பிச்சைப் புகினும் கற்கை நன்றே

0

அவ்வை மகள்

எது எவ்வாறு கற்பிக்கப் படுகிறதோ, அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகிறது என்பதை முடிவு செய்கிறது என்கிறோம். இது ஏனெனில், கல்வி என்பது ஒரு இயக்க வினை (Dynamic process). இந்த வினைக்கான இயங்கு விசையாக அமைவது  Teaching–Learning எனப்படும் ஒற்றை நிகழ்வாகும். ஆம்! கல்வியாளர்கள், வகுப்பறைக் கல்வியில், போதித்தல், கற்றல் என்கிற இரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பதில்லை. இவ்விரண்டையும் இணைத்துப் போதித்தல்,கற்றல் என்கிற ஒரு இரட்டைக் கிளவியாகவே அதனைக்  காண்கின்றனர். ஏனெனில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்பவை (simultaneous processes).

ஒரு சித்தாந்தத்தை ஆசிரியர் போதிக்கிறார் என்றால் அது அவர் போதித்து முடித்த பின்பு தான் மாணவர்களின் மனதுக்குள்ளே பதிகிறது என்பது இல்லை. அவரது போதனையின் பாதியிலே பாதி பதிகிறது என்றில்லை – கால்வாசிப் போதனையில் பதிய ஆரம்பிக்கிறது என்றில்லை.    ஆசிரியர் துவக்குகிற முதல் சொல்லோ அல்லது முதல் ஒரு சில சொற்துளிகளோ கூட ஒரு மாணவனை வேறொரு கற்றல் படிக்கும் (learning step), உணர்வுத் தளத்திற்கும், கிரகிப்பு நிலைக்கும்  இட்டுச் சென்று விடக் கூடும்.  ஆசிரியர் தொடர்ந்து உதிர்க்கிற இட்டுக் கட்டு வாசகங்கள், vocabulary என்கிற, பாடத் தொடர்பான மொழிக் கோவையை முன்னிறுத்தும் திறன், செரிவான பொருத்தமான, எடுத்துக் காட்டுக்கள்,  விளக்கு முகமாக அவர் எடுத்தாளும் சொல்வளம் ஆகியன அந்த மாணவன் அக்கணத்திலே அடைந்திருக்கிற உணர்வுத் தளத்திற்கும் கிரகிப்பு நிலைக்கும் தகவுடையதாக இருக்குமேயானால் அவனது/அவளது கற்றல் கற்பித்தலை ஒட்டி அமையும்.

ஆசிரியரின் போதனைப் பாணி மாணாக்கரின் கற்றல் பாணிக்கு இணக்கமானதாக இணைப்பை ஏற்படுத்துவதாக அமையவில்லை எனில், அங்கே கற்பித்தல் மட்டுமே நிகழும்.

கற்றல் நிகழாதா என் நீங்கள் கேட்கலாம்!

எதிர்பார்த்த கற்றல் நிகழாது, மாறாக, மாற்றுக் கற்றல் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும்.

மாற்றுக் கற்றல் என்பது என்ன?

மாற்றுக் கற்றல் என்பது ஒரே வகுப்பில் பல்வேறு நிலைகளில் நிகழும். இதனை விளக்கு முகமாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு எளிய எடுத்துக்காட்டைத் தெரிவு செய்து கொள்கிறேன்.

ஆசிரியர் அணுவின் அமைப்பைப் பற்றிய பாடம் நடத்துகிறார். இவர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் எவ்வாறு கட்டம் கட்டமாகத் தொடர்பற்றுப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

(1)  தொடக்கத்திலேயே தொடர்பு விட்டுப் போன நிலை.

ஒரு மாணவனோ அல்லது சில மாணவர்களோ போதிக்க வந்த சித்தாந்தத்தின் முளையோடு நின்று விட்டு மேலே செல்ல இயலாது போராடியபடி இருக்க, ஆசிரியர் மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். இந்த முளை என்னதென்றால் அவனுக்கு ஏற்கனவே (முந்தைய வகுப்பில் கற்றிருந்த காரணத்தினால்) பரிச்சயமான ஒரு சிறு அறிமுகமாக மட்டுமே இருக்கும்.

ஆசிரியர் உரை: அணு என்பது பொருளின் மிகச் சிறிய துகள். அதில் உட்கருவும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்களும் வலம் வந்தபடியிருக்கின்றன. இது சூரியனைச் சுற்றிப் பிற கோள்கள் வலம் வருவதைப் போன்றது. 

மாணவனின் உள் வினா: எலெக்ட்ரான்கள் வலம் வந்தபடியிருக்கின்றன என்றால் உட்கரு ஏன் தன் அச்சில்  தானே சுழலக் கூடாது?

(2)  பாதியிலே தொடர்பு விட்டுப் போன நிலை.

இன்னும் சில மாணவர்கள் பாதியிலே தொடர்பு விட்டுப் போனக் காரணத்தினால் முற்றுப் பெறாதச் சித்தாந்தத்தில் சிக்குண்டபடித் தவித்துக் கொண்டிருப்பார்கள்.  

ஆசிரியர் உரை: அணு என்பது பொருளின் மிகச் சிறிய துகள். அதில் உட் கருவும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்களும் வலம் வந்தபடியிருக்கின்றன. இது சூரியனைச் சுற்றிப்  பிற கோள்கள் வலம் வருவதைப் போன்றது.  அணுவின் உட்கருவிலே ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் இருக்கின்றன.   அணு என்பது மின் தன்மையற்று உள்ளது. அணு பகுக்கப் படக் கூடியது. 

மாணவனின் உள்வினா: அணு பகுக்கப் படக் கூடியதென்றால் எப்படிப் பகுக்க முடியும்?

(3) பாதிக்கு மேலே தொடர்பு விட்டுப் போன நிலை.  

ஆசிரியர் உரை: அணு என்பது பொருளின் மிகச் சிறிய துகள். அதில் உட் கருவும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்களும் வலம் வந்தபடியிருக்கின்றன. அணுவின் உட்கருவிலே ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் இருக்கின்றன. அணு பகுக்கப் படக் கூடியது.  அணு என்பது மின் தன்மையற்று உள்ளது. ப்ரோட்டான்களின் எண்ணிக்கை எலெக்ட்ரான்களின்  எண்ணிக்கைக்குச் சமமானது.  ப்ரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் எனப்படும்.

மாணவனின் உள்வினா: எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை ஏன் அணு எண்ணாக இருக்க முடியாது?

இந்த வினாக்கள் எவற்றையும் ஆசிரியர் தனது போதனையில், எந்நிலையிலும் எழுப்பவில்லை. இவ்வினாக்கள் மாணாக்கரின் உள்ளத்திலே எழுமே என்று எதிர்பார்த்துத் தனது பாடத்தைத் தயாரிக்கவும் இல்லை.

(4) வகுப்புக்கு வருவதற்கு முன்னமேயே எல்லாம் கற்று விட்ட நிலை.

ஆசிரியர் சொல்ல வந்த கருத்து இதுதான் என்பது முற்றிலும் புரிந்து விட்ட நிலையில் சில மாணாக்கர்கள் இருக்கக் கூடும். வீட்டில் அண்ணன், அக்கா படிக்கும் போதுத் தானும் அறிந்து கொண்டது. ட்யூஷனில் கற்றுக் கொண்டது. டிஸ்கவரி சேனல் பார்த்து அறிந்து கொண்டது  எனப் பல விதமான காரணங்களினால் அன்றையப் பாடம் முழுமையும் ஏற்கனவே அறிந்தவர்கள் இவர்கள்.  அதுவும், அப்பாடத்தை அத்தனை நுணுக்கத்தோடுச் சுவைபடக் கற்றவர்கள் இவர்கள். உப்புச் சப்பில்லாது இந்த ஆசிரியர், அதே பாடத்தைக் குளறுபடி செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது கொதித்துக் கொண்டிருப்பார்கள்.  அவ்வப்போது ஆசிரியரின் மேல் விழும் காகித ராக்கெட்டுகளும், விசில் சத்தமும் இவர்களின் உபயமாகும். ஆனால் இந்த மாணவன் தான் ராக்கெட் எறிந்தான் அல்லது சீழ்க்கையடித்தான் என்று ஆசிரியரால் கண்டுபிடிக்கவே முடியாது.

ஆளான மாணவர்களோ, அல்லது விடலைகளோ நிரம்பிய வகுப்பு.  அங்கே பெண்ணாசிரியர் என்றால், நான் மேற்சொன்ன மாணவர்கள் தமக்குள் ஒரு கல்விப் பயணத்தைத் தொடக்குவார்கள்:

ஒரு மாணவன் பெண்ணாசிரியரை,  உள்ளாடைகளோடோ, அல்லது அவற்றையும் விடுத்தோ படம் வரைந்து அதற்குக் கீழே, அவனது மொழி வளத்தைக் காட்டிக் குறிப்போ, கவிதையோ எழுதி அடுத்த மாணவனுக்கு அனுப்ப, அதற்கு மேலே இரண்டாமவன் தன் படைப்புத் திறனைக் காட்ட, பல இருக்கைகள், பல இரு கைகள், பல பேனாக்கள்,  பல பொன் மொழிகள், பல ஜியோமித வடிவங்கள், கோலங்கள், சந்தேகங்கள் என்கிற கணக்கில் “சித்திரமும் கைப்பழக்கம் செம்மொழியும் தொடர்ப் பழக்கம்” என்பதாகத் தாள் நிறையத் தாளாக் கல்வி வளர அந்தத் தாள் இறுதியில் பெண்கள் பக்கம் போய்ச் சேரும். “யாம் ஆணுக்குச் சற்றும் தாழ்ந்தோம் அல்லேம்!” என மகளிரும் மகிழ்வாய் “மொய்” வார்க்க, அந்த வகுப்பும் முடியும் தருவாயை நெருங்கும்.

அச்சமயம், ஆசிரியை பாடத்தை முடித்திருப்பார், கரும்பலகையோ, வெள்ளைப் பலகையோ அதை அழித்தபடியே, மாணவர்களைப் பார்க்க, அந்த வினாடி பெண்களுக்குள் அப்பாவியாய்த் தோற்றம் அளிக்கும் ஒரு பெண், சட்டென எழுந்து ஆசிரியையிடம் போய்ச் சந்தேகம் கேட்க எழுந்து செல்வாள். “ஸ்டூடண்டுக்கு என் பாடம் புரிந்து, மேற் கொண்டு கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் பிரமாதமாகப் பாடம் நடத்தியிருக்கிறேன்” என்கிற பெருமிதத்தோடு அந்த ஆசிரியை அப்பெண்ணை ஆவல் மீதுற எதிர் கொள்ளும் அந்தச் சில வினாடிகளுக்குள், “கவிதாவைப் போல் கவனமாகப் பாடத்தைக் கவனிப்பவர்கள் எவருமே இல்லை” என வேறு அந்த ஆசிரியை பாராட்டுவார்.  மாணாக்கர்களும் அவரை ஆமோதிப்பதைப் போல. “Kavithaa Long Live” அல்லது “Good Job- Good Job”  எனக் கரவொலி எழுப்புவார்கள்.

கவிதா ஆசிரியையை நெருங்கித் தனது ஐயத்தை மிகப் பவ்யமாய் வெளியிட, ஆசிரியை அதை விளக்க, மும்முரமாக கவிதாவின் இடக்கை விரலிடுக்கில் மடிக்கப்பட்ட நிலையில்   கவனமாய்ப் பொருந்தியிருந்த அந்தத் தாள் ஆசிரியையின் புத்தகத்திற்குள்ளோ, நோட்டுப் புத்தகத்திற்குள்ளோ மிகக் கவனமாக செருகி முடிக்கப் பட்டிருக்கும்.  மணியடிக்கவும், ஆசிரியர் நிறைந்த மனதோடு, மாணவர்களின் கை வண்ணத்தில் உருவான சேவைச் சான்றிதழ்ப் பட்டயத்தையும் சுமக்காமல் சுமந்து கொண்டு ஒரு வித வெற்றி மகிழ்வோடு அறையை விட்டு வெளியேறுவார்.

இரு தரப்பிலும் பார்த்தால் அது ஒரு பீரியட். வெற்றி கரமாக முடிந்து விட்டது. பாடத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்த பாடம் போதிக்கப் பட்டதாக ஆசிரியர் பதிவு செய்து விடுவார். மாணவர்கள் தம் கற்றலைத் தேர்வில் பதிவு செய்யும் போது தேறுவது எத்தனைப் பேரோ?

இங்கே இன்னுமொன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த வகுப்பிலும் ஓரிரு அலாதியான மாணவர்கள் இருப்பார்கள். தைரியம் நிறைந்தவர்கள் அவர்கள். தெளிவாகப் பேசுபவர்கள். கற்றுக் கொள்ளுவதில் ஐயமோ தடங்கலோ ஏற்பட்டு விட்டதென்றால், அந்நிலையிலிருந்து வெளியேற விரும்பாதவர்கள். வெளியேற இயலாதவர்கள். அறிவு ஜீவிகள். ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் அதனைப் பல்வேறு நிலைகளில் பார்ப்பவர்கள்.  ஒரு துளி கோடிட்டுக் காட்டினாலும் கூட அதனை ஆழமாகச் சிந்திக்கும் சூட்சமம் கொண்டவர்கள். துறை விட்டுத் துறை சென்று விஷயங்களை இணைத்தும் பிரித்தும் பார்க்கும் ஆற்றலும், அத்தகைய ஆய்வில் கிடைக்கும் விழுதைச் சுவாரசியமாக விவாதிக்கும் திறனும் உடையவர்கள். இத்தகைய மாணவர்கள் ஆசிரியரைச் சிக்கலான கேள்விகள் கேட்டுத் திக்கு முக்காட வைத்து விடுவார்கள்.

இத்தகு மாணவர்களின் அறிவுப் பூர்வமான வினாக்களைச் சந்திக்கும்  தயார் நிலையில் இல்லாத ஆசிரியர்களே வெகு பலரும். மாணவரின் வினாக்கள் சிறப்பானவையே, தெறிப்பானவையே, பொறுப்பானவையே.  இருப்பினும் விடை தரவியலாத குறை ஆசிரியரிடத்திலே!!. மாணவனின் கேள்விக் கணைகளை எதிர் நோக்கவியலாமல் போனதை, வகுப்பறையில் மாணவன் தன்னை உதவாக்கரைக் கேள்விகள் கேட்டு அவமானப் படுத்தியதாக உருவகம் செய்து கொண்டு, இம்மாணவர்களை, ஆசிரியர்கள் படுத்தும் பாடு அப்பப்பா! அந்தச் சித்திரவதையை விவரிக்க வார்த்தைகள் போதா! வகுப்பறையில் அவமானப் படுத்தப் படுவதும் வீண் பழி சூட்டப்பட்டு இவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்டு.

சொல்லப் போனால் இவ்வகை மாணவர்கள் சூதுவாது தெரியாதவர்கள். எத்தனைக்கெத்தனைத் தைரியமாகப் பேசுவது போல் தெரிகிறார்களோ அத்தனைக்கத்தனை மென்மையானவர்கள். இவர்களின் படிப்பாற்றல், படைப்பாற்றல் இரண்டுமே அநாயாசமானது! பிரமாதமான எழுத்தாற்றல் இருக்கும். புதுக் கவிதையா!, மரபுக் கவிதையா!, இலக்கணமா! இவர்களை வெல்ல ஆளில்லை!  ஓவியம், நடிப்பு, நடனம், இசை ஆகியவற்றில் இயல்பான திறன் இருக்கும். ஆனால் கையெழுத்து நன்றாயிருக்காது.  Silly mistakes  என்று சொல்லக் கூடிய அற்பப் பிழைகள் நிறைய இருக்கும். (எடுத்துக் காட்டாக:  மைனஸ் குறி, முற்றுப் புள்ளி, சந்திப் பிழைகள், கணக்கில் step  காட்டாமல் விடுப்பது, முக்கோண விதி வழிக் கணக்கைப் போடச் சொன்னால் கால்குலஸ் வழியில் போடுவது ஆகியன, அண்ணாவின் அரசியல் திறமை பற்றிக் கேட்டால் அவர் சர்வதேசத் தலைவராகப் பரிமளிக்காமல் போனது ஏன்? என அவரைச் சர்வதேச அரசியல்வாதிகளோடு ஒப்பீடு செய்வது, கால்குலேட்டரைப் பயன்படுத்தி மட்டுமே கணக்குப் போடச் சொன்னால் அதை மறந்து விட்டு மனக்கணக்கிலேயே போடுவது ஆகியன.)

இம்மாணவர்கள் சுருக்கமாக விடையளிக்கச் சொன்னால் விரிவாக எழுதுவார்கள். விரிவாக எழுதச் சொன்னால் குறைவாக எழுதி விட்டு ஏனையவற்றைப் படம் போட்டுச் சமன்பாடுகள், குறியீடுகள் கொண்டு காட்டி அந்தச் சித்தாந்தம் எவ்வாறு தொடரும்? அதனை அறிய மேலும் என்னென்ன செயலாம்? என ஒரு திட்ட வடிவத்தையும் குறிப்பிட்டிருப்பார்கள். இத்தகையதொரு விடைக்கு அவர்களுக்குக் கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா? தேர்வில் தோல்வி அல்லது சொற்ப மதிப்பெண்கள்! காரணம்? புரியாத கையெழுத்து, கேட்ட வினாவுக்கு எதிர் பார்க்கப் பட்ட பதிலில்லை!! நடைமுறையை மீறி எதிர்காலத்தைப் பற்றிய, காலம் கடந்தச் சிந்தனையோடு வாழும் அறிவு ஜீவிகள் கட்டுப் பெட்டியான தேர்வுகளிலே, தோல்வியைத் தழுவுமாறு ஆக்கப் படுகிறார்கள்.

ஆசிரியரின் மீது ராக்கெட் விட்டது, ஆசிரியரை ஆபாசப் படமாக வரைந்தது, விசில் அடித்தது இவையெல்லாம் செய்வது யார் யாரோ! ஆனால் இந்த மாணவர்களின் மீது இந்த வீண் பழிகள் வந்து விழும். ஒசத்தக் குரலில் தைரியமாய் விவேகமான கேள்விகள் கேட்கும் பிறவிக் குணம் ஒன்றால் மட்டுமே இந்த மாணவர்கள் துன்பப்படுதல் வெளிப்படை.     

இத்தகைய மாணவர்களின் நிலைப் பாட்டைப் பரிந்து பேசப் பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் பொறுப்புப் பதவிகளில் இருப்போரும் வாரார்! இவர்களுக்குத் துணை வர வீட்டிலுள்ளோரும் வாரார். ஏனெனில் இவர்களில் வெகு பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையான வீட்டுச் சூழல்களில் இருந்து வருபவர்கள். மேலும் வீட்டிலும் கூட, படக் படக் எனக் கேள்வி கேட்கும் பழக்கம் இருப்பதால் கல்விக் கூடத்தில் நடக்கும் அத்து மீறல்களைப் பெற்றோரும் கூட முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை.   

இவ்வாறான இழுபறிக் கல்வி வாழ்க்கையில், ஒரு நிலையில் இவ்வகை மாணவர்களுக்குக், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதும், கல்விக் கூடங்களின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது.  Drop Outs  என்று நாம் சொல்கிற, பள்ளிப் படிப்பை அல்லது கல்லூரிப் படிப்பைப் பாதியிலே நிறுத்திக் கொள்ளும் நபர்களில் மிகப் பெரும்பாலோர் இவ்வாறு வெளியேறுபவர்களே!! 

கல்விக் கூடங்களை விட்டு வெளியேறிய நிலையில் இவர்களுக்கு இருக்கின்ற சூட்சுமம், சமுதாயப் பிரக்ஞை, ஆகியன அரசியலுக்குப் பொருத்தமானதாய் அமைகின்றன! இவர்களுக்கு இருக்கின்ற வாய்ப் பேச்சுத் திறமை, தைரியமான ஆணித்தரமான விவாதத் திறமை, கவி புனையும் ஆற்றல், வசனங்கள், ஆகியன அரசியலில் நல்ல முதலீடாகின்றன. ஒரு சிறிய கல்விக் கூடத்தில் பொருந்தாதவர்களாக விரட்டி அடிக்கப் பட்டவர்கள் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் கட்சியை வெகு நேர்த்தியாக நிர்வகிப்பது இவர்களின் ஆளுமையின் கம்பீரமானதொரு வெளிப்பாடு. குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சி கண்டு இவர்கள் செழிப்பது இவர்களது திட்டமிடும் திறனின் முத்திரை. இவர்கள் “மைக்கைப்” பிடித்துப் பேச ஆரம்பித்து விட்டால், மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போலக், கண்ணன் குழலை மெய் மறந்து கேட்ட ஆவினங்கள் போல நாம் அடிமையாகி விடுகிறோம் என்றால் இவர்களுக்கு உண்மையிலேயே மேலாண்மைப் பண்புகள் உள்ளன என்பதற்கு அது சான்று!!

