க. பாலசுப்பிரமணியன்

education

 மூளைஒரு உன்னதமான படைப்பு

ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு விசித்திரமான படைப்பு. எப்படி ஒருவனுடைய கைரேகைகள் அவனுக்கே உரித்தானதாக இருக்கின்றதோ அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஆகவே ஒருவரைப் போல மற்றவர்கள் சிந்திப்பதோ, இல்லை கற்பதோ இயற்கையில் நடப்பதில்லை.

ஒரு தனி மனிதனுடைய மூளை அவன் பிறப்பு மற்றும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதால். ஒவ்வொரு மனிதனுடைய சிந்திக்கும் திறனும் முறைகளும் ஒரு தனி வரைபடமாக அமைகின்றது .(cognitive map ) . நம்முடைய பார்வைகள் மூளையால் அலசப்பட்டு அதற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கும் செயல் ( meaning making )  மிகவும்  திறன் வாய்ந்த செயல். இதைச்  செய்வதற்கு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்தவாறு செயல்படுகின்றன. ஆகவே, ஒரே பொருளை இருவர் நோக்கும் பொது அதன் அர்த்தங்கள் வேறு வேறாக இருக்க வாய்ப்புண்டு. இதனுடைய தாக்கம் கற்றலில் அதிகமாக ஏற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவருக்கும் கற்கும் திறன், ஆழம், முறை மற்றும் அவர்களின் அர்த்தங்கள் மாறுபட்டிருக்கும். உதாரணமாக ஒரு விபத்தை இருவர் நோக்கினால் இருவருடைய பார்வைகளும், சிந்தனையும் அதன் பாதிப்பால் ஏற்படும் செயல்களும் வேறாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மனிதனுடைய இந்த மூளை மற்ற பிராணிகளின் மூளையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது?

ஒரு மனிதனுடைய மூளை வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 1300-1400 கிராம் எடை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இதற்க்கு மாறாக ஒரு கொரில்லா குரங்கின் மூளை சுமார் 450 கிராமும் ஒரு டால்பின் மீனுடைய எடை 1800 கிராமும் ஒரு திமிங்கலத்தின் மூளையின் எடை 7800 கிராமாகவும் இருப்பதாக விஞ்ஞானப் பரிசோதனைககளால் அறிய முடிகின்றது..

நம்முடைய மூளை எதனால் ஆனது? இது சுமார் 78 விழுக்காடு தண்ணீராலும் 10 விழுக்காடு கொழுப்புச் சத்துக்களாலும், 8 விழுக்காடு ப்ரோடீன்களாலும் ஆனது என்று விஞ்ஞான சோதனைகளால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூளையின் எடையும் வடிவும் ஒவ்வொரு மனிதருக்கும் சிறிதளவில் மாறுபட்டிருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளும், ஈடுபாடுகளும், ஆர்வங்களும் மாறுபட்டு இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டால் நம்மில் பலர் ஏன் ஒருமித்த கருத்துடையவராக இல்லை என்பதை நன்கு உணரலாம். மற்றும் ஏன் ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளும் கற்பனைத் திறன்களும் கற்றலும் மாறுபடுகின்றது என்பதையும் உணர முடியும்.

ஆகவே, ஒரு வீட்டில் குழந்தைகளைப் பார்த்து பெற்றோரும், பள்ளியில் மாணவனைப் பார்த்து ஆசிர்யர்களும் “அவன் எப்படிப் படிக்கிறான் பார். நீ ஏன் அவனைப் போல் படிக்க மாட்டேன் என்கிறாய் ” என்று வாதிடுவது அறியாமையின் அறிகுறி.

ஜான் மெடினா என்ற உலகப் புகழ் வாய்ந்த மூளை நரம்பியல் பேராசிரியர் கூறுகின்றார்.” எவ்வாறு ஒரு பெரிய இசைக் கச்சேரியில் பல இசைக் கருவிகள் ஒருங்கிணைந்து வாசிகின்றதோ, அது போல நமது மூளையின் பல பாகங்கள் எப்பொழுதும் ஒன்றாக இணைந்து செயல் படுகின்றன. சொல்லப்போனால் நமது மூளையின் உள்ளே ஒரு இசைக் கச்சேரி எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.”

இந்த இசைக் கச்சேரியில் நமது பங்கு என்ன? இந்தக் கச்சேரியின் நடுவில் நாம் இடைத் தரகர்களாகி  பாடல்களின் போக்கை மாற்ற முடியுமா? போகப் போக நமக்குப் புரியும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *