ஆறுபடை அழகா…. (2)
க. பாலசுப்பிரமணியன்
திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)
சூரனை அழித்திடவே சுடர்நெருப்பாய் பிறந்தவனே
சீரலைக் கடலருகில் சீறிவந்து போர்தொடுத்தாய்
சிங்கமுகன் அண்ணனின் சிரமனைத்தும் கொய்திட்டாய்
சேவலுடன் மயிலாக்கி தன்னருளைத் தந்திட்டாய்
ஒருமுகமும் மறுமுகமும் உனக்கென்றும் ஈடில்லை
அறுமுகமும் ஒருமுகமாய் அசுரனையே அழித்தவனே
திருமுகத்தின் கண்ணிரண்டில் திருவருளைப் பெருகவிட்டு
இன்முகமாய் அடியார்கள் இதயத்தில் அமர்ந்தவனே !
விண்ணோரும் வந்திட்டார் செந்தூரில் சீர்கொண்டு
வினைதீர்க்கும் வேலோடு விளையாடும் உனைக்காண
வாகையுடன் கொடிசேர்த்து மயிலோடு மனங்கவர்ந்த
வாரணத்தின் இளையோனே செந்தூரின் சிங்காரா !
கடலோரம் நீயிருக்கக் கடலலைகள் களைப்பாறும்
காற்றோடு தாளமிட்டுக் கருமேகம் கவிபாடும்
கடலினங்கள் கரைவந்து காலடியில் விளையாடும்
கருணையுள்ள குருநாதா கண்திறந்து பாராயோ !
நலமனைத்தும் பெருகிடுமே நாழியிலே நீராட
பலமனைத்தும் வந்திடுமே பார்வையுந்தன் அருளாலே
புலனனைத்தும் அடங்கிடுமே பொன்மேனி கண்டாலே
தலமென்று சொல்லிடவே திருச்சீரலைவாய் திருத்தலமே