நாட்டு நடப்பை வைத்துப் பார்க்கும் போது நம்மூர் அரசியல்வாதிகள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்திருந்தால் இத்தனை ஊழல், அராஜகம் பெருத்திருக்க வாய்ப்பில்லை என்று நமக்கு அடிக்கடித் தோன்றுகிறதல்லவா?

கல்விக் கூடங்களில் படைப்பாற்றல் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அத்தனை அரவணைப்பு இல்லை, அவதிகளையே அவர்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது நாம் குற்றம் சாட்டவேண்டியது எவரை?  

வகுப்பறை என்பது ஒரு சிறு சமுதாயம். சமுதாயத்திலே எத்தனை வேற்றுமைகள் தனி மனிதரிடத்திலே உள்ளனவோ அத்தனைத் தனி மனித வேற்றுமைகள் மாணாக்கர்களிடையே இருப்பது இயற்கை. இந்த இயற்கையை ஆராதிக்க விழையாத, இந்த இயற்கை அமைப்புக்குச் சேவை செய்ய விழையாத அற்புதமான மனித குல வித்துக்களைக் கொண்டுக் கல்விப் பயிர் வளர்க்க முன் வராத வணிக வளாகங்களாய்க் கல்விக் கூடங்கள் மாறிப் போனதெனில் இது கல்வியின் பிழையா? கற்பிப்பவரின் பிழையா?            

இத்தருணத்தில் எனக்கு நினைவுக்கு வந்த வாசகம் சர் கிளாஸ் மோசரின் கூற்று:  

Education costs money, but then so does ignorance – Sir Claus Moser

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” என்று பெற்றோர்கள் தம் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டுத் தமது குழந்தைகளுக்கானக் கல்வியில் நிறைய முதலீடு செய்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்று சேர்ந்த தம் மக்களிடம்  அறியாமையே நிலைப்பாடாகுமெனில், இதனை அவர் எவரிடம் முறையிடுவது?

தனித்திறன் பெற்ற குழந்தைகள் எவ்வாறு இருப்பார் என்பதைப் பெற்றோர்கள் அறிந்து கொள்ளு முகமாக இங்கு கீழ்க் காணும் தகவலை வழங்குகிறேன்:

Characteristics/Signs of Gifted Children
Here are some characteristics of Gifted Students that parents should use to see if they think their child is gifted:

1.Gifted students are often perfectionist and idealistic.

2.Gifted students may experience heightened sensitivity to their own expectations and those of others.

3.Gifted students are asynchronous

4.Some gifted students are “mappers” (sequential learners), while others are “leapers” spatial learners.

5.Gifted students may be so far ahead of their chronological age mates that they know half the curriculum before the school year begins!

6.Gifted children are problem solvers.

7.Gifted students often think abstractly and with such complexity that they may need help with concrete study and test-taking skills.

8.Gifted students who do well in school may define success as getting an “A” and failure as any grade less than an “A”.

Gifted students usually have unusual talent in one or occasionally two areas. Below are six areas where we will find giftedness. No child will be gifted in all six, but some may be in more than one area. Within specific academic ability, students again usually have one or two subjects that they are best in and passionate about. 

Creative Thinking

Leadership

General Intellectual Ability

Psychomotor

Specific Academic Ability

Visual/ Performing Arts

 

நன்றி: http://www.nsgt.org.

இன்னமும் பேசுவோம்.

 

படத்திற்கு நன்றி: http://www.featurepics.com/online/Children-Classroom-1227878.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.