இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(121)

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

கல்வியின் மகத்துவத்தை, அதன் இன்றியமையாத அவசியத்தை உலகின் எந்த மூலையில் அமைந்துள்ள நாடுகளும், அவற்றின் அடித்தளமாக, உயிரோட்டமாக அமைந்திருக்கும் சமுதாயங்களும் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கும் ஒரு கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே யதார்த்தமான உண்மையாகும்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தூரம் குறைந்து வருகிறது. பிரயாணிக்கும் வேகம் அதிகரிப்பதனால் அதற்காகச் செலவு செய்யும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது.

விஞ்ஞான அறிவு அதிகரித்து அதன்மூலம் நமது அன்றாட வேலைப்பளுக்களைக் குறைப்பதற்கான சாதனங்களின் கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதனால் அத்தகைய பொருட்களின் மீது மக்கள் கொண்டிருக்கும் சார்பு நிலையும் அதிகரிக்கிறது. அதன்மூலம் இத்தகைய பொருட்களின் உற்பத்தியின் பெருக்கம் அவசியமாகிறது.

பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் இத்தகைய வியாபரங்களுக்குள் தேடிக்கொள்ளும் உத்தியோகங்களிலேயே தங்கியுள்ளது.

இது கல்வியின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் வலியுறுத்தி நிற்கிறது.

எனது இவ்வார மடலின் மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகும் விடயம் எதுவாகவிருக்கும் எனும் எண்ணம் உங்களுக்குத் தலைதூக்குவது இயற்கையே.

இன்றைய அறிக்கை ஒன்றின்படி இங்கிலாந்தின் அதியுயர் பதவிகள் பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களிடமே தங்கியுள்ளதாகத் தேரிவிக்கிறது.

அது சரி ! அதற்கென்ன என்று கேட்கிறீர்களா ?

பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கு மிகுந்த செலவு ஏற்படும். அதாவது இங்கிலாந்தில் பிரத்தியேகப் பாடசாலைக் கட்டணம் மிகவும் அதிகம். எனவே இத்தகைய பாடசாலைகளில் கல்வி பயில்வோர் மிகவும் செல்வமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

இந்த அறிக்கையில் அவர்கள் ஏறத்தாழ 4000 வியாபாரங்கள் மற்றும் அரசியல் துறைகளில் ஆய்வு நடத்தியதில்;

71% வீதமான உயர் நீதிபதிகள்
62% வீதமான உயர் இராணுவ அதிகாரிகள்
55% வீதமான உயர் அரச அதிகாரிகள்
36% வீதமான அமைச்சரவை பதவிகள்
43% வீதமான பத்திரிக்கை ஆசிரியர்கள்
ஆகியோர் மிகவும் பிரபலமிக்க பிரத்தியேகப் பாடசாலைகளில் பயின்று, மிகவும் பெயர் பெற்ற சர்வகலாசாலைகளில் பட்டம் பெற்றவர்களாவார்கள் எனவும், இவர்களின் குடும்பப் பின்னணியின் படி இவர்கள் செல்வமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அன்றி மாணவி எப்படி இத்தகைய உயர் பதவிகளை எய்தலாம்? எனும் கேள்வி சில அரசியல் எதிர்தரப்புகளில் இருந்து எழுகிறது.

educationஇன்றைய இங்கிலாந்து அனைத்து மக்களுக்கும் சமமான தளத்தை அமைத்துக் கொடுக்கிறதா? எனும் கேள்வியும் மிகவும் ஓங்காரமாக ஒலிக்கிறது.

ஆனால் இத்தகைய ஒரு நிலையை மாற்ற உகந்த வழி என்ன? குற்றம் சாட்டும் உங்களிடம் இதற்கு மாற்று வழி இருக்கிறதா? வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மாணவனோ அன்றி மாணவியோ அதிகக் கட்டணம் செலுத்தி பிரத்தியேகப் பாடாசாலைகளுக்குச் செல்வதைத் தடுப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவாலாக இருக்காதா ? என்று அரசாங்கத் தரப்பிலிருந்து சத்தமாகக் கேட்கிறது.

இதற்கு ஒருவகையிலான தராதரப்படுத்துதல் முறையை அறிமுகப்படுத்தலாமே என்கிறார்கள் ஒரு சாரார்.

சமுதாயத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக தராதரப்படுத்துதல் முறையைக் கொண்டுவருதல் சட்டத்திற்கு முரணானது எனும் வாதம் சட்டத்தரப்பினில் இருந்து வருகிறது.

எந்தக் கல்லூரியில் படித்து, எந்தச் சர்வகலாசாலையில் பட்டம் பெற்றிருந்தாலும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சிக்ககா ஒதுக்கப்படும் இடங்கள் தகமை பெற்ற மாணவர்களின் குடும்பப் பின்னணியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை தனியார் தரப்பு வியாபாரங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது இந்த நிலையை ஒருவகையில் மாற்றியமைக்க உதவும் என்கிறார்கள் சிலர்.

எது எப்படி இருப்பினும் கல்வியும், வேலை வாய்ப்புகளும் நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் அடையக்கூடியவகையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம் .

இதற்கு சட்டம் அவசியமா? அன்றி பெற்றோரின் கடமையின் வலிமை உணரப்பட வேண்டியது அவசியமா? மிகவும் சிக்கலான கேள்வி இல்லையா ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படம் உதவிக்கு நன்றி: http://whyworkineducation.com/about/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க