நாகேஸ்வரி அண்ணாமலை

பூமி உருண்டையாக இருப்பதால் சூரியன் பூமியின் எந்தப் பாகத்தில் முதலில் உதிக்கிறது என்ற சர்ச்சை எப்போதாவது எழுந்ததா என்று தெரியவில்லை.  ஆனால் ஜப்பான் போன்ற நாடுகளில்தான் முதலில் சூரியன் உதிப்பதாக இப்போது எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.  ஜப்பான் என்பதற்கு அவர்கள் மொழியில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெயர். 1884-இல் முதல் முதலாக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பசிபிக் கடலில் அனைத்துலகக் காலக்கோடு, என்ற கற்பனையான ஒரு கோட்டை உருவாக்கினார்கள்.  அது ஒரு நேர் கோடாக இல்லாமல் பசிபிக் கடலில் உள்ள தீவுகளின் வசதிகளுக்கேற்றவாறு வளைந்து வளைந்து செல்லும் ஒரு கோடாக அமைக்கப்பட்டது.  இந்தக் கோடு இருக்கும் பகுதியில் உள்ள நாடுகளில்தான் சூரியன் முதலில் உதிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அங்கிருந்து மேற்கே செல்லச் செல்ல நேரம் குறைந்து கொண்டு போவதாகத் தீர்மானித்தனர்.

இந்தக் கற்பனைக் கோட்டிற்கு அருகில் இருக்கும் பல தீவுகளில் சமோவாத் தீவும் (Samoa islands) ஒன்று.  இது தென் பசிபிக் கடலில் நியுசிலாந்திற்கும் ஹவாய்த் தீவிற்கும் இடையில் இருக்கிறது.  பதினெட்டாம் நூற்றாண்டில் பல பசிபிக் தீவுகளை ஐரோப்பியர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.  அவர்களுக்குள் நடந்த சண்டை எல்லாம் முடிந்து கடைசியாகச் சமோவாத் தீவு அமெரிக்காவின் அதிகாரத்திற்கு வந்தது.  இந்த நாட்டோடு வணிகத் தொடர்புகள் வைத்துக் கொள்ளத் தங்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு 1892-இல் சமோவாவிற்குக் கிழக்கே இருந்த இந்தக் கற்பனைக் கோட்டை அமெரிக்கா மேற்கே தள்ளி வைத்ததால் சமோவாத் தீவின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.  அதன் விளைவாக நியுசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முன்பே சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமோவா சூரிய உதயத்தைக் கடைசியாகப் பார்த்தது.  அதாவது சமோவாவில் வெள்ளிக்கிழமை சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பே ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சனிக்கிழமை ஆகி விடும்.  சமோவாத் தீவில் ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த நாட்டு மக்கள் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்தால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் திங்கள் கிழமை ஆரம்பித்து அங்குள்ள மக்கள் தங்கள் வேலையைத் தொடங்கி விடுவார்கள்.  இதனால் சமோவா நாட்டிற்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் சீனா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுடனும் வணிகம் செய்ய வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்து விட்டன.  இந்தக் குறையை நிவர்த்தி செய்யச் சமோவா நாட்டுப் பிரதமர் ஒரு யுக்தி செய்தார்.  தங்கள் நாட்டிற்கும் அனைத்துலகக் காலக் கோட்டிற்கும் உள்ள தொடர்பை மாற்றி அமைத்தார்.

அமெரிக்காவோடு இந்தத் தீவின் வர்த்தகம் அண்மைக் காலத்தில் குறைந்து விட்டது; ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளோடும், ஆசிய நாடுகளான சீனா, சிங்கப்பூர் முதலிய நாடுகளோடும் தான் வர்த்தகம் கூடியிருக்கிறது.  அதற்குத் தகுந்தவாறு 119 ஆண்டுகளுக்குப் பிறகுச் சமோவா நேரத்தை மாற்றியிருக்கிறது.  இப்படி மாற்றிய பிறகு சமோவா ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரிய உதயத்தைப் பார்க்கிறது.  ஆசிய நாடுகள் விழித்துக் கொள்வதற்கு முன்பே சமோவா விழித்துக் கொள்வதால் திங்கள் முதல் வெள்ளி வரை அந்த நாடுகளோடு வணிகம் செய்ய முடிகிறது. 

