பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 35
இ.அண்ணாமலை
கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா? காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா? — விஜயலக்ஷ்மி
பதில்: இலக்கிய மொழி நடைக்கும், முக்கியமாகக் கவிதை மொழி நடைக்கும், பேச்சு மொழி நடைக்கும் எந்த மொழியிலும் வேறுபாடுகள் இருக்கும். தொல்காப்பியர் துவங்கி நம் இலக்கண ஆசிரியர்கள் செய்யுள் வழக்கையும் உலக வழக்கையும் வேறாகப் பார்க்கிறார்கள். கவிதை மொழி நடை எழுத்து மொழி நடையிலிருந்தும் வேறுபடும். இதற்கான காரணங்களில் கவிதையின் உருவத்தை அமைக்கும் யாப்பமைதியும், கவிதையின் ஓசையோட்டமும் கவிதையில் சொற்சுருக்கமும் அடங்கும். தற்காலத்தில் நாவல்களிலும் சிறுகதைகளிலும் வசனமே இலக்கிய மொழி. இந்த இலக்கிய மொழி பேச்சுத் தமிழை நெருங்கி வந்திருக்கிறது. இவற்றின் அழகியல் தன்மை வேறானாலும் இலக்கணத்தில் இவற்றின் வேறுபாடு சொல்லெழுத்து (spelling) போன்ற மேற்போக்கான அம்சங்களிலேயே பெரும்பாலும் இருக்கிறது.
கேள்வியில் உள்ள இலக்கியத் தமிழ் இன்றைய கட்டுரைகளில் வழங்கும் தமிழைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். பேச்சுத் தமிழ் வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த பேச்சுகளை அல்லாமல் அனைவரையும் சார்ந்த பொதுப் பேச்சுத் தமிழைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். இரண்டுக்கும் இலக்கண வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இலக்கணத்தின் பல நிலைகளில் உண்டு. சொல்லெழுத்தில் உள்ள வேறுபாடு அனைவரும் அறிந்த ஒன்று. இறுதி மெய் கெடல் (அவ, மாங்கா), உகரம் மிகுதல் (கல்லு, ஊரு), மெல்லெழுத்து நீங்கி உயிர் மெல்லொலி பெறுதல் (மரம்) ஆகிய விதிகள் மூலம் பேச்சுத் தமிழில் சொற்கள் மெய்யெழுத்தில் முடிவதில்லை; ஒலிகள் முன் பின் வரும் வேறான ஒலிகளோடு ஒருமைப்படுகின்றன (assimilate) (வெட்கம் = வெக்கம், தம்பிக்கு = தம்பிக்கி, கொன்று = கொன்னு, அழிந்து = அழிஞ்சு, இடம் = எடம், உடம்பு = ஒடம்பு); மும்மெய்மயக்கம் இரு மெய்மயக்கமாகிறது (பார்க்க = பாக்க, காய்ச்சல் = காச்சல்); முன் அண்ணத்தில் எழும் வேறுபட்ட ஒலிகளின் எண்ணிக்கை குறைகிறது (த,ற,ட = த,ட: காற்று = காத்து, ந,ன,ண = ன,ண: வெந்நீர் = வென்னி, ர,ற = ர (கரி, கறி = கரி), இப்படி ஒலி அமைப்பில் பொதுமையான வேறுபாடுகள் பேச்சுத் தமிழில் உள்ளன. இவை பிழைகள் அல்ல; நாக்கின் அசைவின் சிரமத்தைக் குறைத்து உச்சரிப்பை எளிமையாக்கும் மொழி மாற்றங்கள்.
