எனை வளர்த்த தீ!
தி.ந.இளங்கோவன்
கவிதை வந்த காலத்தில்
தென்றலாய் வந்த
நண்பன் நீ!
இலக்கியம் விளையாட்டு
திரைப்படம் எனவுலகின்
பலகதவுகளை யெனக்கு
பரிச்சயம் செய்தவன் நீ.
காதலில் அலையும்
மனம் போல்
உன்னுடன் எங்கும்
திரிந்தேன் நான்.
பிறிதொரு நாள் எனக்கென்று
ஒரு பார்வை, ரசனை.
வேறுபட்டதாய், உன்னில்
முற்றிலும் மாறுபட்டதாய்…
உன்னில் ஒரு அங்கமாய்
நானிருந்த நாட்கள் போய்
நான் என்னைப் பெற்ற
வலி மிகுந்த காலமது…
அதற்குமுன் நான்
உன் வழி உலகு பார்த்தேன்.
அதன் பின்னோ
நீ என் வழி உளவு பார்த்தாய்…
புது உலகு காட்டிய நீயே
உன் மறு புறமும்
காட்டியெனை வதைத்த
வெந்தணற் பொழுதுகள்.
காலக் கணக்கன்
காட்டிவிட்ட பாதைகளில்
நானொரு பக்கம், இன்றோ
நீயொரு பக்கம்.
தொலைவில் இருந்தாலும்
என்னுள் இருக்கிறாய்
அன்றுபோல் இன்றும் நீ,
எனை வளர்த்த தீ!
புகைப்படத்துக்கு நன்றி:
http://www.vector.net/2010/running-action-man-silhouette-vector-illustration/
பட்டிக்கு சென்ற மாடு கொட்டிலுக்கு திரும்புவது மாதிரி …ஓரு இளமைக்கால நட்பை மீட்டெடுத்து போற்றும் உங்கள் சிந்தனைக்கு.. வாழ்துக்கள்!