பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11267274_902111079853417_686643902_n

88717027@N02_rதிரு. பாபு ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

33 thoughts on “படக்கவிதைப் போட்டி (13)

 1. இன்று இந்த மரத்தின் உயரத்தை எட்டி இருக்கிறேன்.
  நாளை இன்னும் உலகின் உயரங்களை எட்டுவேன்.

  மக்களே  என்னை வாழ்த்துங்கள்.

 2. சுட்ட பழம் .. !

  சுட்ட பழம் வேண்டுமா ?
  இல்லை
  சுடாத பழம் வேண்டுமா ?
  சொல் பாட்டி ?
  சுட்ட பழம் ஏதடா 
  முட்டாளே ?
  பழத்தைப் போடு மூடா !
  பசிக்குது எனக்கு !
  பட்டிக் காட்டான்
  பறவைப் பார்வையில் 
  மரக்கிளை உலுக்க
  சரசரவென
  விழுந்தன பழங்கள் !
  மணல் கல் 
  ஒட்டிய பழங்களை எடுத்து
  ஊதி ஊதித் தின்றாள்
  ஔவைப் பாட்டி !
  பழம் சுடுதா பாட்டி !
  ஆறிய பின் தின்னென்று
  போதனை செய்தான்
  ஞானச் சிறுவன் !
  சுடாத சொல்லும் ஒருவரைச் 
  சுடுமே பாட்டி!
  சுட்ட சொல் தன்மேல்
  சுயக் காயம்
  விட்டுச் செல்லும் பாட்டி !
  சட்டி சுட்டால் 
  வலிமை பெற்றிடும் !
  மண் கலயம்
  மழையில் கரையும் !

  சி. ஜெயபாரதன் 

 3. ஓட்டு வீட்டுக்கே ஒய்யாரமாம்
  வாசத் திண்ணைக்கும் சாமரமாம்
  எங்கக் குடும்ப அரட்டையில்
  நீயில்லாத கதை யில்லையாம் ..!

  கொள்ளுத்தாத்தா காலத்துலே
  அவரே வெச்ச விதையாம் நீ
  அவரு பிள்ளை எங்க தாத்தா
  தண்ணி ஊத்த ஆசையாய்
  கிளை பரப்பி வளர்ந்தவன் நீ..!

  அப்பாவுக்குத் தொட்டில் கட்ட
  கைகொடுத்த கிளையாம் இது..!
  இப்போ இதுவும் வளர்ந்து நிக்க
  நானும் உன்மேல் சவாரி..!

  பள்ளிக் கூடம் லீவு விட்டுப்
  பத்து நாளாகிப் போச்சு..
  கத்திரி வெய்யிலும் ஆரம்பிக்க
  பைத்தியமே பிடிச்சுப் போச்சு.

  ஆத்துலே நீச்சலடிக்க
  அங்கே பொட்டுத் தண்ணியில்லே
  வீடு கட்டி விளையாடக் கூட
  ஆத்துக்குள்ளே மணலுமில்லே..!

  உன்னை விட்டா எனக்கும் இங்கே
  வேறே கதியுமில்லே நட்புமில்லே
  என்னை விட்டா உனக்கும் எங்கே
  வேறே மரமுமில்லே துணையுமில்லே..!

  உன் வேரும் கிளையும் ஓடினாலும்
  நான் ஏற ஓரிடத்தில் நிக்கிறே நீ
  எனக்கும் உந்தன் முதுகு கொடு
  படுக்கக் கொஞ்சம் எடமும் கொடு ..!

  ஒய்யார ஒட்டகமும் நீ
  பறக்கும் குதிரையும் நீ தான்
  அடி சறுக்காத யானையும் நீ
  பஞ்சு மெத்தையும் நீ தான்..!

  ஓடும் பஸ்ஸும் நீ தான்
  நான் ஓட்டும் காரும் நீ தான்
  வேகமெடுக்கும் பைக்கும் நீ
  உன் முதுகிலேறி ஓட்டுவேன் .நான்..!

  இங்கிருந்தே நாம் போய் வரலாம்
  டெல்லி மும்பாய் கொல்கத்தா
  சுற்றிப் பார்ப்போம் சந்தோஷமா

  வாழ்நாள்பூரா உன் நிழலில் தான்
  காத்திடுவேன் உனை உயிர் போல்தான்
  நாளை நான் கூட தாத்தாவாகலாம்
  நீயும் என் பேரனை இது போல் சுமக்கலாம்..!

  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 4. அடடே! இங்கே எங்கூர்ப் பசங்களையும் பார்க்கலாம்! அவர்களுடைய இசைவைக் கேட்டுவிட்டுத்தான் படம் எடுத்தேன். அதுங்களுக்கு ஒரே சந்தோசம்!

  http://viruntu.blogspot.com/2012/12/blog-post_21.html

 5. முக்கோணம்

  திக்குமுக்காடும்
  முக்கோணப் பாலன் இவன் !
  அக்கம் பக்கம் பார்த்து
  வெட்க படாதவன் !
  சிக்கனம் அறியாத 
  மக்கு !
  மரத்துக்கு மரம் தாவும்
  மந்தி  !
  பள்ளிக்குச் செல்லாமல் 
  துள்ளி  விளையாடும் 
  கள்ளன் அவன் ! 
  கோலிக் குண்டு ஆடும் 
  பாலன் அவன் ! 
  கண்ணன் அவன் என்று 
  கவி பாடினான்
  களிப்புடன் பாரதி ! அவன் 
  திருவிளையாடல்
  பெரிய புராணம் !
  பள்ளிக்குப் போவாது  
  மரமேறல் !
  மாங்கனி திருடல் !
  இன்று
  அகப்பட்டுக் கொண்டான்
  சுட்டிப் பயல் !
  விழிப்பதைப் பார் !
  காவல் காரன் கீழே
  கம்புடன் !

