முன்பு ஒருமுறை, எனக்கு விடுத்த மடலில் கணிப்பொறிஞர் கோபி விடுகதை போல் ஓர் உண்மையைப் புலப்படுத்தி இருந்தார்: ‘அவைகள் உண்டு ; இவைகள் இல்லை – சரியா?’
புதிர் புரிகிறதா? புரியவில்லையா! மயக்கமாக இருக்கிறதா?இருக்கும், இருக்கும் ‘கள்’ போட்டிருப்பதால் மயக்கம் இருப்பது இயல்புதானே! இந்தக் ‘கள்’-இல் மாட்டிக் கொண்டு தமிழகமும் தமிழும் விழி பிதுங்கி மதி மயங்கி நிற்பதில் வியப்பில்லை. ‘கள்’ பற்றிய மயக்கத்தைத் தெளிவிப்பதற்கே இக்கட்டுரை.
‘கள்’ பற்றிய கருத்துகளுள் புகுமுன், ஒருமை, பன்மை பற்றிச் சில சொற்கள்: ஒன்றைக் குறிப்பது ஒருமை ; ஒன்றனுக்கு மேல் குறிப்பது பன்மை!’
எழுவாய் (அல்லது வினை) ஒருமையாக இருந்தால் வினையும் (அல்லது எழுவாயும்) ஒருமையாகவே இருக்கவேண்டும்.
எழுவாய் (அல்லது வினை) பன்மையாக இருந்தால் வினையும் (அல்லது எழுவாயும்) பன்மையாகவே இருக்கவேண்டும்.
எல்லா மொழிகளுக்கும் இவ்விதி பொருந்தும், தமிழ் உட்பட!
எந்த மொழி பேசுபவரும் இந்த விதியைக் கடைப் பிடிப்பர்,நம்மவரைத் தவிர!
I is (are) coming என்று எழுதினால்/ பேசினால் எள்ளி நகையாடுவீர்கள், ஆங்கிலம் அறியாத அறிவிலி என்று. ஆனால் தமிழில் மட்டும், ‘நாய்கள் குரைத்தது’, ‘மாடுகள் வந்தது’ என்று எழுதலாம், பேசலாம்! யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அது தவறு என்று சொல்பவர்கள் தமிழ் வெறியர்கள் ;
‘அப்படி எழுதுவதும் பேசுவதும் (ஐம்பது அறுபது ஆண்டுகளாகப்) பழகி விட்டது ; அதனால் அது தவறு இல்லை’ என்று சொல்லும் நம் மேதாவிகளை I is (are) coming என்று எழுதவும் பேசவும் சொல்லுங்களேன்!
அப்படித் தவறாக எழுதவும் பேசவும் மாட்டார்கள் – காரணம், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆங்கிலத்தைச் சரியாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டவர்கள் அவர்கள்! அதுதானே அவர்களுக்கு அப்பன், பாட்டன் மொழி! தமிழையும் அப்படிக் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே! ஏன் கற்கவில்லை? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
தமிழ் முதலான திராவிட மொழிகளில் ‘ஒருமை’ ‘பன்மை’ என இரு வகை மட்டுமே உண்டு.(ஆனால் வடமொழியிலும், வடமொழி சார்ந்த ஐரோப்பிய மொழிகளிலும் பெரு வழக்காக ஒருமை, இருமை, பன்மை என அமைந்துள்ளது! நமக்கு என் அந்த வம்பு! இருக்கும் இரண்டையுமே சரியாகப் புரிந்துகொண்ட payanpaduthuvathillai).
ஒருமையைப் பன்மை ஆக்க ‘கள்’ சேர்ப்பது வழக்கம்.
‘கள்’ சேர்த்தால் ஒன்று இரண்டாக, பலவாகத் தெரியும் அல்லவா!
இப்படிக் ‘கள்’ சேர்ப்பது தொல்காப்பியர் காலத்திலேயே (ஏன் அதற்கும் முனனால் கூட) இருந்திருக்கிறது. இயற்பெயர்ச் சொற்களைப் பன்மையாக்குவதற்கு, அச்சொற்களின் பின் கள் என்னும் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்.
‘கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே
கொள்வழி உடைய பலஅறி சொற்கே‘ (தொல்.சொல். 169).
செடி – ஒருமை ; செடிகள் – பன்மை
அவர் காலத்தில் அஃறிணைப் பொருள்களுக்குமட்டுமே இப்படி வரும்.
உயர் திணைக்கு ‘அர்’ போன்ற விகுதிகள் பன்மையை உணர்த்தின :
அவன், அவள், (ஒருமை) ; அவர் (பன்மை).
மேல் குறிப்பிட்ட நூற்பாவில், தொல்காப்பியர், ‘கள் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு’ என்று கூறியிருப்பதை உணர்க.!
அவர் காலத்தில் கள் விகுதி சேர்க்காமலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பதைக் குறிப்பால் அவர் உணர்த்துகிறார் . கள் விகுதியோடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்கிறார் தொல்காப்பியர்.
தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே
(தொல்.சொல். 171)
சங்கப் படால்கள் பலவற்றில்இதனைக் காணலாம்.
காட்டாக,
1 ‘காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.’
(குறுந்தொகை 44 – வெள்ளிவீதியார் – பாலை திணை – செவிலி தாய் சொன்னது ) இங்குக் காலே, கண்ணே என்ற சொற்கள் பன்மை,
அவற்றின் வினைகள் பன்மையாக இருப்பதால்.
2 நற்றிணை 26 -ஆம் பாடல் (பாலைத் திணை – புலவர் :சாத்தந்தையார்)
‘நோகோ யானே நெகிழ்ந்தன வளையே ‘
அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொற்களோடு கள் விகுதியைச் சேர்த்துப் பன்மையாக்கும் முறையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
காட்டாக :
1 மைதவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ(கலித்தொகை.39: 41-42).
வண்டுகள்இனிது பாடல் மருதம்வீ ற் றிருக்கும் மாதோ.’(பாலகாண்டம் – நாட்டுப் படலம்-36).
ஆக, ஒருமை, பன்மை பற்றியும் ‘கள்’ சேர்ப்பதால் ‘ஒருமை’ச் சொல் பன்மை ஆகும் என்பதையும் பார்த்துவிட்டோம்.இக்காலத்தில் ‘கள்’ வரையறை ஏதும் இன்றி வழங்கப்படுகிறது..மேலே குறிப்பிட்ட புதிரில் உள்ளது போல.அதாவது, அவை என்பது ‘சபை’ என்ற பொருளில் வரும் போது அதன் பன்மை ‘அவைகள்’ என வரும் , வரலாம்.
ஆனால், ‘இவை’ என்ற சொல்லோடு ‘கள்’ சேர்க்கக் கூடாது! ஏன்?
‘இவை’ என்பதே பன்மைதான். ‘இது ‘ என்ற சொல்லின் பன்மை ‘இவை’.
ஏற்கனவே பன்மையாக உள்ள சொல்லை மேலும் பனமையாக்கத் தேவை இல்லை .
எனவே ‘இவைகள்’ என எழுதுவதும் பேசுவதும் தவறு. ஆகவே நண்பர் கோபி சொன்னது மிகச் சரியே!
இயற் பெயர் : பெஞ்சமின்
குடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு)
பிறப்பு & வளர்ப்பு :
ஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி
படிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள்
– புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி
– சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை – தமிழ்)
– பாம்பே : (அஞ்சல் வழி) BIET (British Institute of Engineering and Technology) மின்னியல் (Electronics)
– திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை – ஆங்கிலம்
– திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல்
– சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன்
– கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன்
– புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு.
பணிகள் :
– புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்
– கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி ‘Banque Indosuez’ -இல்
முது நிலை அதிகாரி
– பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் ‘Christian Lacroix’ -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator)
– இந்த ஆண்டு முதல் பணி நிறைவு.
பொதுப் பணிகள் :
– பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்
– இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்)
– கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்)
– முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் …போன்ற பல சங்கங்களின் ஆலோசகர்
– (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்… தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி …
– ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர்.
– கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ‘ graphics’ தெரிந்தவர்
– சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் (‘photography’) ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது.
– பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி .
எழுத்துப் பணிகள் :
– முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 – இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. ‘ஆக்க வேலையில் அணுச் சக்தி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.
– 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை ‘கவிஞனின் காதலி’ முதல் பரிசைப் பெற்றது.
– இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன.
– ‘எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருத்தமா? ‘ என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.