-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

வேலா என அழைத்தால்
வினை அகற்றி நின்றிடுவாய்
கந்தா என அழைத்தால்
காலனை நீ ஓட்டிடுவாய்
அரக்க குணம் அழித்துவிட்ட                     Lord Murugan
அரனுடைய அருட் குமரா
அடியவரின் வேண்டு தலை
அய்யா நீ கேட்டிடுவாய்!

குன்றுதோறும் நின்று கொண்டு
குறை கேட்கும் குமரையா
நன்று செய்வார் வாழ்வெல்லாம்
நஷ்டம் வரல் ஏனையா?
கொன்று நின்று குவிக்கின்றார்
குதூகலத்தில் குலவு கின்றார்
குணக் குன்றே குருபரனே
கொதிக்கிறதே உள்ளம் எலாம்!

பிரண வத்தை  அறியாத
பிரமனை நீ சிறையிலிட்டாய்
பேர் ஆசை அசுரது
பெருங்கனவை உடைத் தெறிந்தாய்
கலி யுகத்தின் கடவுளென
வந்துதித்த கந்தா நீ
காணாமல் இருப் பதற்குக்
காரணத்தைச் சொல்லி விடு !

ஆணவத்தில் இருப் பவரோ
ஆட்சிதனைச் செய் கின்றார்
அறம் பற்றி எண்ணுதற்கு
அவர் மனமோ மறுக்கிறது
மதம் கொண்டு எல்லோரும்
மற்றவரை வதைக் கின்றார்
மகாதேவன் மைந்தனே நீ
மெளனமதைக் கலைத்து விடு!

ஈராறு முகம் உடையாய்
எங்கள் தமிழ் கடவுளையா
ஊர்தோறும் உன் கோவில்
உச்சமாய் இருக்கு தையா
பேராறாய் உன் கிருபை
பெருக்கெடுத்து வந்து விடின்
வேரோடி நிற்கும் இந்த
விஷமெல்லாம் அகன்று விடும்!

குவலயத்தில் உள்ள மக்கள்
குறையின்றி வாழ வேண்டும்
குணங்கெட்ட மனம் உடையார்
குமரனடி தொழ வேண்டும்
நலம் சிறந்த வாழ்க்கையினை
நாடெல்லாம் பெற வேண்டும்
நாதனது தவப் புதல்வா
நல்கி விடு அடியவர்க்கு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *