குறளின் கதிர்களாய்…(424)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(424)
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
-திருக்குறள் – 469 (தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்…
அவரவர் தகுதியை
ஆராய்ந்தறிந்து
அவரவர் தகுதிக்கேற்றவாறு
செயல்படாதபோது,
அரசியலார்
நல்லனவற்றைச் செய்வதிலும்
தவறு ஏற்பட்டுவிடும்…!
குறும்பாவில்…
அவரவர் இயல்பினை நன்கறிந்து
அவர்களுக்குப் பொருந்துமாறு செய்யாவிடில் அரசியலார்
நன்மைசெய்வதிலும் தவறு ஏற்படும்…!
மரபுக் கவிதையில்…
அவரவ ரியல்பை ஆய்ந்தறிந்தே
அவர்க்கது பொருந்தும் வகையதனைத்
தவறிடா தறிந்தே செய்திடவே
தவறிடின் தவறு வந்திடுமே,
எவர்க்குமே நன்மை செய்திடத்தான்
எடுத்திடும் நல்ல செயல்களிலே
தவறுகள் நடக்கும் வாய்ப்பினையே
தந்திடும் நல்ல அரசினிலே…!
லிமரைக்கூ…
செயல்படணும் தகுதியை அறிந்தே,
தவறின் தவறும் அரசின் நன்மைதரும்
செயல்களும் தடைபட்டு முறிந்தே…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எதயும் நல்லாத்
தெரிஞ்சி செயல்படணும்..
அவரவர் கொணத்த நல்லா
ஆராஞ்சறிஞ்சி
அதுக்குத் தக்க செயல்படணும்,
அப்புடி இல்லண்ணா ராசாங்கத்தில
மக்களுக்கு
நல்லது செய்யிறதிலயும்
தவறு நடந்திடுமே..
அதால
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எதயும் நல்லாத்
தெரிஞ்சி செயல்படணும்…!