“ஸ்ரீராம தர்ம சரிதம்” (7)
மீ.விசுவநாதன்
பகுதி: ஏழு
பாலகாண்டம்
“இஷ்வாகு குலமும் அயோத்தி தேசமும்”
மனுவில் தொடங்கி வருகிற “இஷ்வாகு”
இனக்குலம் ஓங்கி ஈடிலாப் புகழுடன் (2)
கோசல நாட்டை குற்ற மிலாது
நேச முடைய நிறைகுண மக்களின் (4)
விருப்பு அறிந்த வேந்தர் களாக
பொறுப்பு மிகுந்து பூமியை ஆண்டனர் ! (6)
அவர்களின் கதையே அயோத்தி நகரில்
நவயுக இராமன் நடத்திய வாழ்வாய் (8)
இராமா யணமாய் ஏற்றம் கண்டது !
இராவும் பகலும் இசையுடன் சொல்ல (10)
இங்கே குசனும் இலவ னுமாய்
உங்கள்முன் நிற்கிறோம்! ஒருமுக நினைவாய்க் (12)
கதையைக் கேட்டு கவலையை நீக்குவீர் !
இதைவிட நமக்கோர் இன்பம் வேறில்லை ! (14)
கோசல நாடும் சரயூ நதியும்
சூரியக் கதிர்களைச் சுண்டி இழுக்கிற
சீரிய நற்குணம் செழித்துப் பாய்கிற (16)
நதியே சரயூ ! நற்கோ சலத்தின்
நிதியே அதுதான் ! நேர்மை, வீரம் (18)
நிறைந்த மக்களை நிமிர்த்தி வைத்துத்
துறைக ளெங்கும் தூய்மை செய்து (20)
ஆற்றுப் படுத்திய அழகிய ஆறது
நோற்றுப் பெற்றதே நூதன அயோத்தி ! (22)
தசரத மன்னனின் தவத்தால் மேலும்
உசரம் கண்டதில் உலகே வியந்தது ! (24)
அழகிய தெருக்கள் ! அதிலே வேதம்
பழகிய சான்றோர் பல்லாயிர முண்டு ! (26)
வேள்விப் புகையில் வீதியில் செல்லும்
ஆள்மீது நெய்மணம் அப்பி இருக்கும் ! (28)
கல்விச் சாலையில் கற்கும் குரலுக்குச்
செல்வம் இறங்கிச் சிறப்புகள் செய்யும் ! (30)
வயல்வெளி விளைந்ததை வாரி எடுத்தே
புயலெனச் செல்கிற பொற்குண ஊழியர் (32)
வழிகளில் சிந்திடும் தானிய மணிகளைச்
செழிப்புடன் உண்டே சிறகடிக்கும் புள்ளினம் ! (34)
அறிவில் சிறந்த ஆசார்ய வசிஷ்டர்,
செறிந்த வாமதேவர், சிரஞ்சீவி மார்கண்டர் , (36)
காசிபர், ஜாபாலி, காத்யா யனரும்
யோசனை சொல்லும் உயர்ந்த மந்திரியாய் (38)
மன்னன் தசரதன் மன்றில் இருந்தனர் !
இன்னும் சுமந்திரன் என்றொரு சாரதி (40)
அருகே இருந்து அரசனைக் காத்தார் !
கருவிலே நீதி கண்ணியம் பெற்றவர் (42)
இதுபோல் நிறையவே இருந்தனர் ஆன்றோர்
புதுமை அயோத்திக்குப் புகழினைக் கூட்டவே ! (44)
தயரதனின் விருப்பமும் ஞானியர் ஆசியும்
இத்தனை இருந்தும் இல்லா ஒன்றுக்காய்
சித்தம் வருந்தி இருக்கும் வேளையில் (46)
மதிநுட்பம் கொண்ட மந்திரி சுமந்திரர்
எதிலும் கலங்கா இந்த மான்னனேன் (48)
இப்படி இருக்கிறார் என்பதை அறிந்து
அப்படியே சென்று ஆசார்ய வசிஷ்டரை, (50)
மந்திரி மார்களை வரவழைத் திட்டார் !
இந்திரன் வணங்கும் இந்த தயரதன், (52)
உள்ள மிருக்கும் ஒருவிருப்பம் சொன்னான் !
“அள்ளி எடுத்து அப்படியே முத்தமிடப் (54)
பிள்ளை என்னும் பேறு வேண்டும் !
வள்ளல் இறையோன் வரமளிக்க வேண்டும் ! (56)
பெரியோர் உங்களின் பேராசி வேண்டுமென”
கரிபல பலங்கொண்டோன் கைகட்டிக் கேட்டான் ! (58)
“பிள்ளை வேண்டி வேள்வி செய்வாய்
வள்ளல் உனக்கு வாய்க்கும் வம்சம் ! (60)
பட்டத்துக் குதிரையை பார்முழுதும் அனுப்புக !
சிட்டெனப் பாய்ந்தது செகத்தை வென்று (62)
திரும்பி வந்ததும் செய்வோம் வேள்வியை !
கரும்பாய் இனித்துக் கடலாய் நடக்கும் (64)
சரையூ நதியின் வடக்குக் கரையில்
இறையை வேண்டும் வேள்விச் சாலையை (66)
உடனே அமைக்க உத்தர விடுக !
அடைவீர் உங்கள் அகத்தின் ஆசையை” (68)
என்று யோகியர் இனிது கூறினர் !
நன்றி கூறி நம்மன்னன் நகர்ந்தான் ! (70)
மூன்று மனைவியர் முன்னே சென்று
தோன்றிய எண்ணத் தூய்மையைச் சொல்லி (72)
மக்கட் பேறு வரம்பெறும் துணைவீர்,
“துக்கம் நீங்கிடத் துலங்கிடும் வம்ச (74)
வேள்விக் கான விரத மிருப்பீர்
கோள்கள் எல்லாம் குணமே செய்திடும்” (76)
என்ற அரசனின் இன்சொல் கேட்டு
நின்ற சிலையாய் நிம்மதி முகமாய் (78)
பட்டத்து அரசிகள் பார்த்தபடி யிருக்க
கிட்டத்து வந்து கிள்ளிப் பார்த்தான் (80)
சக்கர வர்த்தி தம்முடைத் துணைகளை !
அக்கணம் மூன்று அரசியும் கணவனின் (82)
காதல் நெஞ்சிலே கூடல் செய்தே
சீதக் கனலைச் சீண்டி விட்டனர் ! (84)
சரண்மனை என்ற தயரதன்
அரண்மனை எங்குமே அமுதம் பொழிந்ததே ! (86)
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பகுதி நிறைந்தது)