  சி. ஜெயபாரதன்
    

 6. திரிசங்கு சுவர்க்கம்

  ஐந்தில் வளையாதது
  ஐம்பதில் வளையுமா?
  தொட்டிற் பழக்கம்
  சுடுகாடு மட்டும்
  என்று ப்ரி கேஜிலேயே
  வளைத்துப் பழக்குபவர்கள்
  பிஞ்சில் பழுத்தவன்
  என்று நீ வளர்ந்ததும்
  ஒதுக்கலாம்!

  மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு
  ஆனால் தண்டு ஒன்றுதான்
  உயரப் போனதும் எதிலும் அமரலாம்
  ஆனால் உயரப் போக
  வழுக்கும் தண்டு
  வசப்படாமலும் போகலாம்!
  மரத்தைத் தாங்கமட்டும்
  விழுதுகள் அல்ல
  ஏற கைப்பிடியும் அது தான்
  என்றுணர்ந்ததால்
  நீ உயரத்தில்…

  கிளைகளுக்கிடையில்
  உன் இருக்கை
  தெம்பைத் தருகிறது
  திரிசங்கு சுவர்க்கமாயினும்.
  கீழே விழுந்து கிடக்கும்
  இலைகளும்
  நிழலும்
  உன்னைச் சுமக்கும்.

  மரக் குரங்கு விளையாட அல்ல
  உலகைப் பார்க்க
  நீ மரத்தில் ஏறினாய்
  இன்னும் உயரம் தாண்டிப் பயணம்
  இருக்கு
  சிரிப்பை மிச்சப்படுத்தி
  சிந்தனையைச் செம்மைப்படுத்து.

  -கனவு திறவோன்

 7. அம்மா சுட்டு வைத்த
  வடையை நீயும்
  சுட்டுத் தின்னியா?

  அப்பா சட்டைக்குள்
  கையை விட்டு
  துட்டு சுட்டியா?

  பாட்டி வெத்தலப்
  பொட்டியை நீ
  மறைச்சு வெச்சியா?

  தாத்தா ஊன்றுகோலை
  நீயும் ஒடிச்சுப்
  போட்டியா?

  செஞ்ச குத்தம்
  மறைச்சு நீயும்
  மரத்தைப் புடிச்சியா?

  இந்த மரமென்ன
  உன்னைக் காக்க
  வந்த மந்திர யானையா ?

  கால்மடித்து உன்னை
  ஏற்ற தரையில்
  அமர்ந்ததா?

  தும்பிக்கை கிளையால்
  உன்னைத் தூக்கி
  எடுத்ததா ?

  மந்திரத்தில் மாங்காயாய்
  ஒய்யாரமாய் உயரத்தில்.
  நீ எப்படி?

  கள்ளம் கொண்ட கண்களும்
  சிரிப்பை அடக்கும் முகமுமே
  சொல்லாமல் சொல்லுதடா
  உன் குறும்பை ..!

  உண்மையைச் சொன்னா
  உன்னை விட்டுடுவோம்
  சொல்லாட்டிப் போனா
  பிச்சுடுவோம்…!

 8. இறங்கிவா மரம்வளர்ப்போம்…

  உயர்ந்த மரத்தினில் ஏறிநின்றே
       உலகம் பார்க்கும் சின்னவனே,
  பயிராய் இதனை வளர்த்திட்ட
       பாட்டனை என்றும் மறவாதே,
  உயிராய் மரங்களைக் காக்காமல்
       வெட்டிச் சாய்ப்பதை விரும்பாதே,
  இயன்ற வரையில் மரம்வளர்ப்போம்
       இனிதாய் வையம் வளம்பெறவே…!

  -செண்பக ஜெகதீசன்…

 9. வனப்பான அனுமான் 

  ஊரெல்லாம் புகார் செய்யும்
  தீராத சுட்டிப் பையன் !
  பள்ளிக்குச் செல்லாப் பாலகன் !
  கல்லால் அடித்துத்
  தெருப் பயல்களை எல்லாம்
  காயப் படுத்துவான் ! 
  சொல்லால் திட்டிப் பிறருடன்
  சண்டை ! சண்டை !
  சண்டை !
  அண்டை வீட்டுப் பெண்ணைச்
  சீண்டி அழ வைப்பான் !
  தோண்டி ஒளிப்பான் திருடிய
  பணத்தை !
  தந்தைக்கும் அஞ்சான் !
  தாயிக்குப் படியான் ! 
  பெற்றோர் ஈன்ற பொழுதை
  முற்றும் சபிப்பார் ! 
  தோட்டக் காரன்
  தடிக்கு மட்டும் பயம் !
  பிடிக்க முடியாத சுண்டெலி !
  பறக்கும் குரங்கு ! 
  வாலில்லா வானரம் ! 
  ஆயினும்
  வனப்பான அனுமான் !
  மரக்கிளையே அவன்
  மாளிகை ! 
  யார் பிடித்துக் கொடுத்தாலும்
  ஆயிரம் ரூபாய் 
  வெகுமதி !

  சி. ஜெயபாரதன்.

 10. பறவையான பிறகு 
  அமரும் மரங்களெல்லாம் 
  போதியாகின்றன….

  கவிஜி 

 11. இல்லண்ணே சின்னண்ணே
  நீ சொல்றாப்புல இல்லண்ணே
  பக்கத்தூட்டு சாய்ந்த ஏணி
  மரத்துக்கிட்ட நின்னிச்சி..!

  ஆசைப்பட்டு ஏறிப்புட்டேன்
  கிளைமேலே எம்பிக்கிட்டேன்
  எறங்கப் பார்த்தேன் ஒண்ணுமில்லே
  ஏணியை தான் காணலையே..!

  நேரம் போனதே தெரியலையே
  கட்டெரும்புத் தொல்லை தாங்கலியே
  யார் முகம் வந்து காட்டலியே
  பயத்துலே பேச்சுக் கூட எழும்பலையே..!

  கூப்பிட்ட குரலுக்கு வரவில்லையே
  வேண்டாத தெய்வம் இங்கில்லையே
  அம்மா சுட்ட வடை ஒண்ணு கூட திங்கலை
  அப்பா சட்டைப் பை துட்டும் எடுக்கலை

  பாட்டியோட வெத்தலை பொட்டி
  நானெடுத்து எங்கும் மறைக்கலே ..
  தாத்தாவின் ஊன்றுகோலை
  எப்பவும் நான் ஒடிக்கலே..!

  ‘வேப்பமர உச்சியில் நின்னு
  பேயொண்ணு ஆடுதுன்னு..’.பாட்டிதை
  கேட்டுப்புட்டு வியர்த்து நானுமிங்கே
  மரப்பல்லியா ஒட்டிக்கிட்டேன்..!

  உன்னை இங்கே பார்த்ததும் தான்
  போன உசிரும் பொறந்துச்சு
  ஏணி கொஞ்சம் எடுத்து வந்து
  இறக்கி விட மாட்டியா?

  பட்டுப்புட்டேன் பட்டுப்புட்டேன்
  தனியா நல்லா மாட்டிக்கிட்டேன்
  இனிமேல் இதுபோல் குறும்புசெய்து
  வம்பை விலைக்கு வாங்க மாட்டேன்..!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 12. என்னைப் போல் ஒருவன்..!

  உன்னைப் போலே நானும் தான்
  ஒரு மரத்தைக் கூட விட்டதில்லை..!

  சின்னப் பெண்ணாய் நில்லாமல்
  சப்போட்டா மரம் ஏறுவேனே ..!

  மாமரத்த்தின் உச்சிக்கு
  போட்டி போட்டு எகிறுவேனே ..!

  கொய்யா மர கிளையிலே
  ஊஞ்சல் கட்டி ஆடினேன்..!

  வேப்பமரக் கிளையிலே
  குரங்கைப் போலத் தாவினேன்..!

  புளியமரக் கொம்புக்கிடையிலே
  புலி வேஷம் போட்டுப் பதுங்கினேன்..!

  ஆலமர விழுதைப் பிடித்து
  சுற்றிச் சுற்றித் தொங்கினேன்..!

  தென்னைமர வேறேடுத்து
  குச்சு வீடு கட்டினேன்…

  எல்லாம் நடந்து கடந்தாலும்
  இன்னும் நல்லா நினைவிருக்கு

  உன்னைப் போலே அன்றெனக்குத்
  தம்பிகள் கூட இருந்ததுண்டு

  காலச் சக்கரம் சுழலும் வேகம்
  திக்குக்கொன்றாய் பிரிந்து விட்டோம்

  இன்றுனை கண்ட நேரமுதல்
  நினைவுகள் பின்னோக்கி நகருத்தப்பா..!

  இனிமை நினைவுகள் மீட்டெடுத்த
  அருமைச் சிறுவன் நீயன்றோ ..!

  எங்கள் உள்ளம் கவர்ந்திழுத்த
  சுட்டிப் பயலும் நீதானே..!..

  சின்ன வயதில் உன் வலிமை
  வல்லமை இதழில் பகர்ந்திருக்க

  கவிதைகள் வருமே உனைப்பாடி
  குருவும் அருள்வார் உனைத் தேடி

  பலரின் வாழ்த்தைப் பெறுவாயே..!
  மனம்போல் மரம்போல் உயர்வாயே..!

  அன்பாய் அழைத்துப் பேசத்தான்
  உன் பெயர் கூடத் தெரியாதே..!

  இருந்தும் உன்னை அழைகின்றேன்
  மஞ்சள் சட்டைக் காரனென்றே..!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 13. பெரிய பச்சை மரமே
  உன் கிளையை எனக்குத்
  தருவாயா?

  தாவி தாவி விளையாட அல்ல
  தாபரம் வேண்டி.

  விரட்டும் நாய்
  மிரட்டும் சிங்கம்
  எதுவுமில்லை
  மிட்டாய்த் தருகிறேன் இறங்கி வா…
  பள்ளிக்குப் போகலாம் இறங்கி வா…
  உயரம் உனக்கு உபத்திரவமே இறங்கி வா…
  என்று என்னை இழுத்து இறக்க
  நிற்குது கூட்டம் கீழே.
  நீ சாயாத வரை
  நான் தரையில் விழேன்.

  மரத்தைக் கொன்று
  வார்த்தையைப் படைக்கும்
  பாடம் வேண்டாம்
  கரும்பைக் கூழாக்கி
  இனிப்பைப் பிரித்துத் தரும்
  மிட்டாய் வேண்டாம்
  வானம் காட்டும் உன் உயரம் வேண்டும்
  கசப்பை விதைக்கும் பழமே போதும்.

  பெரிய பச்சை மரமே
  உன் கிளையை எனக்குத்
  தருவாயா?

 14. கத்திரி வெயிலில் 
      கண்ணா மூச்சாட
  கண்களில் தெரிந்தது
     காணும் உயரமும்
  கடவுளின் கருணையால்
     காலாற அமர்ந்திட
  கானகம் போன்ற
     கிளைகளுடன் வளர்

  நல்மரம் உன்னை
     நானும் பார்த்தே
  நன்றியாய் வளர்கிறேன்
     நாளைய நிழலாய்
  நம்பிக்கை தரவே
     நன்னெறி யேகி
  நாளும் பெற்றவர்
     நயம்படக் காத்திட

  மரமாய் இருக்க
     மனிதர்க்கு நிழலாய்
  மாபெரும் கூடாய்
     மனைதேடும் பறவைக்கு
  தென்றல் தவழ
     தேடிடும் கிளையாய்
  தினமும் விளையாட
     திண்ணையாய் எனக்கும்

  இன்னமும் வியப்பே
     இதுகாறும் நீயிருக்க
  எதிர்படும் வீதியில்
     எல்லாம் சாய்ந்தும்
  உனைமட்டும் விலக்கி
     உயிர் காத்தவர்
  எந்தை எனும்போது
     எண்ணிலடங்கா மகிழ்வே

  இதுபோல் சொந்தம்
     இனிதாய் இருந்தால்
  இன்பம் பொங்கி
     இல்லம் சிறந்து
  வாழ்வே சுகமாய்
     வருவோர் பலமாய்
  ஒருவரின் நிழலாய்
     மற்றவர் இருக்க

  உன்னிடம் கற்று
     உளதெலாம் கொடுத்து
  ஓங்கும் புகழொடு
     ஒற்றுமை சிறந்து
  உலகம் போற்ற
     உயர்வோம் என்றும்
  உன்னால் பெருமை
     இந்நாள் அறிந்தேன்

  விளையாட்டாய் வந்தயென்
     விழிப்பார்வை திறந்தாய்
  வீதியொரு மரம்நட
     வீறுகொண் டெழுவோம்!
  இனிவரும் சமுதாயம்
     இன்பமாய் வாழ்ந்திட
  இன்றே உறுதிகொண்டு
     இனிதாய் வளர்ப்போம்!

  வீணில்செல் நீரை
     உன்வழி செலுத்த
  விண்ணெட்டும் உயரம்
     வீதியில் நீவர
  விளையாட சிறுவர்காள்
     வருவார்கள் உணர்வார்கள்
  என்போல் அவர்களும்
     எங்கும் மரம்நட

  அழகிய வனமாய்
     ஆகட்டும் உலகெலாம்!

 15. ஏணி  இல்லை    

  எட்டிப் பார்க்கும்  இளஞ்சிங்கம்
  ஏணி மீது ஏறிய பின்
  இறங்க முடியாமல் தவிக்குது !
  எற்றித் தரையில் கிடக்கும் 
  ஏணியோ பார்த்துச் சிரிக்கிறது !
  கத்தம் போட்டாலும்
  காதுகள் இல்லை !
  கால் வலிக்குது பாலனுக்கு !
  வயிறும் காயுது
  பையனுக்கு !
  ஏணி வைக்க வேணும் 
  இப்போது !
  இதற்கு உதவி கிடைப்பது
  எப்போது ?

  சி. ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன்  

 16. பிறகு பறக்கலாம் வா…….

  பாட்டி கூறிய இரவுக் கதையில் 
  மாயக் கண்ணன் செய்த மயக்கும் லீலையை 
  காலை எழுந்தவுடன் நீயும் செய்ய 
  குச்சி வைத்து விரட்டும் அன்னை யசோதையிடம் 
  தப்பித்து மரம் ஏறி அமர்ந்தாயோ நந்தனே …. 

  கிளை பிடித்து ஏறுதல் 
  சுலபம் அன்றுதான் —ஆனால் 
  கிடைத்த இடத்தை தக்கவைத்துக் 
  கொள்ளுதல் என்பது சாமான்யம் அல்ல 
  என கற்றுக் கொடுக்க யாரேனும் 
  காத்திருக்கலாம் வா கண்ணா கீழே …. 

  தாயின் அன்பு தரும் உனக்கு ஒருஇறகு
  தகப்பனின் பொறுப்புணர்வு கற்றுத் தரும் 
   மற்றொரு இறகு ….சகோதரியின் பாசம் 
  தாத்தா பாட்டியின் அரவணைக்கும் அருகாமை 
  மாமனின் வலிமை 
  சுற்றத்தின் அருமை என 
  ஒவ்வொன்றும் தரும் ஒவ்வொரு 
  வண்ண இறகுகள் உன் 
  வாழ்க்கை வளம் பெற 
  உதவும் சிறகுகளாய் …. 

