சு.கோதண்டராமன்

பேயார்

பரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது.

இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான். 

இவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான். 

பாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது. 

அதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். 

தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின. 

தன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.    

அப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு, திருத்தருமபுரம் ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது. 

சுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார். 

 

படத்திற்கு நன்றி: http://enfolding.org/multiplicious-becomings-tantric-theologies-of-the-grotesque-i

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *