புதிய கீதை
தமிழ்த்தேனீ.
நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. மந்திர கோஷம் காதில் வந்து இனிமையாக ஒலித்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒருவர் சந்தனம் நீட்டினார், ஒருவர் பன்னீர் தெளித்தார்.
“அடேடே! வாங்கோ வாங்கோ” என்று மகிழ்ச்சியுடன் கைகளைப் பற்றிக் கொண்டு, “நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம், உக்காருங்கோ” என்று நாற்காலியைக் காட்டினார் நடேசன்.
எதிரே இருந்த மணமேடையில் திருமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஹோமகுண்டத்தின் புகை நடுவே தேவர்கள் போல் அமர்ந்திருந்தனர் கண் இமைக்காமல், அவ்வப்போது கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி.
நாற்காலியில் உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினேன். பெண்கள் 1500 ரூபாய்கள் கொடுத்து நன்றாக அழகாக இருந்த தலைமுடியை நேராக, குட்டையாக ஆக்கிக் கொண்டு சிலர் புடவையிலும், பலர் பேண்ட் சொக்காயுடனும் வலம் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்க்கும்போது விட்டலாச்சாரியார் திரைப்படத்தில் வரும் மோகினிப் பிசாசு நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
“கெட்டி மேளம் கெட்டிமேளம்” என்று குரல் கேட்டது. திருமாங்கல்ய தாரணம் ஆயிற்று.
கையிலிருந்த அக்ஷதையையும் பூக்களையும் அருகே சென்று போட வழியில்லாமல், கூட்டம் அலை மோதியது. ‘திருப்பதிக்கு செல்கிறோம்’ என்று கூறுபவர்களை நம்பி காசு போடுவது போல, நாம் திருப்பதிக்கு காசு போட்டாயிற்று என்கிற மன நிறைவுடன் மனதை சமனப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்தே தம்பதிகள் தலையில் போடுவதாக நினைத்துக் கொண்டு முடிந்த அளவு எட்டி வீசினோம். அந்த பூக்களும் அக்ஷதையும் முன்னால் நின்றிருந்த பல பேரின் தலையில் விழுந்தது. ஆனால் மனதுக்குள் ஒரு திருப்தி தம்பதிகளை ஆசீர்வதித்தாற்ப் போன்று.
இப்போதைய நடைமுறையில் யாரும் வந்து. ” உணவு உண்ணுங்களேன்” என்று உபசரிக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட பல பேர் வரிசையில் நின்று பரிசுப் பணத்தை அளித்து விட்டு தாமாகவே உணவுக் கூடத்துக்குள் நுழைந்து உண்டுவிட்டுக் கிளம்பினர்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மனைவி, ” ஏன் உங்கள் முகம் கடுகடுப்பாக இருக்கிறது?” என்றாள்.
“இங்கே காணும் காட்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை. பழைய திருமணங்களில் பெண்கள் நன்றாக தலை பின்னிக் கொண்டு பூ வைத்துக் கொண்டு மங்களகரமாக காட்சி அளிப்பார்களே, அன்பாக உண்மையான பாசத்துடன் வரவேற்பார்களே, மரியாதையாக அழைத்துப் போய், உண்ணச் சொல்லி கூடவே இருந்து கவனித்து பாசமழை பொழிவார்களே என்று நினைத்தேன். அதனால் இந்தக் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க கோபம் வருகிறது, அது சரி நீ எப்படி சற்றும் பாதிப்பில்லாமல் சிரித்த முகமாக இருக்கிறாய்!” என்றேன் மனைவியிடம்.
“நான் இங்கே நடப்பதைப் பார்க்கவில்லை, மணமேடையில் ராதையும் கிருஷ்ணனும்,அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். கோபிகா ஸ்த்ரீகள் சுற்றிலும் இருந்து நடனமாடுவதைப் பார்க்கிறேன். மனம் சந்தோஷமாக இருக்கிறது” என்றாள்.
எதிரே இருந்த மனைவி கிருஷ்ண பரமாத்மா போலவும் நான் அர்ஜுனன் போலவும், அவள் கூறிய சொற்கள் கீதை போலவும் ஒலித்தது எனக்கு.
‘ஆமாம் நம் மனநிலையைக், காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்’ என்னும் கீதை எனக்கு புரிந்தது.
உண்மைதான் . நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்
இப்போதெல்லாம் பெரும்பாலான திருமண நிகழ்வுகள் அனைத்தும் ஒரு செயற்கை கலந்த நிகழ்வுகளாகவே நடக்கின்றன. நகரத்தின் விரைவு வாழ்க்கைக்கு உகந்தபடி திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அது போல ஒரு இயந்திரத்தனமான நிகழ்வுகளாகவே திருமண நிகழ்வுகள் தொன்னுற்றுஒன்பது சதவிகிதம் நடைபெறுகின்ற என்பது கண்கூடாக காண்கின்ற உண்மை. திருமண நிகழ்வுகள் அனைத்தும் இப்போது “ஒப்பந்த அடிப்படையில்” நடைபெறுவதால் வருகின்ற விருந்தினர்களை கூட வரவேற்க்க அழகாக உடையணிந்த பெண்களை நிறுத்திவைக்கும் மனப்பான்மையும் இப்போது உருவாக ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம் திருமணம் விழாக்கள் அனைத்தும் “பிக்னிக் ஸ்பாட்” போல ஆகிவிட்டது என்பதுதான் நடைமுறையில் உள்ள உண்மை. இது போன்ற விழாக்களில் சொந்தங்களை சந்தித்து பேசிடலாம் என்றால் அவரவர்களுக்கு நேரமே இருப்பதில்லை. பெரும்பாலான திருமண நிகழ்வுகளில், வந்து தலையை காட்டிவிட்டு போய் விடலாம் என்று வந்தேன். எனக்கு நேரமே இருப்பதில்லை ரெம்ப பிசி என்ற வார்த்தைகளே அதிகமாக கேட்டு கேட்டு சலித்துவிட்டது. வந்திருக்கும் கொஞ்சநஞ்ச சொந்தங்களும் திருமணம் முடிந்து மதிய உணவுக்கு பின் பார்த்தால் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த நேரத்தில் பொண்ணு மாப்பிளை வீட்டாருடன் உடனிருப்பது சில நண்பர்கள்தான் என்ற உண்மையும் தெரியும். அவரவர்கள் தங்களது சக்தியினை…. வசதியினை…. வெளிப்படுத்துவதற்காக… எடுக்கப்படும் ஒரு “விழா” என்ற உணர்வுகளை நமது உள்ளத்தில் பல திருமண நிகழ்வுகள் உண்டாக்கி விடுவதுதான் உண்மை நிலை. இது நகர் புறங்களில் மட்டுமே. இன்னமும் ” பழமை மாறாத திருமணங்கள்… அன்பு பணிவு கலந்த உபசரிப்புக்கள்…. உண்மையான எதிர்பார்ப்புக்கள்” கூடிய திருமணங்கள் கிராமங்களில் மாறவில்லை. ம்ம்ம்….காலத்துக்கு தகுந்தவாறு கொஞ்சமாவது மாற்றிக்கொண்டு செல்லவேண்டியதுதான் அதற்க்காக … வந்தவர்களை வரவேற்க கூட பணியாளர்களை நியமிப்பது கொஞ்சம் ஒவராக இருக்கிறது என்பதுதான் வருத்தமாக உள்ளது. இந்த உணர்வுகளை எல்லாம் மறந்துவிட்டு ராதையாக……கண்ணனாக….. காண்பதற்க்கு உள்ள மனம் எனக்கு இல்லை என்பதுதான் உண்மை….!
நிஜமாகவே இது புதிய கீதை தான். நான் நினைத்துக்கொள்வது உண்டு. இந்த கிருஷ்ணன் மட்டும் பெண்ணாய் பிறந்திருந்தால், இந்த மஹாபாரத யுத்தம் நடந்திருக்காது என்று. கதாசிரியரின் பெண்ணிய கோட்பாட்டிற்கு, என் வாழ்த்துக்கள்.