ஒரு சொல்லின் உருபுகளை இணைக்கும் சாரியைக்குப் பேச்சுத் தமிழில் இடம் இல்லை. (வீட்டிற்கு = வீட்டுக்கு, அதனை = அதை, கேட்டனர் = கேட்டாங்க). சொல்லியலில் அஃறிணையில் ஒருமை, பன்மை என்னும் எண் வேறுபாடு மறைந்துவிட்டது (வாரா = வராது). எழுவாய்க்குத் தக்கபடி பயனிலையின் முடிவு விகுதி இல்லாமல் எல்லா எழுவாய்க்கும் ஒரே பயனிலை விகுதி பேச்சுத் தமிழில் உள்ளது (தம்பி / அம்மா என்ன சொன்னாப்லே). உயர்திணைக்கு அஃறிணை பிரதிப்பெயரும் பயனிலை விகுதியும் உள்ளது (தம்பி ஏன் இப்படி சொல்லுது; அது அப்படித்தான் சொல்லும்). உயர்திணையில் பலர் பாலில் ஆண்-பெண் பால் வேற்றுமை தோன்றியிருக்கிறது ( மகனுக, மகளுக). அஃறிணை வினை முடிபில், எதிர்கால வினையில் இருப்பது போலக் காலத்திற்கும் திணைக்கும் இரண்டு உருபுகளுக்குப் பதில், இறந்த கால, நிகழ் கால வினையில் ஒரே உருபு இருக்கிறது (ஓடும் = ஓடும், ஓடிற்று = ஒடுச்சு, ஓடுகிறது = ஓடுது). தொழிற்பெயரிலும் வினையாலணையும் பெயரிலும் எதிர்கால உருபுக்குப் பதில் நிகழ்கால உருபு உள்ளது; பொருளில் வேறுபாடு இல்லை (தூங்குவது = தூங்குறது, தூங்குபவர்கள் = தூங்குறவங்க) இவை போன்று வேறு மாற்றங்களும் பேச்சு மொழியில் இருக்கின்றன. இவற்றில் பலவும் இலக்கணத்தை எளிமைப்படுத்தும் மாற்றங்களே. பேச்சுத் தமிழின் சில இலக்கணக் கூறுகள் இலக்கிய மொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அவ காபியா குடிக்கிறா, நாளைக்கி அவ வருவாளா இருக்கும் என்பது போன்ற, -ஆ (ஆக) என்னும் உருபைப் புதிய வகையில் பயன்படுத்தும் வாக்கியங்கள் பேச்சுத் தமிழில் இடம் பெற்றுள்ளன. இது போன்ற இலக்கியத் தமிழில் இல்லாத வாக்கிய அமைப்புகள் பேச்சுத் தமிழில் குறைவே. பேச்சுத் தமிழில் இல்லாத, இலக்கியத் தமிழிலே மட்டுமே உள்ள வாக்கிய அமைப்புகள் அதிகம். ‘கோபம் வந்தது, கோபப்பட்டான்’ இரண்டு மொழிக்கும் பொது; ‘கோபம் அடைந்தான்’ இலக்கியத் தமிழுக்கு மட்டுமே உரியது.
சொற் களஞ்சியத்தில் உள்ள வேறுபாடு இலக்கணத்தின் கீழ் வராது என்பதால் அதை இங்கே தரவில்லை.
மேலே சொன்ன இலக்கணக் கூறுகள் இன்றைய இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் சில. ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படிச் சில வேறுபாடுகள் இருக்கும். பழைய காலப் பேச்சுத் தமிழுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் செல்வாக்கு இருக்கிறது எனலாம். கல்வெட்டுகள் சில வேறுபாடுகளைக் கோடி காட்டுகின்றன. கல்வெட்டுத் தமிழுக்கென்று ஒரு நடை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கல்வெட்டுத் தமிழின் இலக்கணக் கூறுகள் எல்லாம் பேச்சுத் தமிழின் கூறுகள் என்று சொல்ல முடியாது. இலக்கியத் தமிழிலும் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் சில பேச்சுத் தமிழின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம்; சில இலக்கிய மொழி வளர்ச்சியால், பிற மொழித் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். மொழி இலக்கணத்தில் சுய வளர்ச்சியால் வந்த மாற்றத்தையும் பிற மொழித் தாக்கத்தால் வந்த மாற்றத்தையும் பிரித்தறிவது எளிது அல்ல.
ஐயா,
என் கேள்விக்கு தெளிவான முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.