ஓலைத்துடிப்புகள் (2)
கவிஞர் ருத்ரா
ஐங்குறு நாறு பாடல்களில் “புளிங்காய் தின்னும்” தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைப் பற்றி “ஓரம்போகியார்” எனும் மா கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது. அதன் விளவே இந்த “உன் உரு தின்னும்..” கவிதை.
என் உரு தின்னும்…
புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!
============================================
பொழிப்புரை
புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத் துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள். புளியங்காய் தின்கிறாள். மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய் அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக் கண்டு வியந்து இது என்ன சுவையாய் இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்துத் தொங்கும். நிலாப்பிறைகள் போல பச்சைக் காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும். அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும் பயணம் எல்லாம் எதற்கு?” தலைவி தவிக்கிறாள். “பொருள் தேடிய வரை போதும். தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக. என் விழிகளை மலர்கள் என்பாயே. பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன. இவை என்னால் தாங்க இயலுமோ?” என்கிறாள்
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.”நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத் தின்கிறது. அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன். இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது. இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும் விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத் தொடங்கி விடுவேனோ என அஞ்சுகிறேன். நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம். அதனால் விரைந்து தேரை செலுத்து. இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?”
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!
“உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதியஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக” என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.