குறளின் கதிர்களாய்…(390)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(390)
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
– திருக்குறள் – 331 (நிலையாமை)
புதுக் கவிதையில்…
நிலையில்லாத பொருட்களை
உலகில் என்றும்
நிலைத்திருக்கும் பொருட்களாய்
நினைத்துச் செயல்படும்
இழிந்த அறிவுடையவராய்
இருத்தல்,
தூய தவ வாழ்விலுள்ளோர்க்கு
தீரா இழுக்காகும்
கடைநிலையே…!
குறும்பாவில்…
நிலையில்லாப் பொருட்களை நிலையானவை
என்று மயங்கியுணரும் புல்லறிவு கோண்டோராயிருத்தல்,
துறவு வாழ்வில் இழிநிலையே…!
மரபுக் கவிதையில்…
உலகி லென்றும் நிலையிலாமல்
உளதை யெல்லாம் என்றென்றும்
நிலைக்கு மென்றே மயக்கத்தில்
நினைக்கும் புன்மை யறிவுடனே
நிலவும் தன்மை யொருவற்கு,
நிகரில் துறவு வாழ்வினிலே
நிலையாம் இழிவைத் தந்தேதான்
நிசமாய்த் தள்ளும் கடைநிலைக்கே…!
லிமரைக்கூ…
நிலைக்காதது எல்லாம் நிலையே
என்றெண்ணும் புன்மை யறிவுச் செயலால்
துறவுவாழ்வில் இழுக்குதான் விலையே…!
கிராமிய பாணியில்…
நெலயில்ல நெலயில்ல
எதுவுமே நெலயில்ல,
ஒலகத்து வாழ்க்கயில
எதுவுமே நெலயில்ல..
நெலைக்காத யெல்லாம்
நெலைக்குமுண்ணு
கீழ்த்தர அறிவோட
செயல்பட்டா,
தொறவு வாழ்க்கயில
குத்தமாகி
கீழ்த்தரமான தாழ்வுதான்
கெடைக்குமே..
தெரிஞ்சிக்கோ,
நெலயில்ல நெலயில்ல
எதுவுமே நெலயில்ல,
ஒலகத்து வாழ்க்கயில
எதுவுமே நெலயில்ல…!