எழுத்தறிவித்தவன்…………

1

பவள சங்கரி

அன்புச் செல்லங்களே!

நலமா? இன்று ஆசிரியர் தினம் அல்லவா? எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினீர்களா?

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடுகிறோம்?

சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் அவர் பொறுப்பேற்ற தருணத்தில், அவருடைய மாணவர்கள் சிலர் அவரிடம் சென்று அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட விருப்பம் தெரிவிக்க, அவர், தம் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறவும், அன்றிலிருந்து  ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியப் பணிக்கு அவர் எத்தகைய மதிப்பளித்திருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறதல்லவா?

ஆசிரியப் பணியின் உன்னதம் பற்றி அறிவீர்களா நீவிர்? வாழ்க்கையில் ஒரு நல்ல குரு அமைவதென்பது பூர்வ புண்ணிய பலன் ஆகும். அரிஸ்டாடில் பற்றிக் கேள்விப்பட்டிருகிறீர்களா? யார் அவர்?

2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானி, அறிவுஜீவி, சிந்தனையாளர், விஞ்ஞானி. அரிஸ்டாடில் விட்டு வைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவிற்கு  விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மேதை.  அந்தத்  துறைகள் அதுவரைக் கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகப்படுத்திய ஆசிரியர்! ஆம் அவருடைய மேதைமையைப் பார்த்து உளம் மகிழ்ந்த  மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அரிஸ்டாடிலுக்கு அழைப்பு விடுத்தார். அந்த மகன் யார் என்று அறிவீர்களா?

அவர் வேறு யாருமல்ல. கைப்பற்ற வேறு தேசம் இல்லையே என்று கலங்கிய மாவீரன் அலெக்ஸாண்டர் தான். 20 ஆண்டுகள் கிரேக்க தத்துவ ஞானி, பிளேட்டோவிடம் பயின்ற மாணவன் அரிஸ்டாடிலிடம் பயின்ற அலெக்ஸாண்டர், ஒரு முறை தம் சக மாணவர்களுடன், அரிஸ்டாடிலுடன், ஒரு ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில், வெள்ளம் சீற்றம் கொண்டு இருந்த ஆற்றில் முதலில் தான் இறங்கி நீந்திக் கடந்து திரும்பி வந்து பிறகு தன் குருவான அரிஸ்டாடிலை இறங்கச் சொன்னாராம். அப்போது குரு தன் மாணவனின் பக்தியைக் கண்டு வியந்து, ‘உனக்கு ஏதும் ஆகியிருந்தால் என்ன ஆவது?’ என்று கேட்டபோது, அலெக்ஸாண்டர் சற்றும் தயங்காது, ‘என்னைப் போன்று பல அலெக்ஸாண்டர்களைத் தங்களால் உருவாக்க முடியும். ஆகவே தாங்கள் உயிர் வாழ்வது முக்கியம்’ என்றாராம்! ஆகா, என்னே, குருபக்தி!

சரி என்னோட ஒரு ஆசிரியர் பற்றி ஒரு சுவையான சம்பவம்…..நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிற ஒரு மலரும் நினைவு! நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, ஜெனிஃபர் என்று என்னோட ஆங்கில ஆசிரியர். அவர் ஆங்கிலப் பேச்சு மொழி கற்றுத் தருவதில் மிக வல்லவர். அவருடைய ஆங்கிலப் பேச்சிற்கு மிகப் பெரிய ரசிகை நான். ஒவ்வொரு நாளும் ஒரு சொல்லாடல் கற்றுக் கொடுத்து, மறுநாள் வகுப்பில் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் காட்ட வேண்டும் என்று விரும்புவார். நான் எப்படியும் ஏதோ ஒரு முறையில் அதை பயன்படுத்தி விடுவேன்.

அன்று  மார்க் ஷீட்டில் பெற்றோரின் கையெழுத்து வாங்கி வர இறுதி நாள். அந்த முறை என் அத்தையின் திருமண் சமயம் என்பதால், வீட்டில் நிறைய விருந்தாளிகள் இருந்ததால் பரீட்சை ஒழுங்காக எழுதாமல், மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தேன். அப்பாவிடம் கையெழுத்து வாங்கும் போது கண்டபடி திட்டுவார் என்று தெரியும். வீட்டில் இருந்த விருந்தாளிகள் முன்பு திட்டு வாங்க விரும்பாத நான், கையெழுத்து வாங்காமலே பள்ளி வந்துவிட்டேன். என் ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பு ஆசிரியர். அவ்ர் முதல் நாளே சொல்லி அனுப்பியிருந்தார். கையெழுத்து வாங்காமல் வருபவர்கள் வகுப்பின் வெளியே நிற்க வேண்டுமென்று.

முதல் நாள் அவர் சொல்லிக் கொடுத்த புதிய ஆங்கில வாக்கியம், “WOULD YOU MIND GIVING ME……….”

நானும் அதை பயன்படுத்திக் கொண்டு, அந்த ஆசிரியர் வகுப்பினுள் நுழையும் முன்பே வெளியே சென்று நின்று கொண்டேன்.அவர் உள்ளே வரும் போதே நான்,

“MAAM……WOULD YOU MIND SENDING ME INSIDE THE CLASS ROOM…….. I DIDN’T GET SIGNATURE IN THE PROGRESS REPORT, FROM MY FATHER. HE IS OUT OF STATION”  என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும், அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. உடனே, சிரிப்பை அடக்கிக் கொண்டு சரி, உள்ளே வா…… என்று சொல்லி விட்டார்கள். பிறகு அடுத்த நாள் அப்பாவிடம் மோசமாக திட்டு வாங்கியது வேறு கதை………

நீங்களும் உங்கள் பள்ளி நிகழ்ச்சிகளையும், ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே குட்டீஸ்…………

பெற்றோராக இருந்தாலும் சரி உங்களின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாருங்களேன்……….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுத்தறிவித்தவன்…………

  1. மூர்த்தி என்று எனக்கு ஒரு கல்லூரித் தோழன் இருந்தான். கல்லூரியில் இருவரும் ஒரே துறை, ஒரே வகுப்பு.

    எங்களுக்கு முனைவர் சங்கரன் என்பவர் விரிவுரையாளராக இருந்தார்.

    மூர்த்திக்கு இரவுகளில் கண்விழித்துப் படித்துப் பழக்கம் இல்லை. ஆனாலும் ஒரு இரவு வெகு நேரம் விழித்துப் படித்ததால் அடுத்த நாள் பகலில் கூட தூக்கக் கலக்கத்தில் இருந்தான் மூர்த்தி. மதிய உணவுக்குப் பின் அவனையறியாமல் கண்கள் மூட ஒரு கணம் மட்டும் உறங்கிவிட்டான்!

    அதைப் பார்த்துவிட்ட சங்கரன் சார் அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க திடீரென்று அவனை எழுப்பி ”ரயில்வே டிராக் எங்கே மீட் பண்ணும் மேன்?” என்று கேட்டார். மூர்த்தியும் சளைக்காமல் “ஜங்ஷன் லே சார்!” என்று சொல்லியவாறு விழிக்க வகுப்பு மொத்தமும் சிரித்துவிட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.