-மேகலா இராமமூர்த்தி

மூக்கையும் காதுகளையும் சுக்கிரீவனிடம் இழந்த கும்பகருணன் கடுங்கோபத்தோடு போர்புரியத் தொடங்கினான். தன் கேடகத்தை எடுத்து வீசினான்; அது வானிலுள்ள விண்மீன்களைக் கீழே உதிர்த்தது.

கும்பகருணனின் போராற்றல் கண்டு அஞ்சிய சாம்பன் இராமனைப் பார்த்து, “இது நமக்கு மிகவும் நெருக்கடியான தருணம்; இப்போது நீ இவனைத் தடுத்துப் போர் புரியாவிட்டால் குரக்குச் சேனையை முற்றாய் அரக்கர் படை ஒடுக்க வழிவகுத்தவனாவாய்; எனவே போரிடுக!” எனத் தூண்டினான்.

அதுகேட்டுக் கும்பனுக்கு நேரெதிரே வந்த இராமன், தன் அம்பு மழையால் கும்பனின் கையிலிருந்த கேடகம், வாள், கவசம் என அனைத்தையும் அறுத்தெறிந்தான்; இராவணன் அனுப்பிய படை அப்போது கும்பகருணனின் உதவிக்கு வந்தது. அவற்றையும் அழித்தொழித்த இராமன், தனியே நின்ற கும்பகருணனை நோக்கி,

”படைக்கலங்களோடு எதிர்க்கவல்ல பெருந்துணையான படைகளை இழந்தாய்; தன்னந்தனியனாய் எதிர்நிற்கின்றாய்; நீதிநெறி தவறாத வீடணனோடு பிறந்தனை ஆதலின் உன் உயிரை உனக்குத் தருவேன்; இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய்விடுகிறாயா? பின்பு மீண்டும் வருகிறாயா? அல்லது போர்செய்து இப்போதே இறந்துபடுகிறாயா? உனக்குப் பொருந்தியதை ஆய்ந்து சொல்லுக!” என்றான்.

ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை
எதிர்ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
நின்உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்றுஎனின்
போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி
சமைவுறத் தெரிந்து அம்மா.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7594)

தன்னோடு போரிட்டுத் தோற்ற இராவணனுக்கு, ”இன்றுபோய் நாளை வா!” என்று வாய்ப்புக் கொடுத்ததைப் போலவே கும்பகருணனுக்கும் ”போய் வா!” என்று வாய்ப்பளிக்கின்றான் இராமன். முன்னவனுக்கு மதிப்புக்குரிய அரசன் என்ற முறையிலும், பின்னவனுக்கு அறநெறி வழுவா வீடணனின் அண்ணன் என்ற முறையிலும் இவ்வாய்ப்புகள் இராமனால் வழங்கப்படுகின்றன; இராவணன் அதனையேற்று வீரத்தைக் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்; ஆனால், கும்பகருணன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

அவன் இராமனைப் பார்த்து, ”அழிவற்றவனே! எங்களால் தேவர்கள் பெருமை இழந்தார்கள்; அவ்வகையான பெருமித நிலைநோக்கி, தீண்டி வருத்தும் அணங்கையொத்த சீதை பிறர் மனைவி அவளைக் கைப்பற்றலாகாது எனத் தடுத்தேன்; அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதுகுறித்துத் தொடர்ந்து பேசும் வாக்கை இழந்தேன்; இப்போதோ உங்களால் என் செவியொடு மூக்கை இழந்தேன்; இத்தகு அவமானத்திற்குப் பிறகும் நான் இலங்கை நகருக்குத் திரும்புவது எங்ஙனம்? ஆதலால் போரிட்டு ஆவி துறந்தாலும் துறப்பேன்; நகருக்குத் திரும்பேன்” என்று மானவீரனாய் முழங்கிய கும்பகருணன், இராமன்மீது ஒரு குன்றைப் பெயர்த்து வீசினான்; இராமன் அதனைத் தன் அம்புகளால் தூளாக்கினான். எனினும், கும்பகருணன் மார்பிலிருந்த சங்கரன் ஈந்த கவசத்தை இராமனால் உடைக்க முடியவில்லை.

சங்கரன் கவசத்தை அவனது படையாலேயே வெல்லவேண்டும் என்பதை உணர்ந்த இராமன், கும்பகருணனின் சிவ கவசத்தைத் தன்னிடமிருந்த பாசுபதக் கணையால் வீழ்த்தினான்.

தொடர்போரில் இராமன் கும்பகருணனின் வலக்கையை வாளோடு அறுத்து எறிந்தான்; அறுத்து வீழ்த்தப்பட்ட அக்கையை இடக்கையில் எடுத்துக்கொண்டு அதனால் வானர சேனையை அடித்துக் கொன்றழித்தான் அந்த வீரன்! இன்றே வானர குலம் முற்றாய் எமனுலகு எய்திடுமோ எனும் அச்சத்தில் வானரர்களும் வானவர்களும் கும்பகருணனைப் பார்த்திருக்க, தன் அம்பால் அவனுடைய இடக்கையையும் வெட்டிக் கடலில் வீழ்த்தினான் இராமன்.

தோள்வளையுடன் கடலில் வீழ்ந்த கும்பகருணனின் கையானது, பாற்கடலில் நடப்பட்டு, வாசுகி எனும் பாம்பு சுற்றிய மந்தரமலைபோல் தோற்றமளித்தது. அப்போதும் கும்பகருணனின் போர்வேகம் குறையவில்லை. அடுத்து இராமன் அவனுடைய வலக் காலை வெட்டி எறிய, அவன் தன் இடக் காலால் நொண்டிக்கொண்டு போரிட்டான். இடக் காலையும் இராகவன் தன் கணையால் துணிக்கவே, கைகளும் கால்களும் இழந்த நிலையிலும் அயராத கும்பகருணன், தீயினால் செய்யப்பட்டதுபோல், சினத்தினால் சிவந்த கண்களை உடையவனாய் தன் சிகையிலிருந்து கிளம்பிய தீயினால் திசைகளெல்லாம் கருக, மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை நாவினால் வானத்தைத் தீண்டுமளவு வளைத்து, பேய்கள் ஆரவாரிக்கும் பெரிய போர்க்களம் எரிந்து விழுமாறு பிலம்போன்ற தன் வாயைத் திறந்து நெடுந்தொலைவு வீசியெறிந்தான். அச்செயல்கண்டு வியந்த இராமனும் தன் மலர்க் கரங்களில் நடுக்கம் கொண்டான்” என்று கும்பகருணனின் மாவீரத்தை விதந்தோதுகின்றார் கம்பர்.

தீயினால் செய்த கண்ணுடையான் நெடும்
சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்
விசும்புற வளைத்து ஏந்தி
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ
பிலம் திறந்தது போலும்
வாயினால் செல வீசினன் வள்ளலும்
மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7621)

ஆனால், கை கால்களை இழந்துவிட்ட நிலையில் கும்பகருணனால் நெடுநேரம் போரிட இயலவில்லை. அவன் தன்னெதிர் நின்ற இராமனின் வில்லாற்றலை மனத்துள்ளே புகழ்ந்து, ஆயிரம் இராவணர்கள் வந்தாலும் இராமனை எதிர்க்கும் வலிமையற்றவர்களே என்று எண்ணியவனாய், தன்னால் இனி அண்ணனுக்கு உதவ இயலாத நிலையையும், இராவணன் இனி உயிர்பிழைத்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பதனையும் உணர்ந்து வருந்தினான்.

”அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறள்மொழிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவன் கும்பகருணன் என்பதை அண்ணனுக்காகப் போரிட்டு அனைத்து உடலுறுப்புகளையும் இழந்த நிலையிலும் அண்ணனைக் காக்க இயலவில்லையே என்று அவன் வருந்துவதன் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.

தன் இறுதி உறுதியாகிவிட்டதை உணர்ந்த கும்பகருணன், இராமனை நோக்கிச் சிலவற்றை வரமாய் வேண்டுகின்றான்…

”இராமா! என் தம்பியாகிய வீடணன் நீதிமான்; தான் பிறந்த சாதியால் வந்த சிறுநெறி அறியாதவன்; நற்குணமில்லாத இராவணன் அவனைத் தம்பியென்றும் பாராமல் கொல்ல முயல்வான்; ஆதலால், அவனை நான் மீண்டும் உன்னிடம் அடைக்கலப்படுத்துகின்றேன். நீயோ உன் தம்பியோ அனுமனோ எப்போதும் வீடணனுடன் இருந்து அவனைக் காக்கவேண்டும் என்று உன்னை வேண்டுகின்றேன்.

மற்றொன்றையும் நீ எனக்குச் செய்யவேண்டும்! முனிவர்களும் தேவர்களும் என் முகத்தை மூக்கில்லா முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; அவர்கள் அவ்வாறு நோக்காமல் உன் அம்பினால் என் கழுத்தை அறுத்து நீக்குவாய்; அறுத்து நீக்கிய பிறகு கழுத்தோடு கூடிய தலையைக் கரிய கடலுக்குள்ளே போக்குவாய்; இவையே நான் உன்னை வேண்டுவது” என்றான்.

மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என் கழுத்தைப்

நீக்குவாய் நீக்கியபின் நெடுந் தலையைக் கருங் கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7628)

இறந்தபின்பும்கூடத் தன்னை யாரும் எள்ளி நகையாடிடக் கூடாது எனும் கும்பகருணனின் மானவுணர்ச்சி நம்மை மலைக்க வைக்கின்றது.

கும்பகருணனின் வேண்டுகோளின்படியே அவன் சிரத்தை அறுத்து நடுக்கடலுள் வீழ்த்தினான் இராமன். கும்பனின் குன்றனைய முகம் கருங்கடலுள் சென்று மறைந்தது.

தன்னலம் என்பது சிறிதுமற்றவனாய், அண்ணன் தம்பி எனும் எதிரெதிர் குணங்கள் கொண்டோரிடமும் ஒத்த பாசத்தை உடையவனாய், செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதன் பொருட்டு, தனக்கு உடன்பாடில்லாத செயலிலும், அண்ணனுக்காகப் போரிட்டு மடியும் மாவீரனாய், உறுப்புகள் குறைவுற்றபின் வாழாத மானவீரனாய் மிளிர்கின்ற கும்பகருணன், கம்பராமாயணத்தின் மிகச் சிறந்த பாத்திரங்களுள் ஒருவன் என்றால் மிகையில்லை.

உலகக் காப்பியங்களில் கம்பருடைய கும்பனுக்கு ஒப்பாக ஹோமரின் இலியட் (The Iliad) காப்பியத்தில் வரும் ஹெக்டரையும் (Hector), மகாபாரதத்தின் வீட்டுமரையும் (பீஷ்மர்) நாம் கருதலாம். திராய் (Troy) நகரத்தின் இளவரசன் பாரிஸ், கிரேக்க அரசன் மேனலாசின் (Menelaus) மனைவி ஹெலனை (Helen) அழைத்துக்கொண்டு வந்ததால் கிரேக்கர்களுக்கும் துரோயன்களுக்கும் (Trojans) போர் தொடங்குகின்றது. அப்போரில் கிரேக்கப் படைவீரனான அக்கில்லஸ் (Achilles) கையால் தான் இறப்பது உறுதி என்று அறிந்திருந்தும் தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போரிட்டு மடிகின்றான் பாரிஸின் அண்ணனான ஹெக்டர்.

பிதாமகர் வீட்டுமரோ தமக்கு முடிவுவரப் போவது தெரிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகத் துரியோதன் பக்கம்நின்று போர்புரிந்து இறக்கின்றார். கும்பகருணனும் இம்மாவீரர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவன்.

கம்பரின் இராமாயணம் வான்மீகத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பன்று; தன் தேவைக்கேற்பப் பாத்திரங்களைப் புதுக்கிப் படைத்துள்ளார் கம்பர் என்பதைப் பல இடங்களில் கண்டோம். வான்மீகருக்கு மாறாக எதிர்நிலைப் பாத்திரங்களான (antagonists) வாலி, இராவணன், கும்பகருணன், வீடணன் எனப் பலரையும் தம் காப்பியத்தில் அவர் உயர்த்திக் காட்டியிருப்பதைக் காண்கையில் அரக்கர்பக்கம் கம்பருக்கு இரக்கமும் ஈடுபாடும் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இங்கே போர்க்களத்தில் கும்பகருணன் இறந்துபட, அதனையறியாத இராவணன் அங்கே அரண்மனையில் கழிகாமம் சிறிதும் குறையாதவனாய்ச் சீதையை அடைய வேறு ஏதேனும் வழியிருக்கின்றதா என்று வினவிக் கொண்டிருந்தான் தன் அமைச்சன் மகோதரனை.

”அதற்கென்ன? மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கனைச் சீதையின் தந்தை சனகனைப் போல் உருமாற்றி, அந்த மாயச் சனகனைக் கட்டிச் சீதைமுன் நிறுத்தி, இராவணனைச் சேருமாறு அவளிடம் அவனைச் சொல்லச் சொன்னால், தந்தைசொல் கேட்டு, அவளே உன் விருப்பத்துக்கு உடன்படுவாள்” என்று யோசனை கூறினான் மகோதரன். 

அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டிவிட்டுச் சீதையை மருட்டும் பொருட்டு அசோகவனத்துக்குப் புறப்பட்டான். அங்கே சீதையின் எதிரில் பொன்னாசனத்தில் அமர்ந்தவன், அவளைத் தன்னாசைக்கு இணங்கும்படிக் கெஞ்சுகின்றான்; அவள் அதனை மறுக்கவே, ”இராமனைக் கொல்வதோடன்றி அயோத்தியிலுள்ளோரையும் மிதிலையிலுள்ள உன் தந்தையையும் பற்றிக்கொண்டுவர படைகளைச் செலுத்தியுள்ளேன்” என்று மிரட்டுகின்றான்.

அவ்வேளையில் மகோதரன் தன் திட்டப்படி மருத்தன் எனும் அரக்கனை சனகன்போல் உருமாற்றி இராவணன் முன்பு கொண்டுவந்து நிறுத்துகின்றான்; அந்த மாயச் சனகன் இராவணனை வணங்குகின்றான். அதுகண்டு துணுக்குற்ற சீதை, தாய்ப்பறவை நெருப்பில் வீழ்வதுகண்ட குஞ்சுப் பறவைபோல் மனம் குமைந்தாள்.

”எந்தையே! என்னைப் பெற்றதால் உனக்கு இந்த நிலை வந்துவிட்டதே? என்னைச் சிறையிலிருந்து மீட்பதற்கு ஒருவரையும் காணேன்; என் பொருட்டுச் சிறைப்பட்டுள்ள உன்னை யார் மீட்கப் போகின்றார்?” என்று அரற்றினாள்.

அவளின் துயர்கண்ட இராவணன். ”அழகியே! என்னை வருத்தும் இந்தக் காமநோயை நீ நீக்குவாய் ஆயின், மூவுலகையும் ஆளுகின்ற நான் அவை அனைத்தையும் உன் தந்தையாகிய சனகனுக்கு ஈந்துவிட்டு, உன்னைத் தொழுது வாழ்வேன்” என்று மாயா சனகன் முன்னிலையில் சீதையை வேண்ட, அவள் எரிமலைபோல் கனன்று அவனுக்குத் தன் மறுப்பைத் தெரிவிக்கின்றாள். சினங்கொண்ட இராவணன் அவளருகே செல்ல, அவனைத் தடுத்த மகோதரன் ”சனகன் வேண்டினால் சீதை உன் விருப்புக்கு மறுப்பின்றி இணங்குவாள்” என்று யோசனை சொல்கின்றான்.

கட்டுண்டு தரையில் கிடந்த மாயா சனகனும் இராவணன் விருப்பத்துக்கு இணங்கித் தன் குலத்தைக் காப்பாற்றுமாறு சீதையின் கால்களில் வீழ்ந்து கெஞ்சுகின்றான்.

முறையற்ற வாழ்விற்குத் தன்னை ஆட்படுத்த விரும்பிய அந்த மாயா சனகனை உண்மையான சனகன் என்றெண்ணிக் கடுங்கோபமுற்ற சீதை, ”நாயைவிடக் கீழ்மைப்பட்டவனே! வில்லேந்திய இராமன் அல்லாமல், என் பக்கத்தில் வந்த வேற்று ஆடவர்கள் விளக்கில் வீழ்ந்த விட்டில்பூச்சிபோல் உயிரிழப்பர் அல்லவா? விலங்குகளுக்கு அரசனாகும் தகுதிகொண்ட ஆண் சிங்கத்தோடு வாழ்ந்த ஒரு பெண் சிங்கம், தூய்மையற்ற இடத்தில் அழுக்கைத் தேடித்தின்னும் நரியோடு கூடிவாழ்வது உண்டோ?” என்று கர்ச்சித்தாள்.

வரிசிலை ஒருவன் அல்லால் மைந்தர் என்மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே.
(கம்ப: மாயா சனகப் படலம் – 7699)

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *