-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

திருவதிகைப் புறத்தே, இறைவன் திருவடி பதித்து விளையாடல் செய்தமையால், சுந்தரருக்கு விரைந்து தில்லைக்குச் சென்று திருவடியை வழிபடும் ஆவல் மிகுந்தது! கெடிலநதியில் நீராடித் தில்லை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். அடுத்துத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். திருவதிகைக்குள் புகாமல் ஊருக்கு வெளியே ஓடும் கெடில நதியில் நீராடி, இறைவனை நேரில் கண்டு போற்றாமல் புறத்தே நின்று அடியை மட்டும்போற்றினார் என்பதைச் சேக்கிழார்,இப்பாடலில், அங்கணரைப் போற்றி எனக் கூறாமல் அடிபோற்றி என்று கூறியதன் நயம் உணரத்தக்கது. அதனால் அந்நதியின் தென்கரை வழியே சென்றார். திருக்கோயில் அந்நதியின் வடகரையில் உள்ளது! அங்குசென்று வணங்காமைக்கு அவர் அப்பர் வழிபட்ட தலத்தை மிதியாமையே காரணம். அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். இதனைச் சேக்கிழார் ‘’மற்றந்த பொங்குநதித் தென்கரைபோய்’’ என்று பாடினார். ‘திருமாணிகுழி’ என்ற ஊரின் சிறப்பை இங்கே சேக்கிழார் கூறுகிறார்! திருமால், மகாபலிச் சக்ரவர்த்தியிடம் ஓர் அந்தணச் சிறுவனாகச் சென்றார். அவன் தன்னைப் பெற்றவரும் இகழும் குட்டை வடிவினராய்ச் சென்றார். அவனது வாமன வடிவத்தைக் கம்பர் ‘’பயந்தவர்களும் இகழ்குறளன்’’ என்பார்.

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே

என்பது கம்பர்பாட்டு! அவ்வாறு சென்ற திருமால் மாவலியின் கொடைப் பண்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றடி மண்ணை தானமாகக் கேட்டார். அவனும் சிறுவடிவினன் தானே என்றெண்ணி ‘’மூன்றடி நிலத்தைத் தந்தேன்!’’ என்று கூறியஅளவில், சிறிய வாமனன் பெரிய விஸ்வரூபம் எடுத்து மூவுலகையும் ஈரடியால் அளந்தார், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாமையால், மாவலியின் தலையிலேயே மூன்றாம்அடியை வைத்து மண்ணுக்குள் தள்ளினார்! இதனையே திருவள்ளுவர் தம்குறட்பாவில்,

‘’ மடியிலா மன்னவன் எய்தும்அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு!’’

என்றுபாடுகிறார். வாமனனாய் மூன்றடி மண்கேட்டபோது, குறளனாய்நின்று வஞ்சனையால் வளர்ந்து திருமால் அடைந்த மூவுலகையும், வஞ்சனையற்ற, சோம்பல் இல்லாத மன்னவன், ஒருங்கே அடைவான்’’ என்பது அதன்பொருள். இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோ,

‘’மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி’’

என்பார் . அதில்உள்ள வஞ்சனையை அவர் ‘’முறைநிரம்பா வகை’’ என்று கூறுவார்.மேலும் திருக்குறள்,

‘’உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து!’’

இங்கே செய்யப்பட்டார் சால்பு என்பது தாழ்ந்தவர்களைக் குறித்தும் சிந்திக்கிறது. இதனை

‘’பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று!’’

என்றுகூறுகிறது. இக்குறளில் ‘’பெற்ற ‘’ என்ற சொல் ஈட்டிய என்பதை நுடபமாக விலக்கு கிறது! அத்தகைய வஞ்சகச் செயலால்வந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள, திருமால் சிறிய மாணியாய் அதாவது பிரம்மச்சாரியாய், சிவபிரானை வழிபட்ட தலம் , ‘’திருமாணி குழி’’ ஆகும். இதனைச்சேக்கிழார்,

‘’போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழி யணைந்தார் ‘’

என்று பாடுகிறார். இப்பாடலில் உலகெலாம் தம் உடைமையாகக் கொண்ட திருமால், அற்பப் பொருளைக் கேட்டு வஞ்சனை செய்த தம் பிழையுணர்ந்து வழிபட்ட தலம் என்று குறிப்பாகப் பாடுவதன் நயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இனி இப்பாடல் முழுவதையும் பயில்வோம்.

‘’அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்த
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.’’

இப்பாடல், சுந்தரரும் உலக வாழ்க்கை இன்பத்தை நாடி இறைவனையே இகழ்ந்த தம்பிழையை மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையை விளக்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *