கட்டுரைகள்

கார்த்திகையின் சிறப்பு!

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்.

இந்த மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகைத் தீப வழிபாடு மிகவும்  சிறப்பு வாய்ந்ததாகும்.  அன்று ஏற்றும்  அகல் விளக்கின் ஒளியில்  வீடு, ஆலயம் ஆகியவை எல்லாம் வண்ண மயமாக ஜொலிக்கும். வருடத்தில் மற்ற மாதங்களுக்கு இல்லாத சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு!  இந்தச் சிறப்பு என்னவென்று தெரிய வேண்டுமானால், சற்றே ஜோதிட உலகை எட்டிப் பார்க்க வேண்டும்.  சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் தெரியும்.  பிறகு சூரியன் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி  ஆகிய ராசிகளைக் கடந்து   தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார்.

பலத்தை இழந்தவர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார்.  அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று  தீபங்கள்  ஏற்றி வழிபடுகிறோம். இதில் மற்றொரு சிறப்பும் உண்டு! கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன்தான்!  இருளை நீக்கும்  ஒளியின் அதிபதியான  சூரியனை  அவருக்கு உரிய கார்த்திகை நட்சத்திரம் அன்று ஒளியைப் பிரதிபலிக்கும் தீபங்களை ஏற்றி வழிபடுவதுதானே சிறப்பு?.

அதனால்தான்  ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் அன்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும், வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு. ஆகவே கார்த்திகைத் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம். புற இருளோடு, நம் அக இருளும் நீங்கி வாழ்வு பிரகாசமாய் ஒளிரட்டும்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க