அதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (6)
பிச்சினிக்காடு இளங்கோ
ஒவ்வொரு நாளும்
ஒன்றரை மணி நேரம்
எங்கள் ஒலிபரப்பு
காலை 6.40
பிற்பகல் 2.40
மாலை 6.05
இரவு 7.25
வியாழக்கிழமை காலை 8.21க்கு
‘ஊர் மணம்’
அனைத்திந்திய வானொலியில்
நேரத்தை
உழவுக்கும் தொழிலுக்கும்
அதிகம் ஒதுக்கியது
எங்கள் வானொலிதான்
அது
திருச்சி வானொலிதான்
ஒவ்வொரு திங்கட்கிழமையும்
காலை 6.40க்குத்
‘தாயின் குரல்’
பூமித்தாய் பேசுவது போல்
பேசுவது
செவ்வாய்க்கிழமை
காலை
‘விரிவாக்கப்பணியாளர்களுக்கு’
புதன்கிழமை காலை
‘விடியும் பொழுது’
வியாழக்கிழமை காலை
நான் எழுதி
மறைந்த நண்பர்
A.சுப்ரமணியன் பாடும்
“வானம்பாடி”
இது கிராமிய மெட்டில்
அமைந்த
வேளாண்மைப்பாடல்
வெள்ளிக்கிழமை காலை
‘விரிவாக்கப்பணியாளர்களுக்கு’
சனிக்கிழமை காலை
‘மனிதர்களே கவனியுங்கள்’
காலநடையே பேசுவது போல்
பேசுவது
ஞாயிற்றுக்கிழமை காலை
‘கொட்டும் முரசு’
‘கொட்டும் முரசு’
இலக்கிய ஆளுமையை
எழுத்தாற்றலை
கற்பனையை வெளிப்படுத்தக்
கிடைத்த தளம்
வெறும்
கற்பனைக்கு இடமின்றிப்
பயனுள்ள வேளாண்மைக் கருத்துக்களைப்
பல்வேறு வடிவத்தில்
படைப்பது
கற்பனை நயமும்
கருத்துச் சிறப்பும்
ஒட்டிப் பிறக்கும்
உன்னதப் படையல்
மாநிலச்செய்திக்கு
முன்னே வருவதால்
கேட்காத காதுகளும்
கேட்கும்
உழவர் மட்டுமல்ல
அனைவரும் கேட்கும்
அழகிய படைப்பு
(தொடரும் 7)
படத்துக்கு நன்றி:http://www.indiapropertys.in/Melmaruvathur_Chennai_GSTRoad_dtcp_plots_sale.php