  பொய்யற்றுச் சூது அற்று 
  கள்ளம் அற்று கபடம் அற்று 
  அன்பெனும் எல்லையில்லா 
  வானம் பார்க்க ஆளுக்கொன்றாய் 
  சொருகி வைத்த இறகு விரித்து 
  பறக்கலாம் சிறிதுக் காலம் கடந்த பின் ….. 

  மலை விட்டி இறங்கி 
  அன்னையிடம் சேர்ந்து மகிழ்ந்த 
  ஆறுமுகன் போல 
  மரம் விட்டு இறங்கி வந்து 
  அம்மாவை அனைத்துக் கொள்ளேன் 

 17. மரத்தில் ஏறிய காரணம் என்ன?

  மாட்டிக் கொண்ட பட்டத்தை எடுக்க
         மரத்தின் மீதேறி அமர்ந்தாயோ
  போட்டியைக் காண்கின்ற ஆசையை கிரிக்கெட் 
         பொங்கிட வைத்து விட்டதோ
  கூட்டுக்குத் திரும்புகின்ற குருவிகள் கண்டு
  குதூகலம் அடைந்திட வந்தாயோ?
  காட்டுப்புலி உன்னைத் துரத்த பயத்தில்
         கலவரம் அடைந்து விட்டாயோ

  காட்டுப்புலி பயமென்றால் கவலைப் படாதே 
         காவலர் இருக்கின்றார் இறங்கிவிடு
  வீட்டினில் அமர்ந்து படித்தால்தான் நல்லது
         விளையாட்டில் கவனம் செலுத்தாதே
   மூட்டுவலி மருந்தாக தாத்தா கேட்டுவிட்ட
         மூலிகை தேடிஎன்றால் மகிழ்வேனே
  பாட்டினில் நான்சொல்லும் கருத்து இதுதான் 
         பயம்ஆசை இரண்டும் வேண்டாமே

 18. தாத்தா வெச்ச மரம்…!

  பாட்டி என் கால்கள்
  மீதேறி சாஞ்சாடியச்
  செல்லப் பேரன் நீ ..!

  தாத்தா அவரின் முதுகை
  வாகனமாக்கி ஓடு
  ஓடென விரட்டி
  மகிழ்ந்த பேரன் நீ ..!

  நீயிருந்த இல்லத்தில்
  இனிமை மட்டுமே
  தெரிந்தது எங்களுக்கு..!

  உன்னைச் சுற்றியே
  எங்களுக்கு உலகம்
  சுழன்றது ..!

  எங்களைச் சுற்றிச்
  சுற்றி வந்த உந்தன்
  பாதம் பார்த்து
  நாங்களும் பிள்ளை
  போல் மாறி நடந்தோம்..!

  பந்தபாச உறவுகள்
  வெறும் வேஷமென
  விஷமாய் வசனங்கள்
  உயிரைக் கிழிக்கும்
  அந்த வேளை ..!

  விலைவாசி கணக்குப்
  பேசி அரை வயிறைக்
  கால் வயிறாய்
  மாற்றிய போதும் ..!

  உன்னைப் பெற்றவனே
  தலையாட்டி பொம்மையாய்
  மாறி நின்ற போதும் ..!

  அறையில் உறங்கிய
  எங்களைப் பிரித்து
  ஏளனம் செய்து
  தள்ளிய போதும் …!

  பெற்றவளை பாரமென
  முகத்தில் அடித்துச்
  சொன்ன போதும்..!

  போனால் போகிறதென்று
  பொறுத்துப் கொண்டோம்
  உனக்காக..!

  உயிர்போக்கும்
  வழி அறியாது
  உன் முகமே
  ஆறுதலாய் நம்பி
  அழுதோம் நாங்கள்…!

  அதுவும் பொறுக்காத
  பெண் மனமோ எங்களை
  அனுப்பி வைத்தது
  முதியோர் இல்லம்…!

  உன்னைப் பிரித்து
  விட்ட நிம்மதியில்
  ஆழ்ந்து உறங்கிட
  அவர்களால் முடியும்..!

  உன்னைப் பிரிந்த
  உண்மையை ஜீரணிக்கக்
  கூட முடியாது
  தவிக்கும் உயிர்
  யாருக்குப் புரியும்?

  என்றோ வைத்த
  வேப்ப மரத்தில் உன்னை
  ஏற்றிவிட்டு மகிழ்ந்த
  நாங்கள்…!

  உனக்கு எங்களையே
  மரமாய் நிறுத்தி விட்டு
  சொல்லாமல் வந்துவிட்டோம்..!

  எங்கள் நெஞ்சம்
  உன்னையே சுற்றி வர
  உந்தன் கால்கள்
  தாத்தா மரத்தைச்
  சுற்றிவரும்..!

  அதுவரை பாட்டி
  உன் நிழல்படத்தை
  நெஞ்சோடு அணைத்து
  நிறைவாள் மனம்..!

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 19. அத்தமனம் 

  காலைக் கதிரோன் எழுவது போல்
  பாலன் உதித்தான் ! 
  ஆண் பிள்ளை !
  மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும்
  மனை வீட்டில் !
  உன்னினிய முகம் காணுவதே தினம்
  என்னினிய பொழுது போக்கு !
  எட்டு வயதில்
  அன்று என்ன வானது ?
  பாலன் உனைத் தேடி
  காலன் வந்தான் ! 
  மரத்தில் ஏறிய நீ விழுந்த பின் 
  மீளவே இல்லை !
  பூமகளுக்குப்
  பிள்ளை யானாய் !
  உதித்த பால சூரியன்
  அத்தமனம் !

  சி. ஜெயபாரதன்

 20. தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத

  அற்புதச் சிறுவனா நீ ? – வீட்டினுள் அடையாது

  கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் – குளுமையான

  வேப்ப மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?

  ஓடியாடி விளையாடுதல் – பம்பரம் சுற்றுதல்

  கோலிக்குண்டு – மரம் ஏறல் இவைதாம்

  உனக்கு பிடித்தமான விளையாட்டுகளோ ?

  உந்தன் வீரத் தழும்புகளே சொல்கின்றனவே !

  மரத்தில் எத்தனை பறவைக் கூடுகள்

  ஒவ்வோர் கூட்டிலும் எத்தனை முட்டைகள்

  தெளிவாய் கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?

  நாளை நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !

  இரவில் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்

  படுத்தபடியே வானைப் பார்த்து

  நிலவை இரசித்து வெள்ளி எண்ணினால்

  உறக்கமும் ஆனந்தமாய் கண்கள் தழுவாதோ ?

  பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை

  உனது சொத்து !- இயற்கையின் மடியில்

  உன் ஆனந்தம் நிலையானதாக

  மரங்களை காக்க உறுதி கொள் !

 21. நிழல் கொடுப்போம்

  நாளும் தவமிருந்து
  நான் பெற்ற வரமடா நீ
  என் கனவுகளின் மெய்பொருளும்
  கவிதைகளின் உட்பொருளும்
  நீ மட்டுமே

  சின்னக்கல் உன்னை இடரினாலும்
  என் சிந்தை கலங்குமடா
  உயரத்தில் உனைப் பார்க்க
  என் உள்ளம் நடுங்குதடா

  தள்ளாடித் திரிந்த தகப்பனவன்
  சொல்லாமலே போய்விட்டான்
  அதனால்
  பொல்லாத வறுமையை காட்டி
  உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
  தேநீர் கடைக்கு
  தெருவோரம் தாள் பொறுக்க
  மெக்கனிக் ஷெட்டிற்கு
  மேலத் தெரு ஓட்டலுக்கு
  உழைக்கச் சொல்லி அனுப்பி
  அதில் உயிர் வாழ்வேன்
  என  நினைத்துத்தான்
  மரமேறிச் சென்று என்
  மனத்தை வதைக்கிறாயா

  நீவீத் தலைவாரி 
  நெற்றியில் முத்தமிட்டு 
  பாடசாலை செல் பைந்தமிழே
  என நாளும் வழியனுப்பும்
  பாவேந்தன் பேத்தியடா நான்!

  எட்டாதக் கல்வியினை
  எப்பாடு பட்டேனும் உனக்களித்து
  யாரும் எட்டாத உயரத்தை
  உன்னை எட்டச் செய்வேன்

  இப்போது இறங்கி வா 
  வறுமையை வென்று
  வாழ்வை வசமாக்குவோம்
  வளர்ந்த மரமாகி
  வறியவர்க்கு நிழல் கொடுப்போம்

 22. முயற்சி 
  வேப்ப மரப்பேய் விரட்டி 
  விளையாட விளையாட்டாய் 
  ஏறிய மரக்கிளையில்  வந்தமர்ந்த 
  காக்கைகள் எனக்கு ஒற்றுமை பற்றியும் 
  குயில்கள் சங்கீதத்தையும் 
  கிளிகள் பேச்சின் இனிமையையும் 
  மயில்கள் நடனத்தின் சூட்சுமத்தையும் 
  சொல்லித்தந்த வேளை 
  வந்தமர்ந்த கழுகுமட்டும் 
  சமூகத்தில் நெளியும் 
  மூட நம்பிக்கை பாம்பை வட்டமிடும்
  பார்வை சொல்லிக் கொடுத்ததால் 
  முயற்சிக்கிறேன்.

  *மெய்யன் நடராஜ் 

 23. வல்லமை 13 படக்கவிதை
  சாகசம் பண்ணிய பரவசம்!…

  என்ன பண்ணுவாய்! என்ன பண்ணுவாய்!….
  உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
  முன்னும் பின்னும் தேடித் தேடி
  என்னே ஒரு இடம் கண்டேன்!
  தொட்டுப் பிடிக்கும் விளையாட்டில் என்னைக்
  கிட்டே யாரும் நெருங்க முடியாதே!
  சட்டென்று சொல்லுங்கள் வெற்றி எனக்கென்று
  கிட்ட வருவேன்! அதுவரையிங்கு தான்!

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  23-5-2015.

 24. வல்லமை 13 படக்கவிதை
  ஏகாடம் பண்ணாதீர்கள்!

  நிகாசம் இல்லாத ஆனந்தம்!
  மகாராசா போலவோ ஒரு
  மகாவீரன் போல இங்கு
  விகாசமான ஒரு சிம்மாசனம்!
  ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
  ஏறாதே முடியாது என்று!
  ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
  சகாயம் எமக்குத் துணிவொன்றே!

  (ஏகாடம் – ஏளனம். விகாசம் – மலர்ச்சி.  நிகாசம் – உவமை.)

  பா ஆக்கம்.
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  23-5-2015.

 25. வல்லமை 13 படக்கவிதை
  தகுதியைத் தக்க வைப்போம்!

  எப்படியோ மேலே ஏறிவிட்டேன்
  எப்படிக் கீழிறங்குவது இனி!
  மேலே ஏறினால் நிலையக் 
  கீழிறங்காமல் காப்பது எப்படி!
  இலஞ்சம், ஊழல், சாதி,
  மதபேதம், உயர்வு தாழ்வெனும்
  சகதிக்குள் மீண்டும் குதிப்பதா!
  தகுதியைத் தகவு ஆக்குவோம்!

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  23-5-2015

 26. போனால் போகட்டும் போடா

  படிக்கின்ற நேரத்தில்

  பட்டம்விட்டு

  திரிந்தாய்

  காலை மாலை

  கண்டபடி 
  சுற்றினாய்
  சொல்லச் சொல்ல
  கேட்காமல்
  நாயின் வாலைப்போல்

  நிமிராது நின்றாய் 

  படிக்கும்போது 
  இல்லாத பயம்
  அடிக்குப் பயந்து
  மரமேறி அமருகிறாய்

  போனால் போகட்டும்
  வெற்றியும் தோவியும்
  வீரனுக்கழகு
  ஒன்பதாவதுதானே
  அடுத்தமுறையாவது
  அயராமல் படித்து
  உயரப்பார்

  அடிக்கமாட்டேன் 
  இறங்கி வா
  மேயும் மனதை
  அடக்கி ஒடுக்கி
  மெய்யாய் படித்து
  மேன்மை அடையலாம் வா
  இந்தமுறை
  போனால் போகட்டும் 
  வாடா என் கண்ணா
  வந்து சாப்பிடு..
  அம்மா அடிக்கமாட்டேன்
  இது சத்தியம்.

  சரஸ்வதிராசேந்திரன்

  ..

 27. நீ வேரு
  நான் வேறு
  ஆயினும்….,
  எப்படி பரப்பினாய்
  எனக்கான கிளைகளை?
  எதிர்பார்ப்பு அறியா
  இயற்கை சேவகன்
  நீ என்றால் அதற்கு
  நிகருண்டா
  உன்னை மரம் என்பவனோடு நான்
  மல்லுக்கு நிற்பேன்
  உன்னை வரம் என்று போற்றி
  உயிர்வரை காப்பேன்.

  ரோஷான் ஏ.ஜிப்ரி.

 28. என் வதனம் மலர்க்கிறதே இறுமாப்புப் பூக்களை……

  இமயம் தொட்ட இறுமாப்பு
  இதயம் நிரப்பி நிற்கிறது!
  உச்சிக் கிளையின் உயரத்தில்
  அச்சமின்றி நானும் வீற்றிருக்க…
  பச்சை இலைகளின் குழுமை
  இச்சையுடன் என்னுள் பரவுகிறது!
  உயரத்தில் உட்கார்ந்த போதில்
  உலகத்தின் இயக்கம் தெரிகிறது தெளிவாக!
  பூமியின் நிலப்பரப்பில் நின்றபோழ்து
  சமாந்தரத்தில் தெரியாமலே போயின பல…….
  மேலே பறக்கும் பறவையின் பார்வை போல்
  துலக்கமாகத் தெரிகிறது துல்லியமாக!
  உச்சிக் கிளைக்குச் சென்றதனால் …!!

  உயரே சென்று உச்சிக் கொப்படைய
  செய்த முயற்சிகளில் –கைகால்கள்
  கொண்ட வடுக்களும் வலிகளும் ஏராளம்!
  கால்கள் வழுகியதும் கைப் பிடி தவறியதும்
  மேல் கொண்ட விழுப்புண்களும் குருதியும்
  கண்ணீரும், மனம் கொண்ட கலக்கமும்
  எண்ணில் அடங்கா என்னுள்ளே ………
  தளரா மனத்துடன் உறுதியாய் பதித்த கால்கள்
  வளர்ந்த கிளைகளில் இறுக்கமாய்ப் பற்றிய
  கைகளுடன் நம்பிக்கை மனதில் கொண்டு
  கிளைகள் தாவி உச்சி அடைந்திட்ட பொழுதுகள்
  புகட்டிய பாடங்கள் அநேகம் அனுபவங்களாய்…….
  திகட்டுபவதில்லை அந்த நடைபாதைகள்- ஆனாலும்
  கண்ணீர் திரைகளூடே தெரிந்த தெளிவான உலகம்
  அழகான காட்சிகளின் தொடர்களாய் நிறைகிறது
  பழக்கமாகிப் போன பழைய உலகத்தின் இயக்கத்தில்
  வேறு ஒரு பரிமாணம் தெரிகின்றதே என்னுள்
  உறுதியுடன் உச்சியில் அமர்ந்திருக்கும் போழ்து
  தன்னம்பிக்கை என்னுள் சுடர்கிறதே பிரகாசமாய்
  என் வதனம் மலர்க்கிறதே இறுமாப்புப் பூக்களை
  உச்சிக் கிளையின் உயரம் உல்லாச அழகு
  மெச்சுகின்றதே என் விக்கிரமாதித்த விடாமுயற்சியை!
  இமயம் தொட்ட இறுமாப்பு இதயம் நிரப்பி நிற்கிறது

  புனிதா கணேசன்
  22.05.2015

 29. ஊரின் நுழைவில்
  கண்மாய் தூர்த்துக் கிடக்கிறது
  சாவடித் திருப்பம் கடந்ததும் வரும்
  மாதையன் தாத்தாவின் தோட்டம்
  கற்கள் நடப்பட்டு விற்பனைக்கு
  மலர்வல்லி அம்மன்
  கான்கிரீட் கோவிலுக்குள் குடி புகுந்து
  நாட்கள் பலவாகி விட்டிருக்கலாம்

  பெரிய மேட்டுத் தெருவில் இப்போதெல்லாம்

  ஓட்டு வீடுகள் காணக் கிடைப்பதில்லை

  ஊர் நடு ஆலமரத்தடிச் சாவடியில்

  சீட்டாடும் பங்காளிகள் காணோம்

  சின்னத் தெரு முடிவில்
  ஓங்கி நிற்கும் அய்யனார்
  சோர்ந்து நிற்கிறார் வயதின் காரணமாய்
  வடமூலைக் குளக்கரை ஒட்டிய
  என் மறுவீடான அப்பச்சி மரத்தை
  அடி நிழலில் நின்று நிமிர்ந்து பார்க்கையில்
  சுடர் சித்தப்பா பரிசளித்த
  பொத்தான்களற்ற மஞ்சள் சட்டையணிந்து
  பால்யத்தைத் தேடிச் சோர்ந்த என்னையே
  உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்
  பால்யத்தின் நான்.

 30. கிராமத்து குட்டி வேங்கை
  மாநகர பூங்கா மரத்தினிலே, வியப்பும் ,பயமும் கலந்த உணர்வு கலவை
  உன் கண்ணிலே கசிவதை உணரமுடிகிறது என்னால் .

  ஏதோ வழக்கத்திற்கு மாறாய் நிகழ்வுகள் அரங்கேருகிற
  உன் பார்வை விரிப்பில்
  நம் ஊரில் விறகிலே வெந்த பானை இங்கே
  மின்சாரத்திலே வேகுகிறதோ ?

  குப்பியில் அடைத்த பழைய நீரை பணம் கொடுத்து குடிக்கிறார்கள்
  வீட்டு வேலைக்கு வேலையாள் அமர்த்தி விட்டு
  வீணாய் நடை பயில்கிறார்கள்,
  இயற்கை மாசுபடுத்தி சொகுசாய் கண்களை மூடி
  மழுந்தில் பயனிக்கிறர்கள்.

  பன்னாட்டு சந்தை கொண்டு உயர் ரக பொருட்களை உற்பத்தி செய்து
  கழிவையும் நச்சு காற்றை நம் பூமிக்கு தருகின்றனவா தொழிற்சாலைகள்.

  நமது உன்னதமான முகவரியையும் நாகரிகத்தையும் தொலைத்து விட்டு
  கேடுகெட்ட மேலைநாட்டு (அ) நகரீகத்தை தலையில் வைத்து ஆடும்
  இந்த சமுதாயத்தை கண்டு வேதனைப்படவும் அதை களையவேண்டும் என
  கனா காண மட்டுமே எங்களுக்கு ஆண்டவன் சக்தியை கொடுத்திருக்கிறான்.

  ஆனால் உன்னில் வீரிய சிந்தையாலும் விரைபேறிய தசைதிறனாலும்
  தொலைந்த நம் முகவரியை மீட்டெடுத்து மானுடம் எந்நாளிலும் மண்ணுலகில்
  மகிழ்வாழ் வாழ என் கனவுகளை உன் கரங்களில் சமர்பிக்கிறேன் …..

 31. இமயமும் மரக்கிளையும்

  இமயமலை உச்சியில் 
  ஏறிப் பார்த்தால் 
  அடிவாரம் யாருக்கும் தெரியுமோ ? 
  மரக்கிளை மேல் தாவிப்
  பார்த்தேன் !
  மண்தரை  நன்றாய்த் தெரிந்தது !
  குடிசை இல்லாத ஒருத்தி 
  குடியிருக்க கண்டேன் !
  பணமுள்ளோர் பலர் சூதாடப்
  பார்த்தேன் ! 
  சிறுவன் ஒருவன் வேருக்குச்
  சிறுநீர் ஊற்றுவான் ! 
  நாயொன்று எச்சிலை
  மேயக் கண்டேன் !
  கிழவர் ஒருவர் நிம்மதியாய்
  நிழலில் தூங்குவார் !

  சி. ஜெயபாரதன்

 32. புங்கை மரமேறிப் புத்திலையைத் தான்சுருட்டி
  அங்கைகொண் டந்நாளில் வாசிப்போம் – பொங்குமிசை
  எல்லையெலாம் தாண்டி இழுத்துவரும் இன்பமதை!
  இல்லை அதற்கின்(று) இணை

Leave a Reply

Your email address will not be published.