இலக்கியம்சிறுகதைகள்

மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)

பவள சங்கரி

மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

a07134i5இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

images (1)

ஒரு பௌர்ணமி நாளில் அதற்கான விடை கிடைக்கக்கூடும் என்ற உள்ளுணர்வின் உந்துதலில் அன்று காலை முதலே அன்ன ஆகாரமின்றி, வேம்பின் புனிதக் காற்றை உண்டபடி கண்ணிமைக்காது கந்திற்பாவையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தி மயங்கும் இனிய தருணம். சூரியனைக் கண்டு மலர்ந்த மொட்டுக்கள், சந்திரனைக் கண்டு நாணம் கொண்டு துவண்டு வீழ்ந்தது. மீண்டும் கதிரவனின் காட்சிக்காக மொட்டையும் ஈன்றுச் சென்றது. கூட்டில் அடையப்போகும் புள்ளினங்களின் மெல்லிய கீச்சொலியும் கூட அடர்ந்த அமைதியின் ஊடே சீறிப்பாய்ந்த வானூர்தி வெடியானது. நினைத்தது நடந்தது. வெகு நாட்களாகக் கேட்டதும் கிடைத்தது. ஆம் கந்திற்பாவை அசைய ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல அம்பிகையாக உருக்கொண்டாள். வந்தவளின் பிரகாசம் மலை முழுதும் மின்னலாய் வெட்டியது. சுதாரித்து சுய நினைவிற்கு வந்தவன், விடுத்த வினாக்களில் முதலானது பாவையவளின் மென்னியைத் திருகும் இசைக்கருவியின் மெல்லிய நரம்புகள் பற்றியதுதான்.. கேட்க நினைத்த அனைத்திற்கும் கிடைத்த விடைகள் அவன் ஞானத்தெளிவிற்கு அகண்ட பாதைகளாய் அமைந்தது.

இவ்வுலகில் பிறக்கும் அனைத்து உயிர்களும் தனியாகத்தான் பிறக்கின்றன. தனியாகத்தான் மரிக்கின்றன. இதில் இடையில் வரும் உறவுகள் அனைத்தும் மாயத்தோற்றம்தான். தனிமை மட்டுமே சாசுவதம். இதனை உணர்ந்துகொண்டாலே மனம் தெளிவு பெறுகிறது.

உலகோரை உய்ய வைக்கும் உன்னத இசையை வழங்கும் அக்கருவியின் நீண்ட நரம்புகள் அதன் தன்மையிலேயே விலகாமல் நிற்கிறது. இதமாய் இசை மீட்டிட இதயம் நாடுகிறது. இங்கிதம் உணரா உத்வேகம் உந்தித்தள்ள உறுதியாய் நிற்கிறது. போராட்டத்தில் வெற்றியின் இலக்கை வேகத்துடன் நெருங்க மலையையும் மென் நரம்புகளால் இழுக்க எத்தனிக்கிறது. தோல்வி முகம் துன்பத்தைக் கொடுக்கிறது. பற்றே பலவீனம். ஆசையும், பற்றுமே துன்பத்திற்குக் காரணம். ஆசையை விலக்கினால் துன்பம் சூரியனைக் கண்ட பனியாய் விலகும். தவங்கள் பலப்புரிந்த நல்லிதயம் அது. உலகோருக்கு வாழும் வழியுணர்த்த விழையும் சீவனது. புத்தராய் மாறும் தருணமிது. நற்காட்சி , நற்சிந்தை, நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என தன்னகத்தேக் கொண்ட அனைத்தையும் உலகோருக்குத் தெரிவிக்கும்பொருட்டு உவந்து நிற்கும் வித்தையது. மாந்தருக்கு வாழ்ச்சியை உணரச்செய்யும் உவமையது. புத்தமாய் ஒளிரும் தருணமிது!

ஞானம் பெற்ற புத்தன் புனிதனானான். புத்தர்களை  உருவாக்கப் புறப்பட்டான்!

படங்களுக்கு நன்றி

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

  1. Avatar

    மிக ஆழமான கருத்தை இயற்கையில் மலரவிட்டு உயிர்க்காவியமாகப்  படைத்தீர்கள் !  பாராட்டுக்கள்

  2. Avatar

    தமிழ் நடையழகும், தேர்ந்த சொல்லழகும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கருத்தாழம் நிறைந்த எழுத்தும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வாழ்த்துக்கள்.

  3. Avatar

    நற்காட்சி , நற்சிந்தை, நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என தன்னகத்தேக் கொண்ட அனைத்தையும் உலகோருக்குத் தெரிவிக்கும்பொருட்டு உவந்து நிற்கும் வித்தைய தெரிவித்தமைக்கு நன்றி வணக்கம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க