முதல் பீரியடு
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
சிறப்புக் கட்டுரை
சு.கோதண்டராமன்
ஒரு நகர உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் காலைப் பிரார்த்தனை நடைபெறுகிறது. ஆங்காங்கு உள்ள வகுப்பறைகளில் ஒலிபெருக்கி மூலம் அதைக் கேட்டுக் கொண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் எழுந்து கண் மூடிக் கைகூப்பி நிற்கிறார்கள். ஆறாம் வகுப்பு அறை ஒன்றில் நம்முடைய காமிரா ஃபோகஸ் செய்கிறது.
தேசீய கீதம் பாடப்பட்டு முடிந்தபின் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து எல்லோரும் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டுத் தொடர்கிறார்.
“மாணிக்கம், தேசீய கீதம் பாடும் போது நேரே நிக்கணும்னு சொல்லி இருக்கேன்ல, ஏன் கூனிக்கிட்டும் குனிஞ்சுகிட்டும் ஆடிக்கிட்டும் இருக்கே. ஒழுங்கா நிக்கணும். தெரியுதா?”
“சரி சார்.”
“மானிட்டர், வீட்டுப்பாட நோட்டெல்லாம் வாங்கி வெச்சுட்டியா?”
“வெச்சுட்டேன் சார். வெங்கடேசனும் சாமிநாதனும் கொடுக்கல்லே, சார்.”
“வெங்கடேசன், சாமிநாதன் ரெண்டு பேரும் எந்திரிங்க. ஏன் வீட்டுப் பாடம் செய்யலே?”
“பேனா இல்லே, சார்.”
“ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தா பேனா. வெளியிலே உக்காந்து எழுதி முடிச்சிட்டு உள்ளே வா.”
“உனக்கு என்னடா?”
“எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லே சார். அதனாலே…”
“அதனாலே?”
“எங்கப்பா கடையைப் பாத்துக்கச் சொன்னார், சார். அதனாலே பாடம் எழுத நேரம் இல்லே.”
“நீயும் வெளியிலே உக்காந்து எழுதிட்டு உள்ளே வா. “சரி. எல்லோரும் தமிழ்ப் புத்தகம் எடுத்துக்கங்க. நேத்தி என்ன பாத்தோம்? ஆறாவது பாடம் மூணாவது பத்தியை எடுத்துக்க. பரமசிவம் நீ படி.”
“கோவலன் சிலம்பை விற்கக் கடைத்தெருவுக்குப் போனான். கண்ணகி ஆயர் பாடியில் தங்கி இருந்தாள். அப்பொழுது பல கெட்ட சகுனங்கள் ஏற்பட்டன….”
“சகுனம்னா என்ன சார்?”
“சகுனம்னா, வரப்போற நல்லதோ, கெட்டதோ அதை முன்கூட்டியே தெரிவிக்கிற நிகழ்ச்சிக்கு சகுனம்னு பேரு. உதாரணமா, ஒரு வேலையா வெளியிலே போறோம்னு வெச்சுக்க, பூனை குறுக்கே போச்சுன்னா போன காரியம் சரியா நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இது கெட்ட சகுனம். அதே போல, வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் போனா, கால்நடையாப் போனவங்க வரும்போது வாகனத்திலே வந்து இறங்குவாங்கன்னு ஒரு நம்பிக்கை.”
“இதெல்லாம் உண்மையா சார்?”
“நம்பிக்கைன்னு தானே சொன்னேன். சில பேரு நம்பறாங்க. சில பேரு நம்பறதில்லே. கண்ணகி தங்கியிருந்த ஆயர்பாடியிலே இதை நம்பினாங்க. கெட்ட சகுனங்களைப் பார்த்துட்டு ஏதோ கெடுதல் நடக்கப் போகுதுன்னு பயந்தாங்க. சரி நீ மேலே படிடா.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“சார், அட்டெண்டன்ஸ்.”
(ஏவலர் அந்த வகுப்புக்கான வருகைப் பதிவேட்டையும் ஒரு உண்டியலையும் வைத்துவிட்டுப் போகிறார்.)
