பாஸ்கர பாரதி

மாயையைப் பழித்தல் (வேதாந்தப் பாடல்)

‘சிரிப்பு பாதி அழுகை பாதி; சேர்ந்ததல்லவோ மனித ஜாதி?’ (நன்றி – கண்ணதாசன்) இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எத்தனை இனிமையாக மாறி விடும்? ஆனால், இதை உணர விடாமல் மறைப்பதும், தடுப்பதும் எது?

நீர்க்குமிழி போல் தோன்றி மறைவதே வாழ்க்கை. இங்கே நிரந்தரமானது எதுவுமே இல்லை. நிலையாமை மட்டுமே நிலையானது. ஆனாலும், இந்த ஜகம் மொத்தமும் நிலையற்றதின் பின்னால் நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே.. இதை நிகழ்த்த வல்லது எது?

அழகாய் – அழகற்றதாய், பொலிவாய் – பொலிவற்றதாய், மணமாய் – மணமற்றதாய், களையாய் – களையற்றதாய், வலிதாய் – மெலிதாய், இனிதாய் – இன்னலாய், வெவ்வேறாய் நம் முன் விரியும் அத்தனையும் ஒன்றேதான் எனில், இரு வேறாகத் தோன்றச் செய்வது எது?

கானல் நீரை ஓடை நீராய்க் காணச் செய்வதும், கயிற்றுத் துண்டைக் கொத்தும் பாம்பாய் மாறச் செய்வதும் பிறப்பு, காதல், வெற்றி எல்லாம் இன்பம் என்பதும், இறப்பு, பிரிவு, தோல்வி எல்லாம் துன்பம் என்பதும் ‘அது’வன்றி வேறில்லை. அதுதான் வேதாந்திகள் விளிக்கும் ‘மாயா’ சக்தி.

உறவுகள் மலர்வதும், பிரிவுகள் வெடிப்பதும் மாயையினாலே.
கனவுகள் வளர்வதும் நினைவுகள் தேய்வதும் மாயையினால்தான்.
தீதும் நன்மையும் மாயையின் வெளிப்பாடே. மாயை – சூது அல்ல; சூத்திரம்.
விளைவுகளுக்கெல்லாம் சூத்ரதாரிமாயா சக்தியே.
தூக்கம், விழிப்பு, செயல், விளைவு… எல்லாமே மாயா மாயாதான்.
‘கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே கொடுப்பதும்’ மாயையே.

மாயையை உணர்தல் வேண்டும். மாயையை வெல்தல் வேண்டும்.
மனத்துணிவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆம்.
சிந்தையில் தெளிவுதான் மாயையை எதிர்கொள்ள அடிப்படைத் தகுதி.
‘துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை’.
காலனுக்கு அஞ்சாதவன் குளிக்க இறங்கினால், கடலின் ஆழம் ஒரு கணக்கே இல்லை.

‘உடல் பொய்; உள்ளிருக்கும் ஆத்மாவே மெய்’ என்பதை உணர்ந்துகொண்டால், அக்கணமே மாயை மாயமாகி விடுகிறது. ‘இரு வேறு அல்ல; ஒன்றே எல்லாம்’ என்பார் முன் பேதங்கள் நில்லாது ஓடத்தானே வேண்டும்?

யார் தந்து யார் பெறுவது? ராப்பிச்சைக் காரனிடம் ராஜாங்க மந்திரி, யாசகம் பெறுவதா? பூனை தர, புலிகள் கொள்வதோ?

மாயையை வெல்ல இச்சை கொண்டு விட்டால், மாயையின் இச்சை வெல்லுதல் கூடுமோ? தனது கஜ துரக பதாதிகளுடன் போர் புரியும் பொடியாகுதல் நிஜமே.

மாயையை வெல்லுதலே மாதவம் என்பதை உணர்ந்தே மாகவி, மானுடம் தழைக்க வேண்டிப் புனைந்த மகத்தான பாடல் இதோ..

மாயையைப் பழித்தல்

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

 

படத்திற்கு நன்றி:http://www.redgage.com/photos/reymondkingsley/bharathiar-statue-in-marina-beach.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.