அவளுக்கு யாரும் இணையில்லை… _ பகுதி 3

அருண் காந்தி

ராமேஸ்வரம் பயணத்துக்குப் பின் ஓரிரு நாட்களில் நந்தினி சகஜ நிலைக்குத் திரும்பினாள். இன்னும் நாங்கள் ஜெர்மனிக்குக் கிளம்ப ஐந்து நாட்களே இருந்தன. அன்றொரு நாள் மாலை எங்களுடைய வயல்வெளிகளைச் சுற்றிப் பார்க்க நந்தினியை அழைத்துச் சென்றேன். பால் விடும் நெற்பயிரின் வாசமும் ஈரப் புல்லும் என பள்ளிக் காலங்களை எனக்கு நினைவூட்டியது.என் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் துவங்கினேன்.

”ஆமா நந்தினி உனக்கு எப்போ கல்யாணம்?”

”இப்போ இல்லை ஏன் சார் இந்த திடீர் கேள்வி?”

அடுத்த கேள்விக்குத் தாவினேன்.

”ஆமா நீங்க உங்க வீட்ல சொந்தத்துல தான் கல்யாணம் பண்ணுவிங்களா?”

”அப்படி ஒண்ணும் இல்ல.”

”நீ லவ் மேரேஜா, இல்ல அரேஞ்சு” மேரேஜா ?”

”தெரியல ராம் ”, என்றாள்.

என் பின்னே நடந்து வந்தவள் திரும்பி நின்று ‘ராம் வீட்டுக்குப் போவம் எனக்கு கொஞ்சம் அலுப்பா இருக்கு’ என்றாள். வேறு விடயங்களைப் பேசிக் கொண்டு வீட்டை எட்டினோம்.

நாட்கள் உருண்டோடின.நாங்கள் கிளம்பும் தேதியும் வந்தது.அவளின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கிளம்பினோம்.அம்மா எல்லா கோவிலுக்கும் போயிட்டு குல தெய்வக் கோவிலுக்கு மட்டும் போகாம இருக்ககூடாது என அறிவுறுத்தினாள்.வழியில் குல தெய்வம் கோவிலுக்குச் சென்றோம்.

ஜெர்மனியை அடையும் முன் நந்தினியிடம் என் மனதில் நான் இதுவரை உங்களுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்த காதலை வெளிப்படுத்தி விட காளியிடம் தைரியம் வேண்டினேன். எல்லோரும் விமான நிலையம் வந்து வழியனுப்ப நந்தினி எல்லோரிடமும் நன்றி தெரிவித்து அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் அவளது பேச்சும் மொழியும் பண்பும் போகப் போக சர்க்கரையாகப் பட்டது நான் எதிர்பார்த்ததுதான். அம்மா கொடுத்த விபூதிப் பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு விமானத்தை நோக்கிப் புறப்பட்டோம். சிறிது உணவு உறக்கம் பிறகு சென்ற இடங்கள்,அங்கு சுட்ட புகைப் படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டும் எங்கள் பயணம் இனிதாகக் கழிந்தது.

விமானம் கொலன் நகரில் இறங்க 10 நிமிடங்களே இருந்தன.வெளியே வெப்பநிலை அப்போது -15 டிகிரி என விமானி அறிவித்தார்.என் மனம் படபடக்கத் துவங்கியது.நந்தினியிடம் சொல்லிவிடலாமா என எண்ணினேன்.வெளியே வந்து இமிக்ரேசன் முடித்து எங்கள் உடமைக்காகக் காத்திருந்தோம். கண்ணாடிக்கு வெளியே நின்றுகொண்டு நந்தினியின் அப்பா கையசைத்தார்.நந்தினியிடம் சுட்டிக் காட்டினேன். மலர்ந்த முகத்துடன் வேகமாகக் கையசைத்தாள் நந்தினி.

தொலைவில் என்னுடைய VIP ALFA ஓடுதளத்தில் மெதுவாக நகந்து வந்து கொண்டிருந்தது. உறுதியான மனத்துடன் பேசத் துவங்கினேன்.

”நந்தினி…”

“ என்ன ராம்…”

”நீ..நீ எப்பவும் கூடவே இருக்கணும்னு விரும்புறேன், இருப்பியா” என்றேன்.

இதை அப்பொழுது சற்றும் எதிர் பாராதவள் திடுக்கிட்டாள் அமைதியானாள் சற்று நேரம்…

‘உங்க பெட்டிய எடுங்க ராம்’.

‘இத நா அப்போ வயலுக்குப் போனப்பவே சொல்லி இருப்பேன்.உங்க அப்பா என் மேல வச்ச நம்பிக்கைகாக சொல்லல…இப்போ அவர் கண் முன்னாடியே சொல்றேன், நீ முழுசா எனக்குள்ள வந்துட்டே… என் வாழ்க்கையின் எல்லா நொடிகளும் நீ வேணும்… நீ இருந்தா போதும் வேறேதும் எனக்கு வேண்டாம். உன் விருப்பத்தைச் சொல்லு..’எனச் சொல்லி என் பெட்டியை இழுத்துக் கொண்டு சற்று தள்ளி வந்து நின்றேன்.குழம்பிய எண்ணங்களுடன் நந்தினி தன் பெட்டியை இழுத்துக் கொண்டு வந்தாள். வெளியே வந்து அவள் பெற்றோரைச் சந்தித்துப் பேசினோம்.வழியில் அவளின் வீட்டில் இறக்கி விட்டு எனது வீடு நோக்கிப் பயணித்தேன், விசக் காயினை விழுங்கியவனைப் போல.

மறுநாள் காலை ஏழுமணி.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விடிந்தது என் பொழுது.குளித்துத் தயாராகி அலுவலகம் சென்றேன்.சக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி பேசிக் கொண்டிருந்தேன். மணி 9.30 . இன்னும் நந்தினி வரவில்லை.நந்தினியை அழைத்தேன்.நெடுநேரம் ஆகியும் எடுக்காததால் வீட்டுத் தொலைபேசிக்கு அழைக்க நந்தினியின் அம்மா எடுத்து அவளிடம் கொடுத்தார். பயணக் களைப்பில் தனக்கு காய்ச்சல் எனவும் இன்று விடுப்பு சொல்லிவிடும்படி என்னிடம் கூறினாள். குழப்பத்துடன் கழிந்தது என்னுடைய அன்றைய பொழுது. மறுநாள் காலை மணி 10 ஆகியும் நந்தினியைக் காணவில்லை. அவளது அலைபேசிக்கு அழைத்தேன் இணைக்கப்படவே இல்லை.தொலைபேசியில் பதிலளிக்க ஆளில்லை.என் குழப்பம் அதிகமாக , அன்று மாலை அவள் வீட்டிற்குச் சென்றேன். பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் சொன்னார்கள் அவர்கள் குடி பெயர்ந்து விட்டர்கள் என. உடனே என் அலுவலக மேலாளரை அழைத்தேன்.நேற்றே நந்தினி சில அவசர காரணங்களால் தனது ரிசைக்னேசன் கடிதத்தை மின்னஞ்சல் செய்ததாகச் சொன்னார்.

நா வரண்டது, நாடி தளர்ந்தது, கண்கள் இருட்டின எனக்கு… எந்த கேள்வியும் என்னுள் தோன்றாத ஒரு மந்த நிலையில் வீட்டுக்குப் புறப்பட்டேன். காய்ச்சலில் புலம்பும் சிறுவனைப் போல என்னை அறியாமல் ஏதேதோ உளறினேன்.

சென்று படுக்கையில் விழுந்தேன். கண்டிப்பாக என்னை விரும்பாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி பிடிக்கவில்லை என்றால் நேரில் சொல்லி இருப்பாள்.வேறு யாரையும் காதலித்து இருந்தாலும் சொல்லி இருப்பாள். இனம்,மதம்,மொழி தடையில்லை. குணம் தடையில்லை.வேறு என்னவாக இருக்கும்?

அவள் மீது நான் கொண்டது வெறும் பரிதாபக் காதல் என நினைத்தாளா?

நட்புக்குள் காதல் அவளுக்குப் பிடிக்கவில்லையா?

அவளது பெற்றோர் அவளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனரா?

என்னுடைய தேசியம் அவளைத் தடுத்ததா?

கேள்விகளின் எண்ணிக்கை மட்டுமே கூடுகிறதே தவிர பதில்ஏதும் தோன்றவில்லை.

என்றாவது பதில் கிடைக்கும் அல்லது அவள் கிடைப்பாள் என்ற நம்பிக்கையுடன் வைக்கிறேன் ஒவ்வொரு நாளும் என் காலடியை…

நிறைவடைந்தது.

 

படத்திற்கு நன்றி

 

இணையும் கைகள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *