சொர்க்க வாசல் ?!
வாசலில் செம்மண் கோலமிட்டால் வருபவர்க்கு சொர்க்க வாசல்
ஓசையில் மணியுடன் கதவுகள் திறந்தால் வந்தவர்க்கு சொர்க்க வாசல்
வாவென் றழைக்க அன்பர்கள் இருந்தால் திறப்பவர்க்கு சொர்க்க வாசல்
புன்னகை புரிந்து வந்தனங்கிடைத்தால் விருந்தினர்க்கு சொர்க்க வாசல்
அன்புடன் வார்த்தை அருவிடப் பகிரும் வாயுமேயொரு சொர்க்க வாசல்
பண்புடன் விருந்து பகிர்வுடன் அன்புச் சமைத்திடும் உள்ளம் சொர்க்க வாசல்
அருசுவை யேற்று தொந்தியில் செரிமன் ஆகிடும் இல்லற சொர்க்க வாசல்
அருமை உங்களின் சமையல் என்ற ஆசிகள் காதினில்! சொர்க்க வாசல்
அழுதிடும் குழவியின் அரவங் கேட்டு சுரபிகள் திறப்பதும் சொர்க்க வாசல்
தொழுதிடும் அடியார் குறைகளை கேட்டு வரங்கள் வருவது சொர்க்க வாசல்
பழுதுடன் பிணிதனை நீக்கும் இலவச மருத்துவர் இல்லம் சொர்க்க வாசல்
படிப்புடன் பண்புகள் கற்றுகொடுத்திடும் பள்ளிவாசலும் சொர்க்க வாசல்
தாயகம் காப்போம் என்றே சேவைகள் தந்தவர் வாசல் சொர்க்க வாசல்
ஆயுதம் யேந்தி கடும்பனி குளிரினில் ஆள்பவர் அடிகள் சொர்க்க வாசல்
பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்
சாதனைப் புரிவோர் மகத்துவந் தன்னைச் சாற்றும் காற்றும் சொர்க்க வாசல்
ஏகாதசிதமில் ஆழ்வார் சுரங்களைப் பாடிமால் தரிசனம் சொர்க்க வாசல்
தீராபசியினில் தீந்தமிழ்க்கவிதை ஆக்கும் கணினியில் சொர்க்க வாசல்
தேன்மொழி யானதும் செம்மொழிசங்க மேடையுந்தானே சொர்க்க வாசல்
மின்மொழி யாகிட வல்லமைத் தளத்தில் நுழைவதும் தானே சொர்க்க வாசல்
pl read it as அறுசுவை
மெய்ஞ்ஞானம் வளர்க்கும் விஞ்ஞானி சத்யாவின் கவிதை எப்பொழுதும் பூலோக வைகுந்த கதவு தானே!
அருமையான வரிகள் ஐயா! வாழ்த்துக்கள்.
//பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்//
நல்ல சிந்தனை.