நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.
நதியில் விழும் பிம்பமும்அல்ல
நதியில் விழும் இறகும் அல்ல
குதிக்கும் தமிழில்; குளித்து எழுந்து
பதிக்கும் நுண்ணிய தமிழ் முத்தம்.
உதிக்கும் எண்ண விதைகள் வரமேந்தி
மதித்துப் போற்றும் நம்பிக்கை நிறைத்து
நதியின் நீல நெளிவின் ஒக்கலையில்
முதிர் பாறையாய் அமர்வது எழுத்து.
உரைக்கும் எழுத்தாம் தமிழ் ஸ்பரிசம்
கரைக்கு வரும் அலையின் ஸ்பரிசம்.
நுரை நுரையாம் வெண்மைத் தமிழ்.
வரை வரையாகத் தினம் முத்திக்கிறது.
தரையில் எத்தனை எத்தனை இரசவாதம்.
இரையாக்குகிறது மனிதரின் பயனான நேரம்.
அரைக்கும் சந்தனமாய் மின்னும் ஒளிர்வாய்.
அரையிருள் முழுநிலவு என்று ஆகிறது.
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.