடந்த ஆண்டு அபு தாபி அரண்மனையில் கிறித்துமசு மரம் வைத்தார்களாம். விலை மலிவுதான் : வெறும் 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள்தான்! இந்த விலைக்குக் காரணம் அதில் தொங்கவிடப்பட்டிருந்த அட்டிகைகள், நகைகள் : அவற்றில் வைரம், வைடூர்யம், மரகதம் ….போன்ற விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டிருந்தனவாம்! அடேங்கப்பா எனப் பெரு மூச்சு விடுவதற்குள் இன்னொரு செய்தி – தங்கம் விற்கும் விலையில், தங்கமான இன்னொரு செய்தி- டோக்கியோவில் ‘Ginza Tanaka ‘ என்றொரு நகைக்கடை. அதில் தங்கத்தினால் ஆன கிறித்துமசு மரம் இந்த ஆண்டு வைத்திருக்கிறார்கள். 8.2 டி உயரம் உள்ள இதன் மதிப்பு : 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ! இதனை அலங்கரிக்கும் நூறு ரிப்பன்கள், ஆர்கிட் மலர்கள், இதய வடிவ பொருள்கள்… என எல்லாமே தங்கம்தானாம். மேற்கொண்டு விவரங்களுக்கு

http://www.cbsnews.com/8301-31749_162-57332889-10391698/$2m-golden-christmas-tree-on-display-in-tokyo/’ காண்க.

7 கிறித்துமசு தாத்தா :

துருக்கி என இப்போது அழைக்கப்படும் நாட்டில் ‘Myra’ என்னும் இடத்தில் கி.பி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆயர் நிக்கோலா (Bioshop St Nicholas). இவரின் பெற்றோர் பெரும பணக்காரர்கள். அவர்கள் தனக்கு விட்டுச் சென்ற செல்வத்தை நிக்கோலா, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் ஏழைகளுக்கு வாரி வழங்கினார். இவரைப் பற்றிச் செவி வழிக் கதைகள் பல உண்டு. 16 – ஆம் நூற்றாண்டில் ஆங்கில மக்கள் இவரை Father Christmas -ஆக மாற்றி உலவவிட்டனர். பிரான்சு நாட்டில் ‘père noël’ என இவர் பெயர் பெற்றார் ; செருமனி நாட்டில் இவருக்குப் பெயர் : ”Christ Kind’ ; அமெரிக்க ஒன்றிப்புத் (USA) தொடக்கக் காலங்களில், இவரை ‘Kris Kringle’ என்று அழைத்தனர். அக்காலத்தில் அமெரிக்க ஒன்றியத்தில் குடியேறிய டச்சுக்காரர்கள், ஆயர் நிக்கோலா பற்றிய கதைகளைத் தம்முடன் கொண்டு சென்று ‘Kris Kringle’ என்னும் பெயரைத் தம் மொழிக்கு ஏற்ப ‘Sinterklaas’ என்று மாற்றி வழங்கினர். அதுவே நாளடைவில் ”Santa Claus’ என மருவிற்று. தமிழில் இவரைக் கிறித்துமசு தாத்தா என்பர் ; பிரஞ்சு மொழி பழக்கத்தில் உள்ள புதுச்சேரிப் பக்கங்களில் இவரை ‘நோயேல் தாத்தா’ என அழைப்பர். இவர் வட துருவத்தில் வசிப்பதாகவும் கிறித்துப் பிறப்பு விழாவின் போது உலகு எங்கும் சென்று குழந்தைகளுக்குப் பரிகள் அளிப்பதாகவும் பல வகைக் கதைகள் முளைத்தன.உண்மைய்லேயே இவர் இருப்பதாக நம்பும் குழந்தைகள் மிக அதிகம். அவர்கள் இவருக்குக் கடிதங்கள் எழுதித் தமக்கு வேண்டிய விளையாட்டுப் பொருள்களைக் கேட்கும் வழக்கமும் உண்டு. அவற்றை நிறைவேற்றும் பெற்றோரும் ‘கிறித்துமசு தாத்தா ‘ கொண்டு வந்த பரிசு எனத் தம் பிள்ளைகளிடம் கூறிவிடுவர். பிள்ளைகளும் மகிழ்வர். எனவே ‘கிறித்துமசு தாத்தா’ பரிசு தந்து மகிழ்ச்சி தருகிறார் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு.

 

8 கிறித்துமசு சின்னங்கள் :

கிறித்துப் பிறப்பு விழாவைச் சிறப்பிக்கும் பல்வேறு சின்னங்கள், பொருள்கள் ஏராளமாக உள்ளன : வான தூதர்கள், வருகைக் கால மலர் வளையம் (advent wreath ), பசிய இலைகளுடன் கூடிய சிவப்புப் பெர்ரிப் பழங்கள், விண்மீன், வெண்கல மணிகள் (bells), விதம் விதமான வத்திகள், மார்கழி மாதம் நம் ஊரில் பாடப் பாடும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற கிறித்துமசு பஜனைப் பாடல்கள் (Christmas carolls), கிறித்துமசு உணவு வகைகள் (இந்தச் சிறப்பு உணவை ‘repas de noël’ என்றே பிரஞ்சுக்காரர்கள் அழைப்பார்கள்!), ப்ளம் கேக், கிறித்துமசு கேக் …இவை யாவும் கிறித்துமசு விழாவைச் சிறப்பிக்கப் பயன்படுவன. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது ஒன்று உண்டு. அதனைப் பிரஞ்சில் ‘bûche’ என்பர் : ஆங்கிலத்தில் ‘log’ எனலாம். இதன் பொருள் மரத் துண்டு. மிக முற்காலத்தில், குளிர் கால விருந்துக்கு வருவோர் கொண்டு வரும் பரிசுகளில் இந்த மரத் துண்டுகள் கண்டிப்பாக இடம் பெறும். குளிருக்கு இதம் ஊட்டும் கணப்புக்கு இவை பயன் படும். அதன் நினைவாக இன்றும் மரத் துண்டு வடிவில் கேக், ஐஸ் க்ரீம்…முதலியன தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்தப் பழக்கம் நம் இந்தியாவில் இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இவற்றைக் காணலாம். இவை போல இன்னும் பலப்பல செய்திகள் உண்டு. நீளம் கருதி அவற்றை இங்கே கொடுக்க இயலவில்லை.

சுருங்கச் சொன்னால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெத்லகேம் சிற்றூரில் தோன்றிய ‘ஓளி’ உலகெலாம் படர்ந்து பேரொளியாகிச் சுடர் விடுவதைக் கிறித்துமசு விழா உணர்த்துகிறது ; நன் மனத்தோர்க்கு அமைதி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, ஏழை எளியவர்களுக்கு நம்பிக்கை, செல்வர்க்கு ஈகைத் தன்மை, வணிகர்க்கு நிறைந்த இலாபம்… என ஒவ்வொருவருக்கும் ஒவொரு பரிசு தருகின்ற விழாவாக இவ்விழா விளங்குகிறது. இவ்விழாக் காலத்தில் இறையருள் நம் அனைவர் மீதும் நிறைவாகப் பொழிவதாக!

அனைவர்க்கும் இனிய கிறித்துமசு நல் வாழ்த்துகள்.

-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சில் இருந்து.

 

 

படங்களுக்கு நன்றி : http://www.storiesnow.com/jesusbirth 

http://news.holidash.com/2008/12/09/christmas-in-america/

 http://www.turnbacktogod.com/jesus-christ-wallpaper-set-17-infant-jesus-born/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கிறித்துப் பிறப்பு விழா!

  1. கிறிஸ்துமஸ் பற்றிய விரிவான செய்திகள் நன்றாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *