குறளின் கதிர்களாய்…(409)
செண்பக ஜெகதீசன்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
– திருக்குறள் -115 (நடுவு நிலைமை)
புதுக்கவிதையில்…
வாழ்க்கையில் தீவினையால்
வந்திடும் துன்பமும்,
நல்வினையால்
நாடிவரும் வளவாழ்வும்
எல்லோர்க்கும் உள்ளதுதான்
என்பதை உணர்ந்தே
அதற்காக
நல்லறமாம்
நடுவு நிலைமையில்
நெஞ்சம் தடுமாறாமல்
நேராயிருப்பதே
மேலானவர்களுக்கு
மேலும் அழகே…!
குறும்பாவில்…
வருமிடரும் வளவாழ்வும் எல்லோர்க்கும்
உள்ளதுதானென உணர்ந்தே நடுநிலை மாறா
நற்பண்பே மேலானவர்களுக்கு அழகு…!
மரபுக் கவிதையில்…
வாழ்வினில் செய்த தீவினையால்
வந்திடும் இடர்கள் பலவுடனே
தாழ்விலா நல்ல செயலெல்லாம்
தந்திடும் வளங்கள் பெருகியேநல்
வாழ்வதும் எல்லா மக்கட்கும்
வருமென நன்றாய் உணர்ந்தறிந்தே
தாழ்ந்திடா நடுவு நிலைமாறாத்
தன்மையே அழகு சான்றோர்க்கே…!
லிமரைக்கூ…
இன்பமும் துன்பமும் வருமே
எல்லோர்க்கும் என்பதுணர்ந்தே நடுநிலை மாறாதிருத்தல்
சான்றோர்க்கு அழகைத் தருமே…!
கிராமிய பாணியில்…
மாறாத மாறாத
நடுவுநெலய மாறாத
நீதி நெலைக்க வாழ்வு செறக்க
நடுவுநெலய மாறாத..
எல்லாருக்கும் வரும் வாழ்க்கயில
எறக்கமாத் துன்பமும்,
ஏத்தமாச் செல்வப் பெருக்கும்..
இதயெல்லாம் நல்லா ஒணர்ந்து
இதுனால
நடுவுநெலயில மாறாமயிருக்கும்
நல்ல கொணமே
பெரியவங்களுக்கு அழகு
பெரும எல்லாமே..
அதால
மாறாத மாறாத
நடுவுநெலய மாறாத
நீதி நெலைக்க வாழ்வு செறக்க
நடுவுநெலய மாறாத…!