கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பயிற்சி-19

0

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156

முன்னுரை

முதற்பகுதியில், பதினெட்டுப் பாடங்கள் வாயிலாகக் கல்வெட்டு எழுத்துகள் பற்றிய பயிற்சி ஓரளவு நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கக்கூடும் என நம்புகிறேன். சற்று விரிவான பயிற்சியை இந்த இரண்டாம் பகுதியில் காணலாம். அதற்கு முன்பாக, மாணாக்கருக்கு ஒரு குறிப்பு. மாவட்ட அளவில், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதி நூல்களை மாணாக்கர் வாங்கி வைத்திருத்தல் இன்றியமையாதது. அவற்றில் உள்ள கல்வெட்டுப் பாடங்கள், இன்றைய வழக்கில் உள்ள தமிழ் அச்சு வடிவத்தில் இருக்கும். அவற்றைத் தொடர்ந்து படிப்பதன் வழி, கல்வெட்டுகளில் பயின்று வரும் சொற்றொடர்களின் அறிமுகம் நன்கு ஏற்படும். அரசர் குறித்த தொடர்கள், கொடைப்பொருள்கள் (குறிப்பாக நிலக்கொடை, விளக்குக் கொடை)  குறித்த தொடர்கள், பாசனம் குறித்த தொடர்கள், வரிகள் குறித்த தொடர்கள், இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடிகள் (நைவேத்தியம்) குறித்த தொடர்கள் போன்ற பல்வேறு கல்வெட்டுத் தொடர்கள் நன்கு இனம் காணும் அளவு பதியும். இந்தப் பதிவு, கல்வெட்டுகளைப் படிக்கையில் யூகமாகப் புலப்படும். இந்த யூகத்தின் அடிப்படையில் எழுத்துகள் புலப்படும்.  இவ்வகைத் தொடர்கள், நாம் காணவிருக்கும் பயிற்சிக் கல்வெட்டுகளைப் படிக்கையில் ஆங்காங்கு விளக்கப்படும்.

பயிற்சிக் கலவெட்டின் படம் கீழே: கல்வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. படத்தைத் தேவைக்கேற்பப் பெரிது படுத்திக்கொள்ளலாம்.

Copy of IMG_20170723_113418

விளக்கம்:

வரி 1  எழுத்துகள் தெளிவாக இல்லாததால் பின்னர் முயன்று பார்க்கலாம்.

அல்லது படிக்காமல் தவிர்க்கலாம்.

வரி 2 முதற் சொல்லை ஆய்வோம். மூ, ன்  ஆகிய இரண்டு எழுத்துகள் தெளிவானவை. மூன்றாவது எழுத்து, “அ” ,  “று”   ஆகிய இரண்டு எழுத்துகளின் தோற்றமும் கொண்டுள்ளது. அடுத்து வருகின்ற ”மாவிந் கீழ்”   என்னும் தொடரோடு பொருத்திப் பார்ப்போம். “மா”  என்பது நிலத்தின் அளவைக்குறிக்கும் சொல். நினைவில் கொள்ளவேண்டும்.  எனவே, முதற்சொல்லின் மூன்றாவது எழுத்து “று”  எனக்கொள்ளவேண்டும். தவிர “மூன்”  என்பதற்கடுத்து “அ”  உயிர் எழுத்து வருவதற்கில்லை. தொடர்ந்து படிக்கையில் “அரை”  என்பது முதல் வரியின் இறுதி. எனவே, வரி 2 கீழுள்ளவாறு அமைகிறது. (குறிப்பு:  எல்லா மெய்யெழுத்துகளும் புள்ளியிடாமல் எழுதப்பட்டவை. வேண்டிய இடங்களில் புள்ளியிட்டுப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இது பயிற்சியில் வந்திருக்கவேண்டும்)

வரி-2  மூன்று மாவிந் கீழ் அரை

வரி-3  மாந்தோட்ட நிலந் முக்கா

குறிப்பு:  ”த”  எழுத்து இன்றைய “க”  எழுத்தை நினைவூட்டும். இதைத் தவிர்க்கவேண்டும்.  ”ட”  எழுத்தின் வடிவத்தைக் கருதுக. இதே        கல்வெட்டின் 5-ஆவது   வரியிலும், 6-ஆவது வரியிலும் ’ட”  எழுத்தின்       வடிவம் மாறுவதையும் கருதுக. “நிலந்”  என்னும் சொல்லை உன்னுக. நிலம் என்னும் சொல் நிலந் என்றும் கல்வெட்டில் பயின்று வரும். இது நிலன் என்பதன் திரிபு. றன்னகரம் கல்வெட்டில் தந்நகரமாக எழுதப்பெறும். நிலன் என்பது நிலம் என்பதன் திரிபு. கலம்-> கலன், பலம்-> பலன், வலம்-> வலன், புலம்-> புலன், திறம்-> திறன், அறம்-> அறன் ஆகிய சொற்களைக் கருதுக.

வரி-4  முதல் எழுத்து ஓர் அரைப்பகுதியே காணப்படுகிறது. இரண்டாவது        எழுத்து முதற் பார்வையில் புலப்படவில்லை. படத்தைப் பெரிது படுத்திப் பார்க்கையில் அது “ழ”  என அறியலாம். அடுத்துள்ள எழுத்து,       பார்வைக்குப் புலப்பட்டாலும், ஐயத்தை விளைவிக்கிறது. ஆனால், “அ”       என்னும் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தோடும்        பொருந்திப்போகவில்லை என்னும் காரணத்தால் “அ”  என உறுதி        செய்கிறோம். மிகுதியுள்ள எழுத்துகள் படிக்கும்படி உள்ளன. எனவே,

வரி-4 ழ் அரையே ஒரு மாவரை

குறிப்பு:  நிலம் குறித்த சொற்களில் “மா”, “மாக்காணி”,  “காணி”, “முந்திரிகை”

ஆகிய அளவு குறித்த சொற்களும், கீழ் அளவு குறித்த  சொற்களும் பயில்வதால் “கீழ்”  என்னும் சொல்லும் தவறாமல் இடம் பெறும். எனவே, இவ்வரியின் முதல் எழுத்து, “கீழ்”  என்பதன் பகுதியே எனத் தெளியலாம்.

வரி-5 முதல் ஓரிரு எழுத்துகள் தெளிவில்லை. படிக்க இயலா. அடுத்து வரும் எழுத்துகள் “டக்க”  எனப் படிப்பது எளிது. இதை அடுத்த எழுத்து, நம்மைச் சிந்திக்க வைப்பது. ”வ” எழுத்தை ஒத்திருந்தாலும், “வ” எழுத்தின் தொடக்கச் சுழியினின்றும் மாறுபட்டுள்ளது. மேலும், அதையடுத்து “கைகொண்ட” எனவிருப்பதாலும் முன்னெழுத்து “க”  என்றிருப்பதாலும், “கங்கைகொண்ட”  என்னும் சொற்றொடர் நம் நினைவில் தோன்றவேண்டும். “கங்கைகொண்ட”   என்ற சொல்லை அடுத்து “சோழன்”  வருவதுதானே இயல்பு? எனவே, இந்த வரியின் இறுதி எழுத்து “சோ” எனப்படிக்கப்படல்வேண்டும். இங்கே, “ங”  எழுத்து, நாம் பயின்ற எழுத்தின் வடிவினின்றும் சற்றே மாறுபட்டுள்ளது. தஞ்சைக் கல்வெட்டுகளின் எழுத்துகளுக்கும் இங்குள்ள கல்வெட்டின் எழுத்துகளுக்கும் சற்று வேறுபாடுள்ளது. தஞ்சைக்கோயில் எழுத்துகளை நாம் மையப்புள்ளியாகக் கொண்டு பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், மற்ற எழுத்துகளை மைய வடிவத்தின் முன்னும் பின்னுமான மாற்றத்தை மனத்தில் நிறுத்தியே படிக்கத் தொடங்கவேண்டும். அவ்வாறே இந்தக் கல்வெட்டு எழுத்துகள் நம் மைய எழுத்துகளினின்றும் மாறுபட்டுள்ளன.

                                     தஞ்சைக் கல்வெட்டு எழுத்து (மைய வடிவமாக)

                                                                                ங

Copy of Kalvettu18

                 பயிற்சிக் கல்வெட்டில் “ங”

Copy of Copy of IMG_20170723_113418

வரி-5 மூன்றாவது எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் எல்லாம் படிக்கும்படியுள்ளன. அவ்வாறு படித்தால், புகு( )கெமவிப்படி என்றமையும். மூன்றாவது எழுத்து கிரந்த எழுத்து. கிரந்த எழுத்துகளில் கூட்டெழுத்துகள் மிகுதியும் பயிலும். அவ்வாறான கூட்டெழுத்தே ஒவ்வெழுத்து. இதை நன்கு உற்று நோக்கின்,   என்னும் எழுத்து புலப்படும். அதன் இடப்புறம் இணைந்த பாதி எழுத்து “ந வுக்குரியது. எனவே, இது “ந்த என்றாகிறது. திருத்திய பாடம், புகுந்த கேமவிப்படி”  என்றாகும். “கேமவிப்படி”  என்பது ஒரு முழுமையான பொருளைத் தராததால், அதிலுள்ள “ம” எழுத்தைப் பெரிதாக்கிப் பார்க்கையில்   புலப்படும். எனவே,

வரி-5 புகுந்த கேழ்விப்படி

வரி-6  முதல் இரண்டெழுத்துகளும் தெளிவின்மையால் படிக்க இயலா. மற்ற எழுத்துகள் “ணைக்களம் நிருபமாத்த”  என்றமையும். முன்னுரையில் கண்டவாறு கல்வெட்டுகளில் பயின்றுவரும் தொடர்களை, நிறையக் கல்வெட்டுப் பாடங்களைப் படிப்பதன்மூலம் நாம் அறிமுகம் செய்துகொள்வோம். அரசு அதிகாரிகளின் பதவிப்பெயர்களும் அவ்வகைத் தொடர்களுள் அடங்கும். திருவாய்க்கேழ்வி, ஓலைநாயகம், திணைக்கள்ம், பொத்தகக் கணக்கு, மூவேந்த வேளான், பிரமமாராயன் போன்ற பல பதவிப்பெயர்கள்  உண்டு. இங்கே “திணைக்களம்” என்பதை எளிதில் யூகம் செய்யலாம். எனவே,

வரி-6 (தி)ணைக்களம் நிருபமாத்த

வரி-7  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. மற்றவை படிக்க இயலும் நிலையில் உள்ளன. எனவே,

வரி-7  குறித்த களத்து

வரி-8  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. அடுத்து ”சோழ  என்பது நன்கு புலப்படும். அடுத்துள்ள எழுத்து ஐயம் எழுப்பும். நன்கு பெரிதுபடுத்திப் பார்க்கையில் அது “ஈ  என விளங்கும். அதனை அடுத்துள்ள எழுத்து கிரந்தமாகையால் படிப்பது எளிதன்று. ஆங்காங்கே கல்வெட்டுகளில் வரும் கிரந்த எழுத்துகளை ஓரளவு தெரிந்துவைத்தல் தேவை. இங்கே, கிரந்தக் கூட்டெழுத்து ”ச்0வ”  என்பதாகும். எனவே,

வரி-8 சோழ ஈச்வரமுடை

குறிப்பு :  ”கங்கைகொண்டசோழஈச்வரமுடையார்”  என்பதான இறைவனின் பெயரமைந்த தொடர் இது என உய்த்துணரலாம்.

வரி-9  எளிதில் படிக்க இயலும். எனவே,

வரி-9  க்கு யாண்டு

குறிப்பு :  அரசனின் ஆட்சியாண்டு குறிக்கப் பெறுவதை யூகம் செய்யலாம்.

—————————————————

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.