“சரி, அட்டெண்டன்ஸ் சொல்லுங்க.”
(அன்பழகன், ஆராவமுதன், பாலசுப்பிரமணியன் என்று அவர் படிக்கப் படிக்க, மாணவர்கள் ப்ரெசன்ட் சார், எஸ் சார், இருக்கேன் சார், உள்ளேன் ஐயா என்று பல விதமாகப் பதில் அளிக்கிறார்கள்.)
“ஏண்டா சுந்தரமூர்த்தி நேத்து வரல்லியா?”
“வரல்லே சார்.”
“ஏன் வரலை?”
“சொரம் சார்.”
“லீவு லெட்டர் வாங்கிட்டு வந்தியா?”
“இல்லே சார்.”
“ஏன்?”
“எங்க அப்பா ஊருக்குப் போயிருக்காங்க சார்.”
“அம்மா கிட்ட வாங்கிட்டு வரது.”
“அம்மாவுக்கு எழுதத் தெரியாது சார்.”
“சார், அவன் பொய் சொல்றான். நேத்து மத்தியானம் அவன் கிட்டிப் புள்ளு விளையாடிக்கிட்டு இருந்தான், சார்.”
“எப்போடா?”
“நேத்தி மத்தியானம் நான் சாப்பிட வரக்கொள்ளே, நீ அடுத்த வீட்டுப் பையனோட விளையாடிக்கிட்டு இருந்தீல்ல?”
“இல்லே சார், பொய் சொல்றான் சார்.”
“நெசம் தான் சார்.”
“இல்லே சார்.”
“சரி போதும், நிறுத்திக்க. சுந்தரமூர்த்தி, வெளியிலே போய் மண்டி போட்டுக்க. நாளைக்கு லீவு லெட்டரோட வரணும், இல்லேன்னா அம்மாவோட வரணும். தெரியுதா?”
“காதர் மொய்தீன், நீ ஏன் வரலே நேத்திக்கி?”
“வீட்டிலே மௌலூது ஓதினாங்க சார்.”
“சரி லீவு லெட்டர் எங்கே?”
“இதோ இருக்கு சார்.”
“இதிலே கையெழுத்துப் போட்டது யாரு?”
“எங்க அண்ணன் சார்.”
“அப்பாகிட்டே ஏன் வாங்கல்லே?”
“அப்பா பயணம் போயிட்டாங்க சார்.”
“உங்க அண்ணன் என்ன செய்யுறாரு?”
“பத்தாவது டி செக்சன் படிக்கிறாரு சார்.”
“எங்கே?”
“நம்ம ஸ்கூல்லே தான் சார்.”
“பேரு என்ன?”
“காதர் நவாஸ்.”
“மானிட்டர், நீ போய்க் கூட்டிக்கிட்டு வா.”
“சரி சார்”
(வந்தவர்களின் எண்ணிக்கையைச் சரிபார்த்துப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு கரும்பலகையில் வந்திருக்கிற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறார்.)
“சரி, மேலே படி.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
(மீண்டும் ஏவலர் வருகிறார்.)
“சார், மிட் டே மீல்ஸ் அட்டெண்டன்ஸ்.”
“மதிய உணவு சாப்பிடறவனெல்லாம் நில்லு. எட்டு தானே இருக்கு. வராத ரெண்டு பேர் யாரு?”
“கிருஷ்ணமூர்த்தியும் சூசையும் சார். “
(அந்தப் பதிவேட்டில் எட்டு பேருக்கும் வருகையைக் குறித்து விட்டு ஏட்டை ஏவலரிடம் கொடுக்கிறார். வாங்கிக்கொண்ட ஏவலர், கொடிநாள் காசு வசூலாயிடுச்சான்னு ஹெட்மாஸ்டர் கேக்கச் சொன்னார் சார் என்கிறார்.)
“மானிட்டர், கொடிநாள் காசு எவ்வளவு வசூல் ஆகியிருக்கு?”
“இருபது பேர் தான் கொடுத்திருக்காங்க சார்.”
“ஏன் பாக்கிப் பேர் கொடுக்கல்லே? கொடுக்காதவனெல்லாம் நில்லு.
இத பாருங்கடா, நாளைக்குள்ளே பத்துப் பத்துப் பைசா கொண்டு வந்திடணும். தெரியுதா?”
“எங்க அப்பா தரமாட்டேங்கிறாரு சார்.”
“ஏண்டா?”
“இந்த வாத்தியாருக்கு வேறே வேலை இல்லியா, எதுக்கெடுத்தாலும் காசு புடுங்கிட்டு இருக்காருன்னு சொல்றாரு சார்.”
“எனக்காகவா கேக்குறேன்? போன மாசம் பாகிஸ்தான்காரன் படையெடுத்து வந்தபோது உசிரை விட்டு நம்ம எல்லையைக் காப்பாத்தினாங்களே, அவங்களுக்காகத் தாண்டா கேக்குறேன்.”
“அவங்களுக்கு கவருமெண்டு ஒண்ணும் குடுக்காதா சார்?”
“குடுக்குது. நமக்காக உசிரை விட்டவங்களுக்கு நாம நன்றி தெரிவிக்க வேண்டாமா? அதுக்குத் தான் இந்தப் பத்து காசு. அவங்களாலே தானே நாம நிம்மதியாத் தொழில் செய்ய முடியுது, தூங்க முடியுதுன்னு அப்பா கிட்ட சொல்லு.”
“சார், மதிய உணவு உண்டிலே எவனும் காசு போட மாட்டேங்கிறான் சார்.”
“முடிஞ்சவங்கள்ளாம் குடுங்கப்பா. நம்ம கூடப் படிக்கிறவங்க எத்தனை பேரு கஷ்டப்படறாங்க. நம்மாலே முடிஞ்சது ஒரு காசோ, ரெண்டு காசோ உண்டியல்லே போடுங்க. மாசத்திலே ஒரு நாளைக்கு நீங்க மிட்டாய் வாங்கித் திங்கிறதைக் குறைச்சுக்க. அது சாப்பாடே இல்லாத எத்தனையோ பேருக்கு உதவும்பா.”
“சரி, பாடத்தைப் படி மேலே.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“சார்”
“யாருப்பா?”
“நான் தான் சார் காதர் மொய்தீனோட அண்ணன்.”
“ஏம்பா உன் தம்பி நேத்து ஸ்கூலுக்கு வரல்லே?”
“எனக்குத் தெரியாது சார்.”
“உங்க வீட்டிலே மௌலூதுன்னு சொன்னானே”
“அது போன வாரமே முடிஞ்சு போச்சு சார்.”
“அவன் ஸ்கூலுக்கு வராத விஷயம் உனக்குத் தெரியாதுங்கறே, அவனோட லீவு லெட்டர்லே நீ கையெழுத்துப் போட்டிருக்கேன்னு சொல்றான்.”
“இல்லே சார். நான் போடலே சார்.”
“உங்க அம்மா கிட்ட சொல்லி நாளைக்கு வந்து பாக்கச் சொல்லு.”
“அவங்க கோஷா, வரமாட்டாங்க சார்.”
“அப்ப, மாமா, சித்தப்பா, பெரியப்பான்னு யாரு பொறுப்போ அவங்களை வரச்சொல்லு. இந்த மாதிரி வீட்டுக்குத் தெரியாம பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டா படிப்பு எப்படி வரும்?”
“சரி சார், சொல்றேன் சார்.”
“சரி, நீ பாடத்தை மேலே படிடா.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“சார்” (அந்த வகுப்பில் அறிவியல் நடத்தும் ஆசிரியர்)
“வாங்க சார், என்ன வேணும்?”
“மாணிக்கத்துக் கிட்டே ஒரு சைன்ஸ் புக் வாங்கிக்கிறேன். கொஸ்டின் பேப்பர் குறிக்கணும்.”
“கொடுடா. சரி நீ மேலே படி.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“சார்” (பள்ளியில் ஸ்கௌட் நடத்தும் ஆசிரியர்)
“வாங்க சார்”
“ஒரு அறிவிப்பு சொல்லிக்கிறேன் சார். ஸ்கௌட் பையன்கள் எல்லாரும் கவனிங்கப்பா. இன்னிக்கு சாயங்காலம் ஸ்கௌட் கிளாஸ் உண்டு. யூனிபாரத்தோட வந்திடணும். சரி, வரேன் சார்.”
“நீ மேலே படி.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“சார் கந்தசாமி என்னைக் கிள்ளறான் சார்.”
“ஏண்டா பாடம் நடத்தவே விடமாட்டிங்களா? சின்னப் புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு. அங்கே என்ன சண்டை?”
“சண்டை இல்லே சார். நேத்தி என் பேனாவை எடுத்திட்டுப் போனான் சார். அதைத் திருப்பிக் கொடுடான்னு கேட்டேன் சார்.”
“வகுப்பு நேரத்திலே இந்த மாதிரி கலாட்டாவெல்லாம் பண்ணினே, அடி பிச்சுப்புடுவேன். சரி, நீ படிடா மேலே.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
(கையில் வீச்சரிவாளுடன் ஒருவர் வருகிறார்)
“இங்கே யாருய்யா கணக்கு வாத்தியாரு?”
“நான் தான். வாங்க. நீங்க யாரு? என்ன வேணும்? ”
“இதோ பாரு, புள்ளையை இப்படித்தான் அடிக்கிறதா?”
“ஐயையோ, ரத்தக் காயமா இருக்கே, எப்படி ஏற்பட்டிச்சி?”
“அடிக்கிறதையும் அடிச்சிட்டு வேஷமா போடறே, நானே என் புள்ளைய அடிக்கிறதில்லே. எப்படிய்யா இப்படி ரத்தம் கொட்டக் கொட்ட அடிச்சே? ஒன் கையை வெட்டிடுவேன். அதுக்கு முந்தி ஒன்னே ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போகலாமின்னு வந்தேன். ”
“நான் அடிக்கல்லை ஐயா. நான் முட்டியிலே அடிக்கிறதும் வழக்கமில்லே. ரத்தம் வரும்படியாவும் அடிக்க மாட்டேன். ”
“பின்னே எப்படிக் காயம் வந்திச்சி?”
“சொல்லுடா, நான் அடிச்சா இந்தக் காயம்?”
“…………..”
“சொல்லுப்பா, நானா அடிச்சேன்?”
“……………”
“சொல்லுடா. வாத்தியார் அடிச்சுட்டாருன்னு எங்கிட்டே சொன்னியே, இப்ப சொல்லு, அவரு முன்னாடி. பயப்படாதே, இனிமே அவரு ஒன்னே ஒண்ணும் செய்ய முடியாது.”
“அவன் சொல்ல மாட்டான்க, ஏன்னா, அவன் எங்கேயோ அடி வாங்கிட்டு வந்திருக்கான். சொல்லுடா, எங்கேடா ஏற்பட்டிச்சி இந்தக் காயம்?”
“வந்து, ….. சைக்கிள்லே விளுந்திட்டேன்.”
“அப்பறம் ஏன் வாத்தியாரு அடிச்சாருன்னு பொய் சொன்னே?”
“அப்பாவுக்குத் தெரியாம காசை எடுத்துக்கிட்டுப் போயி வாடகை சைக்கிள் விட்டேன். தெரிஞ்சா அப்பாரு அடிப்பாருன்னு தான்.”
“ஊருக்கு எளச்சவன் வாத்தியார் தானா? நல்ல வேளை நீங்க எங்கையை வெட்டறத்துக்கு முன்னாடி கேட்டிங்களே.”
“மன்னிச்சுங்க வாத்தியாரையா. பசங்க பேச்சைக் கேட்டு நான் இங்கே வந்தது தப்பு தாங்க.”
“சரி, போய்ட்டு வாங்க, நீ படிடா.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
“வணக்கம் சார். நான் பால முருகனோட அப்பா. நீங்க நேத்து வரச்சொன்னதா பையன் சொன்னான்.”
“பாலமுருகன் சரியாப் படிக்கிறது இல்லீங்க. சரியா பள்ளிக் கூடத்துக்கு வரதில்லே. ஏன் இந்த மாதிரி இருக்கான்? மார்க் ஷீட்டெல்லாம் பாத்திங்களா? ”
“அவன் ஒரு நாள் கூடத் தங்கறது இல்லீங்க. நான் அவனை தினமும் ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டுத் தான் கடைக்குப் போவேன்.”
“இதோ பாருங்க. இந்த மாசத்திலேயே நாலு நாள் வரலை. அவன் ஸ்கூலுக்குப் போறான்னு நீங்க நினைச்சுக்கிட்டிருக்கீங்க. அவன் எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கான்.”
“எனக்குத் தெரியவே தெரியாதுங்க. இனிமே நான் ஒளுங்கா அனுப்பறேன். ஒரு நாள் வராட்டியும் இதோ ஒக்காந்திருக்கான் பாருங்க எங்க அடுத்த வீட்டுப் பையன், அவன் கிட்டே சொல்லி அனுப்புங்க. நீங்க கொஞ்சம் கண்டிப்பா நடந்துக்கணுங்க. சரியாப் படிக்கல்லீன்னா, ரெண்டு கண்ணை மட்டும் வெச்சிப்பிட்டு உரிச்சி எடுத்திடுங்க. ”
“சரி, போய்ட்டு வாங்க. நீ மேலே படிப்பா.”
“மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு………”
(மணி அடிக்கிறது.)
“போச்சுடா. செக்கு மாடு மாதிரி அதிலேயே சுத்திக்கிட்டு இருக்கோம். சரி. புத்தகத்தை எல்லாம் மூடி வை.”
“சார், வீட்டுப் பாடம், சார்”
“குறிச்சிக்க. அஞ்சாவது பாடம் எல்லாக் கேள்விக்கும் பதில் எழுதிக்கிட்டு வா. பார்த்து எழுதுதல் ஆறாவது பாடம் ரெண்டாவது பத்தி.”
“தமிழ் வீட்டுப் பாடம், இங்கிலீஷ் வீட்டுப் பாடம், தமிழ்க் காப்பி நோட்டு, இங்கிலீஷ் காப்பி நோட்டு, வீட்டுக்கணக்கு நோட்டெல்லாம் கொண்டு வை.”
(ஐந்து மாணவர்கள் ஆளுக்கொரு நோட்டு அடுக்கைச் சுமந்துகொண்டு ஆசிரியர் அறைக்குப் போகின்றனர்.)
“சரி, பாக்கிப் பாடம் நாளைக்குப் பார்ப்போம்.”
(அவருக்குத் தெரியும். நாளைய முதல் பீரியடும் இதே மாதிரித் தான் கழியப் போகிறது என்று.)
/இது கதை அல்ல, நிஜம். 1965இல் நடந்தது. நிகழ்ச்சிகள் உண்மை. பெயர்கள் மட்டும் கற்பனை. அந்த பாவப்பட்ட ஆசிரியர் வேறு யாரும் அல்ல. அடியேன் தான்./
என் கரங்கள் கூப்பிய மரியாதைகளுடன் உங்களை வணங்கி வணக்கம் தெரிவிக்கிறேன்!
எனது பாட்டனார், பாட்டி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் பல உறவுகளும் ஆசிரியராக இருந்தவர்கள்! இருப்பவர்கள்! நானும் சில காலம் ஆசிரியராய் இருந்தவன் தான்! இந்த ஆசிரியர் திருநாளில் உங்களின் பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
நான் வயதில் சிறியவன்! எனக்கு வாழ்த்த வயதில்லை! இருந்தாலும்,
உங்களுக்கு எனது அன்புமிக்க ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
ஸூப்பர்! கயிறு அறுகவில்லை. ஆனா, நீங்கள் நல்லாசிரியர். எங்க மாதிரி பசங்கக் கிட்ட மாட்டிக்கொண்டிருந்தால், திண்டாடியிருப்பீர்கள். ப்ள்ளி நினைவை முன் நிறுத்தியதிற்கு நன்றி. இதழ் ஆசிரியரும், வாச்கர்களும் விரும்பி கேட்டால், படாபட் பதில் உரையாடல் தருவேன். கேட்டால் தான்.