ஆனால் இதற்கு அவர்கள் கொடுத்த விலை என்ன தெரியுமா?  2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதியை இழந்து விட்டார்கள்.  டிசம்பர் 29-ஆம் தேதி – அதாவது வியாழக்கிழமை – இரவு 11:59 ஆக இருந்த நேரம் இரண்டு நிமிடங்கள் கழித்து டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி – அதாவது சனிக்கிழமை – காலை 12:01 ஆனது.  இடையில் உள்ள வெள்ளிக்கிழமையை – டிசம்பர் 30-ஆம் தேதியை – அவர்கள் இழந்து விட்டார்கள்.  ஆனால் அந்த நாட்டு மக்கள் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை.  சனிக்கிழமை பிறந்தவுடன் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.  நடு இரவில் வீதியில் வாகனங்களை ஓட்டிக் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டு உற்சாகமாக இருந்தனர்.  டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாட வேண்டியவர்களுக்குத்தான் அந்த நாள் கிட்டாமல் போயிற்று.  அரசு வெள்ளிக்கிழமை யாரும் வேலை செய்யா விட்டாலும் அந்த நாளுக்குரியச் சம்பளத்தை எல்லோருக்கும் கொடுத்து விட்டது.  சூரிய உதயத்தைத் தாங்கள்தான் முதலில் பார்ப்பதாகச் சமோவா மக்கள் மார் தட்டிக் கொள்ளலாம்.

எந்த நாடும், தான் விருப்பப்பட்டால் நேரத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.  அப்படி மாற்றிய பிறகு உலக நேரக் கண்காணிப்பாளர்களுக்கும் (International Meridian Conference) உலக, தேச வரைபடங்கள் தயாரிப்பவர்களுக்கும் தெரியப் படுத்த வேண்டும், அவ்வளவே! 

இந்தத் தீவின் ஜனத்தொகை 1,86,000.  சமோவாத் தீவிலிருந்து போன சமோவா வம்சா வழியினர் 1,30,000 பேர் இப்போது நியுசிலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களில் பலர் நியுசிலாந்திலிருந்து பழைய கார்களைச் சமோவாவிற்குத் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள்.  ஆஸ்திரேலியாவிலிருந்தும் பழைய கார்கள் சமோவாவிற்கு வருகின்றன.  இந்தக் கார்களை ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் பொருட்டுச் சமோவா அரசு, வீதிகளில் அது வரை அமெரிக்காவில் போல் வலப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த கார்களை ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை ஆறு மணியிலிருந்து இடப் பக்கமாக ஓட்ட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.  அதன் பிறகு எல்லா அலுவலகங்களுக்கும் புதுப் பழக்கத்திற்குப் பழகிக் கொள்ள இரண்டு நாள் விடுமுறை கொடுத்தது.  சாலை விதி மாற்றம் குடித்து விட்டுக் கார் ஓட்டுபவர்களை இன்னும் அதிகமாகப் பாதிக்கும் என்பதால் அதையொட்டி மூன்று நாட்களுக்கு மதுபானம் விற்பதும் தடை செய்யப்பட்டது.

அமெரிக்கா பூமத்திய ரேகையிலிருந்து மிகவும் தள்ளி இருப்பதால் இங்குக் குளிர் காலத்திற்கும் வெயில் காலத்திற்கும் சூரிய உதயத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் நிறைய இடைவெளி உண்டு.  சிகாகோவை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மிகக் குறுகிய நாளான டிசம்பர் 21-ஆம் தேதி, சிகாகோவில் சூரிய உதயம் காலை 7:20-க்கு.  மிக நீண்ட நாளான ஜூன் 21-ஆம் தேதி சூரிய உதயம் காலை 4:15-க்கு.  இரண்டு சூரிய உதயத்திற்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேர வித்தியாசம்.  அதே மாதிரி டிசம்பர் 21-ஆம் தேதி சூரிய அஸ்தமனம் 4:20-க்கு.  ஜூன் 21-ஆம் தேதி சூரிய அஸ்தமனம் 7:30-க்கு.  இந்த இரண்டு நேரங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மூன்று மணிக்கும் மேல்.  ஒரு சில மாநிலங்கள் தவிர அமெரிக்காவில் பல மாநிலங்கள் பகல் நேரத்தைக் கூட்டும் (Daylight saving time) கால மாற்றத்தைச் செய்கின்றன.  மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறன்று இரவு ஒரு மணிக்கு – அல்லது சனி-ஞாயிறு இரவு என்றும் சொல்லலாம், ஒரு மணி நேரம் தள்ளி வைத்து விடுகிறார்கள்.  இரவு ஒரு மணியானது இரண்டு மணி ஆகி விடுகிறது.  நவம்பர் மாதம் முதல் ஞாயிறன்று அதே மாதிரி சனி-ஞாயிறு இரவில் இரண்டு மணியை ஒரு மணியாக மாற்றி விடுகிறார்கள்.  இப்படி மார்ச்சில் தள்ளி வைத்த பிறகுச் சூரிய உதயம் செயற்கையாக ஒரு மணி நேரம் தாமதமாக்கப் படுகிறது.  சூரிய அஸ்தமனமும் ஒரு மணி நேரம் தள்ளப் படுகிறது.  அதனால் மக்கள் அதிக நேரம் சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க முடிகிறது.  நவம்பர் மாதம் முதல் ஞாயிறன்று உண்மையான நேரத்திற்கு நேரத்தைத் தள்ளி வைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையான நேரம் என்றதும் எது உண்மையான நேரம் என்ற கேள்வி எழுகிறது.  சமோவாவில் உலகக் காலக் கோட்டிற்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய் நேரத்தைத் தள்ளி வைத்துக் கொள்வதும் அமெரிக்காவில் வசந்த காலத்திலும் (மார்ச்சில்) இலையுதிர் காலத்திலும் (நவம்பரில்) நேரத்தை மாற்றி வைத்துக் கொள்ளுவதும் மனிதர்களாகச் செய்து கொண்ட மாற்றங்கள். 

இந்தியாவில் அருணாச்சல் பிரதேசமும், அந்தமான் தீவுகளும் இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கு மிகவும் கிழக்கே இருப்பதால் அந்த இரண்டு இடங்களிலும் சூரிய உதயமும் மறைவும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே இருக்கும்.  ஒரு நண்பர் அந்தமானில் இருக்கும் போது ‘இங்குச் சூரியன் சீக்கிரம் உதிக்கிறது’ என்றார்.  சூரியன் சீக்கிரம் உதிக்கவில்லை; மனிதர்களாகிய நாம் வரையறுக்கும் காலக் கோட்டால் சூரியன் சீக்கிரம் உதிப்பது போலத் தோன்றுகிறது.  தொடர்பு கொள்வது எளிதாக இருப்பதற்காக இந்தியா முழுவதற்கும் ஒரே காலம் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு முடிவு செய்ததால் இந்த இடங்களில் சூரிய உதயமும் மறைவும் மற்ற இடங்களை விடச் சீக்கிரம் நடப்பது போல் தோற்றம் அளிக்கிறது. 

காலத்தை நிர்ணயிப்பது மனிதன் தன் சௌகரியத்திற்காகச் செய்து கொண்ட ஒன்றுதான்.

சமோவாத் தீவுகள் படத்திற்கு நன்றி:http://geography.howstuffworks.com/oceania-and-australia/geography-of-american-samoa.htm

காலக் கோட்டின் படத்திற்கு நன்றி:http://www.worldatlas.com/aatlas/infopage/dateline.htm

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அனைத்துலகக் காலக்கோடு

 1. என்னுள் வெகு “காலமாக” – தேங்கி நின்றுகொண்டிருந்த – இந்த காலத்  தகவல்,
  இதனை பிறர் அறிந்து கொள்ளுமாறு – எழுதிவிடவேண்டும் – என்கிற நினைப்பு அடிக்கடி வரும் –
  காலம் – இன்மையால் – அத்துடிப்பு – காலாவதியாகிப் போய்விடும் !
  என் உள்ளக்கிடகையை  “டெலிபதி” வழியாக அறிந்தவர் போல் அழகுற எழுதியிருக்கிறீர்கள். இந்த சேதி – இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை!
  இந்தியாவில் இன்று புறப்பட்டு அமெரிக்காவிற்கு நேற்று வரும் அதிசயத்தை – எவ்வாறு வருணிப்பது?
  காலம் என்கிற ஒன்று – மனிதர்களின் கைப்பாவையாய் மாறிப் போனதை வசதி என்பதா வசதிக்குறைவு என்பதா என்று தெளிவு படுத்த முடியாத சமயமிது – 
  ஊர் எதுவெனச் சொல்லு – நேரம்  எதுஎனப் பாரு   – என்பதே – இக்கால மொழியாய் மாறிப்போன விந்தை!
  இது பயணம் தொடங்கி – வணிகம் வரைக்கும் எங்கும் எப்போதும் வியாபிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக – பலசமயங்களில் – இக்கட்டான இம்சையாக – அமைந்து போவதை – அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிவர். 

  இத்தருணத்தில் என்னுள் நினைவுக்கு வரும் – என்றோ நான் எழுதிய கவிதை “குளிரில் குறுகிய காலக் கம்பி” 

  குளிரில் குறுகிய காலக் கம்பி
   
  சில்லிட்டுப்போன ராச்சாலையில் தடங்கல் வந்தது 
  கடிதே செல்லும் காலச் சக்கரம் மடிந்து நின்றது
  காலன் வீழ்ந்தான் சக்கரத்தடியில்! அவன் மூர்ச்சித்த
  சமயம் கடியார முட்கள் முருகித் திரும்பி நகரலாயின 
  இதுதான் சமயமென – ஒரு மணி நேரம்
  விடுப்பெடுத்துக் கழன்று கொண்டது!

  கால நீட்டிப்பு இரவில்!!
  தாமசம் வருமென முன்னமே தெரிந்ததால்
  வசதி வலியத் தேடி வந்தது! 
  பிடியில் முயங்கிய காதலி!!
  விடுவனோ காதலன்?
  முதலாம் ஜாமம் – உல்லாசம் கூடவே ஒருமணி நேரம்!!

  சனி இரவென்பதால் சாவதானமாய்
  வெளியில் கலாய்த்து
  கண்டதைத்தின்று
  மாற்றுச்சாவியில்
  பூனைபோல் நுழைந்து
  தாழப் போய் வீழ்ந்த படுக்கை
  கடுப்பில் நழுவிப்போனவளை
  தழுவிப்போய் இழுக்க 
  இரண்டாம் ஜாமம் சல்லாபம் கூடவே ஒருமணி நேரம்

  விழிதிறந்தும் எழுந்திலர் அன்னையர் – பிள்ளை
  அகலாவண்ணம் இழுத்து அணைந்தனர்
  உச்சி மோர்ந்தனர்!
  கண்கள் நீவி கன்னம் உரசினர்
  கனிந்து கொஞ்சி பாடினர் பல்லாண்டு!
  மேற்கைத் தசையில் தலையணை இட்டனர்
  தாய்மைக் கர்வக்கதப்பு தந்தனர்! 
  மூன்றாம் ஜாமம் குலலாபம் கூடவே ஒருமணி நேரம்!!

  யாரோ உதைத்த கதையாய்
  தானாய் விழிப்பு வந்திட
  அடடா தூங்கிவிட்டேனோ எனப்
  பதறிப் போய் – பரபரவென
  கைகள் துழவ – வெறுப்பேற்றி
  கைக்கு அகப்பட்ட செல்போனில்
  மணி ஐந்துதான் ஆனது!! 
  அட்ரா சக்கை!! வாய் மலர்ந்து
  பூபாளம் பாடி காளை தூக்கம் வளர்க்குது காலை!! 
  நான்காம் ஜாமம் சுகலாபம் கூடவே ஒருமணி நேரம்!!

  கூட்டலும் பெருக்கலும் லாபமென்று
  நாள்தோறும் வாசகம் நவின்ற நாவுகள்
  கழித்தலும் வகுத்தலும் லாபம் ஈன்றிடும்
  காலக் காட்சியில் களிப்புறும் புரட்சி வந்தது !
  கதிரவன் காலிடை அகலம் குறைதலில்
  வெம்மை விலகிட வெளிச்சம் அகன்றிட
  இரவில் வேடிக்கைப் பார்க்குது ஞாலத் தும்பி
  குளிர் வெட்டிக் குறுகுது காலக்கம்பி

  நன்றி!

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.