இன்னம்பூரான்

ககன சாரிகை தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய நடை. இந்த 1.01 வகையறா 4867.243 வரை கூட போகக்கூடும். தினம் ஒன்று என்றாலும், வருடங்கள் பிடிக்கலாம். என்றைக்கு நிறுத்தினாலும் ஒரு முழுமை இருக்கும். ஏன்? ஒவ்வொன்றும் பூர்ணத்துவம் உடையவை.

1.01: ‘அறம் செய்ய விரும்பு’ என்ற பாலபாடம் படித்து, அது பிடித்துப்போய், ராப்பிச்சைக்காரனுக்குக் காத்திருந்து சோறளித்தது மறக்கவில்லை. மேல்வகுப்புகளில் நெட்டுரு போட்டு, மதிப்பெண்கள் பெற்ற பின் மறந்த திருக்குறளும் நீதிகள் பல உரைத்தது; நமக்குத்தான் உறைக்கவில்லை. உயர் தத்துவங்களை படிக்கும் போது இருக்கும் ஆர்வம், அவற்றை கவனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வதில் இருப்பதில்லை.

**
1.02: அறியாப் பருவத்தில் இருந்த அருமையான வெள்ளந்தி நற்குணம், திறந்த மனம். அதைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? அரிக்கென் லாந்தரை, கோலமாவு பூசி, துடைத்து பளபளவாக்கி, போத்தலிலிருந்து சீமையெண்ணையை சாக்கிரதையாக ஊத்தி, திரியை நிமிண்டி, அக்னிபகவானை ஆவாஹனம் செய்துவிட்டு, ‘பாலும் தெளி தேனும்…’ என்று பிரார்த்தித்து விட்டு, ‘பிள்ளையார் துணை’ போட்டுவிட்டு, குழந்தை ஏகாக்ரஹ சித்தத்தோடு மாங்கு மாங்குன்னு எழுதறாளே, அதைப் பார்த்தது உண்டோ!

***
1.03: காலப்போக்கில், அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள், பிரச்னைகள், முரண்கள், எதிர்மறைகள் எல்லாம் மோதி, மிதிக்கும் போது, திறந்த மனத்தில் துருப்பிடிக்கிறது. தேய்மானத்தால், கறை படுகிறது. தேய்ந்தது உதிர்ந்து விடுகிறது. சித்தத்தின் மீது பற்பல ஆக்ரஹங்கள். சிந்தனைத்திறனை இழந்தால் கூட பாதகமில்லை. அது தடம் மாறி பயணித்து, தந்திர யுக்தியால், ஆன்மீகம், சமயம், நன்னெறி ஆகியவற்றை, முரண்பட மாற்றியமைத்து, தீநிமித்தங்களின் களஞ்சியமாக அமைந்து, மனித நேயத்தை உருக்குலைக்கிறது. மாற்று மருந்து என்ன?

****
1.04: ஒரு சின்ன இடைவேளை. ககன சாரிகை ஆகாய மார்க்க வல்லி. வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினரின் அருந்தவப் புதல்வி மீனலோசனி ~ அதான் ~ செல்வியின் வருகை எனக்கு இதை எழுதக் கொடுத்த உவகை என்று தான் சொல்ல வேண்டும். பிரமேயங்கள் எல்லாம் இப்படித்தான் ‘எங்கிருந்தோ வந்தாள்; சான்றோர் வாக்கு நான் என்றாள்’ என்று தான் வரும். இது முதன்மை நன்நிமித்தம். விடிவெள்ளி பொழுதில், சித்தார்த்த கெளதமர் புண்யக்ஷேத்திரமான கயாவில், போதி மரத்தடியில் அமர்ந்து தவம் புரிகையிலே, அவருக்கு ஞானோதயம் கிட்டியது இன்றைய தினம் என்பார்கள். அந்த சுபதினத்தில் தாரகைகள் புடை சூழ ‘ககன சாரிகை’ ‘…காற்றினும் கடும் தேர்ச் சக்கர முதல் ஆம் ககனசாரிகை கள் ஏழ் ஐந்தும் சாற்று வித்து…’ என்று சிவபெருமான் கிருபையுடன், தானே இயங்கி, வருகை தந்ததும் நன்நிமித்தமே.

*****
1.05: இத்தொடர் சுதந்திரதேவி. மாற்று மருந்து தேடி, கிரேக்க/ ரோமானிய/அரேபிய ஞானிகளிடம் பாடம் கேட்கும். சீனாவின் பீஷ்ம பிதாமஹர்களை கூப்பிடும். பரத கண்டத்தில் நசிகேதஸ் கேட்டது என்னவென்று வினவும். இரு நாடுகளையும் சித்தத்தால் பிணைத்த பெளத்தத்தை பற்றிப் பேசும். ஆரம்பித்து வைக்க ஒரு சூத்திரம். உபயம் அரிஸ்டாட்டில்: ‘உயரத்தை பற்றிய கவலை ஒட்டைச்சிவிங்கைக்கு மட்டுமே’. விளக்கத்திற்கு 1.06க்கு காத்திருக்கவும். அச்சம் தவிர்க்க. பின்னூட்டம் நாடி அலையப்போவதில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *