எட்டுக் கோணல் பண்டிதன் – 6

தி. இரா. மீனா
அத்தியாயம் மூன்று
இந்த அத்தியாயத்தில் அஷ்டவக்கிரர் அகப்பற்றையும், புறப் பற்றையும் நிந்தித்து ஞானியின் இயல்பை ஜனகருக்கு விளக்குகிறார்.
- அழிவில்லாத ஒன்றாகிய ஆத்மாவை உண்மையில் உணர்ந்த ஆத்ம ஞானியும் தீரனுமாகிய உனக்குப் பொருள் தேடுவதில் எப்படி மகிழ்ச்சி உண்டாக முடியும் ?
- கிளிஞ்சல் என்று அறியாததால் வெளித் தோற்றத்தில் ஆசை ஏற்படுவது போல, ஆத்மாவை உணராத போது மோகத்தால் காணும் விஷயங்களில் விருப்பமுண்டாகும்.
- கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் விளங்குமோ அதுவே நான் என்று அறிந்த பிறகும் ஏழை போல நீ பதறுவது எதற்காக?
- ஒருவன் அழகான தூய அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், தனது அதிகமான சிற்றின்பப் பற்று இயல்பால் மாசுடையவன் ஆகிறான்.
- தன்னிடம் படைப்பு அனைத்தையும், படைப்பனைத்திலும் தன்னையும் காணும் முனிவனுக்கு, நான் அல்லது என்னுடையது என்ற மமகாரத் தொடர்பிருப்பது மிகுந்த அதிசயமே.
- அத்வைத உயர்நிலையை நாடும் யோகி, காமவயப்பட்டுக் காதல் கொண்டு சீரழிதல் விந்தையானதாகும்.
- ஒருவன், பலம் மிகக் குறைந்து முடிவு காலத்தை நெருங்கியிருந்தும் ஞானப் பகையானது என்றறிந்த காமத்தை விரும்புவது விந்தையே.
- விவேகம் கொண்டும், இம்மை மறுமைகளில் விருப்பமற்றும் உள்ள யோகிக்கு முக்தியின்பால் பயமேற்படுதல் விந்தையே.
- ஆத்மாவையே என்றும் காண்பவனாக உள்ள தீரன் உபசரிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும் மகிழ்ச்சியும் கோபமும் அடைவதில்லை.
- இயங்கும் தன்னுடலைப் பிறர் உடலெனக் காண்பவன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் குழம்புவதில்லை.
- மாயமயமாக இந்த உலகத்தை மகிழ்ச்சியின்றிப் பார்க்கும் அறிவுடையோன் தன்னை இறப்பு நெருங்கும் போது அச்சமடைவானோ?
- ஆத்மஞான நிறைவு கொண்டு, ஆசை- நிராசைகளிலிருந்து விடுபட்டு, பற்றற்ற மனமுடையவனாக வாழ்பவனுக்கு யார் நிகராக முடியும் ?
- தனது இயல்பினாலேயே தோன்றுவதேயன்றி வேறொன்றுமில்லை என்றுணர்ந்த அறிவுடையவன், தான் ஏற்றுக்கொள்ளுவதற்கும், ஒதுக்குவதற்கும் உரிய பொருளாக எதையும் காண்பதில்லை.
- இருமையும், மனவெழுச்சியும்,உள்ளத்தில் அழுக்கும் இல்லாதவனுக்குத் தானாக ஏற்படும் அனுபவத்தால் இன்பமுமில்லை, துன்பமுமில்லை.
அத்தியாயம் நான்கு
இந்த அத்தியாயம் ஜனகர், தானுணர்ந்த ஞானநிலையின் பெருமையை அஷ்டவக்கிரரிடம் சொல்வதாக அமைகிறது.
- விஷய அனுபவங்களுடன் செயல்படும் ஆத்மஞானியை, சம்சார பந்தத்தைச் சுமக்கும் பாமரருடன் ஒப்பிடுதல் பொருந்தாது.
- இந்திரன் முதலான தேவர்கள் தீனர்களாக எந்த நிலையை அடைய விரும்புவார்களோ அந்த நிலையைத் தன் பயிற்சியால் அடைந்த போதிலும் ஒரு யோகி அதனால் மகிழ்ச்சி அடைவதில்லை.
- பாவ, புண்ணியங்களின் தன்மை ஞானியின் உள்ளத்தைத் தீண்டுவதில்லை, வானத்தில் புகை படிந்தது போலக் காணப்பட்டாலும், படியாதது போல.
- இந்தவுலகம் முழுவதும் ஆத்மாவே என்றுணர்ந்து சுதந்திரமாக வாழ்பவரைத் தடை செய்யும் தகுதி யாருக்கிருக்கிறது?
- பிரமன் முதல் புழு வரையுள்ள நான்கு வகை படைப்புக் கூட்டத்தில் விருப்பு வெறுப்புகளை விலக்குகிற திறமுடையவன் மெய்யறிவு ஞானி ஒருவனே.
- உலகிறையாகிய இரண்டில்லாப் பொருளே தானென்று யாரோ ஒருவன் உணர்கிறான். அவன் சித்தம் போல வாழ்பவன். அவனுக்கு எந்தப் பயமுமில்லை.
தீரன் – வடமொழியில் இச்சொல்லுக்கு புலன் செயல்பாடுகளுக்கோ, வாழ்க்கையின் பல்வகையான போக்குகளுக்கோ ஆட்படாமல் உறுதியாகவும் தெளிவாகவும் செயல்படக் கூடிய யோகி என்பது பொருள்.
[தொடரும்]