சைவத்தைப் பேணிய அம்மை -1
சு.கோதண்டராமன்
‘இவள் நம்மைப் பேணும் அம்மை’ என்று சிவன் உரைத்ததாகச் சேக்கிழார் கூறுவது உபசார வழக்கு. உண்மையில் காரைக்கால் அம்மையார் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அம்மையார் தோன்றி இராவிட்டால் சமணமும் சாக்கியமும் தமிழ்நாட்டில் கோலோச்சி இருக்கும்.
வெளிநாடுகளில் புத்த சமயம் தாழ்ச்சியுற்ற வடிவத்தில் இன்று பின்பற்றப்படுவது போலத் தமிழ்நாட்டிலும் சமணம் சாக்கியம் என்ற சமயங்களின் பெயரை வைத்துக் கொண்டு மனம் போன வாக்கில் வாழும் ஒரு ஒழுங்கு முறை அற்ற சமுதாயம் ஏற்பட்டிருக்கும். அந்த அவக்கேட்டிலிருந்து தமிழ் நாட்டை மீட்டவர் அம்மையார். அப்பர் முதலானோர் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் சென்றார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார்.
சங்க காலத்தில் பல வகை நிலங்களிலும் வெவ்வேறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ஒரு வகை நிலத்து மனிதர் மற்றொரு வகை நிலத்தில் குடியேறாத காலம் அது. மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்ட பிறகு தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார்.
தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் வேதத்தைச் சார்ந்திருந்தார். வேதம் இந்திரன் வருணன் முதலான பல வேறு தெய்வங்களைப் போற்றுகிறது. ஆனால் வேதத்தின் மெய்பொருள் உணர்ந்தோரே, “ஒன்றுளதுண்மை, ஓதுவர் அறிஞர் பலவிதமாய்” (ரிக் 1.164.46) என்ற அதன் உயிர் நாடியை அறிவர். அம்மையார் வேதம் ஓதுதலைக் கடமையாகக் கொண்ட அந்தணர் மரபில் பிறக்கவில்லை, வேதத்தை அறிவு வழியில் ஆராய்ந்து உபநிடதங்கள் இயற்றிய அரச வம்சத்தில் தோன்றவில்லை.
வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறித் தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அவர்.
சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த சமயங்களின் வழிபாட்டிடங்களிலும் வழிபடுகிறார்கள் சைவர்களுக்கு இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார்.
சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் அம்மையார். இதுவே பிற்காலத்தில் பக்தி இயக்கமாக மாறியது. இது சைவத்தில் மட்டுமல்லாமல் பிற நாட்டுச் சமயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறைவன் எவ்வுருவினன், எத்தன்மையன் என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வையுங்கள், அவன் அஞ்சுதற்குரியன் அல்லன், தன் பெருமை தானறியா எளியவன். அவனுக்கே ஆட்பட்டவர்களாக இருங்கள். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் எதுவும் தேவை இல்லை. அவனிடம் அன்பு செலுத்துங்கள் போதும், உங்களுக்கு எதை வேண்டினாலும் தருவான் என்ற கருத்தைச் சொன்னவர் அவர்.
இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று உரக்க அறிவித்து அதுவரை மேல் மட்டத்தினருக்கு மட்டுமே உரிமையாக இருந்து வந்த சமயத்தை எளிமைப்படுத்திச் சாதாரண மக்களும் அதில் பங்கு கொள்ளுமாறு செய்தார்.
இவர் தோன்றியிராவிடில் சைவம் தனிப் பெரும் சமயமாக வளர்ந்திருக்க முடியாது என்பதனால் தான் மற்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படாத சிறப்பு உரிமை, ஆலயங்களில் இரு புறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க அமர்ந்திருக்கும் உரிமை இவருக்குக் கொடுக்கப்பட்டது.