சுவாமிமலை (திருவேரகம்)

 

ஓங்காரப் பொருளை உலகிற்குச் சொன்னவனே

ஏங்காத நாளில்லை உன்னருளைத் தேடித்தேடி

தாங்காத துயரெல்லாம் தானாக விலகிடுமே

தணியாத அன்போடு திருவேரகம் கண்டிடவே !

 

தந்தைக்கும் குருவாகி தர்மத்தைக் காத்தவனே

தவிக்கின்ற நெஞ்சத்தின் தாகங்கள் தீர்ப்பவனே 

தானென்ற அகந்தையைத்  தகர்த்திடும் கந்தா

தரணியிலே உனையென்றித் துணையேது முருகா!

 

குருவாக அமர்ந்தாலும் குழந்தை வடிவன்றோ

வருவாயே நானழைத்தால் வாடாத முகத்தோடு

அருவாக உருவாக எதுவாக நீயிருந்தாலும்

கருவாக இருப்பாயே காலமெல்லாம் சிந்தனையில் !

 

ஓமென்று சொல்லிடுவேன் ஓராயிரம் முறைகள்

உள்ளத்தில் நீயிருப்பாய் உணர்வாகி நிறைவோடு 

உயிரோடு ஒன்றான ஓங்காரத் தத்துவமே

உனையன்றித் துணையேது உய்ந்திடவே இப்புவியில் ?

 

நீராட்டி சீராட்டி தாலாட்ட அழைத்திடுவேன்

நீயென்றும் குழந்தாய் என்றே நினைத்திடுவேன்

நீலமயில் மீதேறி வருவாயோ நித்தியனே

நிலையாத என்மனதின் நிலைகாக்க வாராயோ ! 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *