-ருத்ரா பரமசிவன்

இலவச இணைப்பு
மரத்துக்கு மனிதனா?
மனிதனுக்கு மரமா?
இயற்கையின் வரிசையில்
மரமே
நம் பிள்ளையார் சுழி.                                             tree.
நம் கதவுகளுக்கு
அது செதில் செதில்களாகப்
பிளக்கப்பட்ட போதும்
நமக்கு ஜன்னல்கள் எனும்
கண்கள் அப்ப
கம்பிகளோடு குத்திக்கொண்டுக்
கழுவேறிய போதும்…
நம் உடலோடு
ரத்தமாய்ச் சதையாய் உயிராய்
சங்கமம் ஆன போதும்
நாம் மூச்சுப்பூக்களில்
குமிழியிடும்போதும்
சூரியனின் பிளாஸ்மாவைத்
தன் இலைகளோடு
அது பதிவிறக்கம் செய்யும்போதும்
நம் குறுக்குவெட்டுத்தோற்றமே
அது தான்!

சின்ன நாற்றாய்
நம் குழந்தையும் அது.
உயிர் ஊற்றாய்
நம் அம்மாவும் அது.
நம் அப்பாக்களுக்கு அப்பாக்களாய்
அப்பால் நின்று
நம் தலைமுடியை
இதமாய் வருடி நிற்கும் கைகளும் அது.
அதன் உடல் கப்பலானபோது
அதன் உள்மூச்சின் விசைப்பயணத்தில்
மானிட நாகரிகம்
மணி விளக்கு ஏந்தி வலம் வந்தது.
அது
ஏன் மனிதனுக்கு மனிதன் இடையில்
மனிதனின் ரத்தம் ருசிக்கும்
சிலுவை மரம் ஆனது?
நியாய அநியாயக்குழப்பங்களில்
சில சமயங்களில் ஏன்
தன்னை மறைத்துக்கொண்டு
மராமரங்கள் ஆனது?

என் துள்ளல்களைத்
தாங்கிய தொட்டில்கள்
என் துடிப்புகள் அடங்கிய போது
“பெட்டிகளாய்” மாறி
மண்ணில் புதைந்து கொண்டது.
செம்மரமோ சந்தன மரமோ
மனிதனுக்கு மட்டுமே
அவை மொழி மாறிப்போயின.
மனிதனிடம்
பேராசை கொழுந்து விட்டு வளர்ந்து
அது தீ ஆனது.
அப்போது அதன் தளிர் பூ பிஞ்சு காய் கனி
எல்லாம் துப்பாக்கிகளால்
ரத்தம் சொரிந்தது.
மனிதனே!
உனக்குத் தொப்புள் கொடியாகிப்போன‌
மரத்துக்குக்
கோடரியையா
நீ பண்டமாற்று செய்வது?!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க