நிலவொளியில் ஒரு குளியல் – 3

7

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_Venkateshஇப்போது 20 டுவென்டி, ஐ.பி.எல் எனப் பல பரிமாணங்களில் தெரியும் கிரிக்கெட் விளையாட்டு, அப்போதெல்லாம் வெறும் ஐந்து நாள் மற்றும் ஒரு நாள் ஆட்டமாகத் தான் விளங்கியது. தெருவில் இருக்கும் எங்கள் அண்ணன்மார்கள் சிலசமயம் விளையாடுவதுண்டு. திடீரென்று “சிக்சர்” என்றும் “அவுட்” என்றும் கத்தும் ஒலிகள், எங்களுக்கு அன்னியமாகவே இருந்தன, அந்த கிரிக்கெட் மாட்ச் நடக்கும் வரையில். முதலில் இருந்து வரிசையாகச் சொன்னால்தான் புரியும்.

எங்கள் தெருப் பையன்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு நல்ல நாளில், கிரிக்கெட் அணி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பதினோரு பேர் கிடைக்காத காரணத்தாலும், எங்கள் அண்ணன்கள் தான் அவர்கள் என்ற காரணத்தாலும் பந்து பொறுக்கிப் போடும் வாய்ப்பு எங்களுக்குக் (சிறுமிகள்) கொடுக்கப்பட்டது. இதற்குப் பெரியவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் யாருக்கும் தெரியாமல் விளையாடினோம். பெரியவர்கள் எங்களைக் கவனிக்கிறாற் போலத் தோன்றினால் மைதானத்தின் ஓரமாக ஏற்கெனவே கிழித்து வைத்திருக்கும் கட்டத்தில் பாண்டி விளையாட ஆரம்பித்துவிடுவோம். இப்படி எங்கள் அணி வளர்ந்து வரும் சமயத்தில்தான் எங்கள் திறமைக்கு(!!)ச் சவால் விடுக்கப்பட்டது.

பக்கத்து கிராமமான ஆம்பூரில் (இது வேலூர் பக்கத்து ஆம்பூர் இல்லை. நெல்லை மாவட்டக் கீழாம்பூர்) குட்டி சங்கர் என்பவன் தலைமையில் மற்றொரு கிரிக்கெட் அணி ஆரம்பிக்கப்பட்டது. குட்டி சங்கர் என்பவன், எங்களை விட மிகவும் சீனியர். நிலம், தோப்பு, வீடுகள் என்று ஏராளமான சொத்து உள்ளவன். எனவே படிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் ஊர் சுற்றுவான். அவன் சொல்லி யாரும் எதையும் மறுக்கக் கூடாது. அவனை மீறி ஏதாவது செய்தால் அடி பின்னியெடுத்து விடுவான். இப்படியெலாம் அவன் “புகழ்” பரவியிருந்தது. அந்த குட்டி சங்கர் தான் எங்கள் ஊர் அணியைக் கேவலமாகப் பேசி எங்களுக்கு தைரியம் இருந்தால் (தில் என்ற வார்த்தை அப்போது தெரியாது), கிரிக்கெட்டில் தங்களை ஜெயிக்குமாறு சவால் விட்டான். அந்த சவாலை எங்கள் தலைவனும் அணியினரும் ஏற்றுக்கொண்டோம்.

ஆம்பூர் அணியைத் தோற்கடித்தே தீருவது என்று எங்கள் கேப்டன் (வேறு யார்? என் அண்ணன் தான்) அம்மன் கோயில் முன் வீர சபதம் எடுத்தான். அதன் பிறகு தான் வெற்றி பெறுவதில் உள்ள சிரமங்கள் தெரிய வந்தன. விளையாடுவதற்கு ஒரு நிஜ பேட் வேண்டும் என்று குப்புசாமி சொன்ன போதுதான் அதுவரையில் விளையாடப் பயன்படுத்தியது (சவுக்குக் கட்டை) பேட் இல்லை என்றே எங்களுக்குத் தெரிய வந்தது. பிறகு பந்து வேறு வாங்க வேண்டும். இதெற்கெல்லாம் பணம்? இருபது ரூபாயாவது இருந்தால் தானே பழைய மட்டையாவது வாங்கலாம். அப்புறம் பந்து, டென்னிஸ் பந்தாவது வேண்டாமா? பலவாறு யோசித்து பெற்றோர்களைக் கேட்பது என்ற மிகத் துணிச்சலான முடிவுக்கு வந்தோம்.

நாங்கள் எதிபார்த்தபடியே யாரிடமிருந்தும் பத்து காசு பேரவில்லை. போனஸாக எங்களுக்கு திட்டு வேறு கிடைத்தது, படிப்பதைத் தவிர மற்றதெல்லாம் செய்கிறோம் என்று. தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன்களாய் மாற்றுவழி கண்டுபிடித்தோம். அதன்படி நேரே எங்கள் பள்ளி P.T. சாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினோம். அவரும் பெருந்தன்மையோடு மாட்ச் அன்று மட்டும் பேட்டும் பந்தும் தருவதாக ஒப்புக்கொண்டார். எங்களுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. பெண்கள் விளையாட அனுமதி இல்லை என்பதால் எங்கள் தெருவில் இருந்த சின்னஞ்சிறுவர்களுக்கு அடித்தது யோகம். அவர்கள் எல்லோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இருந்தும் நாங்களும் அணி உறுப்பினர் என்றே சொல்லிக்கொண்டு திரிந்தோம். அதை யாரும் மறுக்கவில்லை.

children cricket

தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டோம். மாட்சுக்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் எங்கள் அணி முப்பது ரன் அடிக்கும் நிலைக்குக் கஷ்டப்பட்டு முன்னேறியது. இதற்கிடையே ஆம்பூர் அணி பற்றிய விவரங்கள் எங்கள் காதுகளில் விழுந்த வண்ணம் இருந்தன. மாட்சுக்காகவே குட்டி சங்கர் ஒரு புது பேட் வாங்கியிருப்பதாகவும், இன்னும் என்னென்னவோ உபகரணங்கள் வைத்திருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்தச் செய்திகளெல்லாம் எங்கள் வயிற்றில் புளி என்ன ஒரு மளிகைக் கடையையே கரைத்தது. எளிதாகத் தெரிந்த வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கஷ்டமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

இந்த சமயத்தில்தான் என் அண்ணன், அது தான் கேப்டன், ஒரு ராஜ தந்திரம் செய்தான். அந்தச் சூழ்ச்சியை எங்களிடம் மட்டும் விவரித்தான். ஏனெனில் எங்கள் பங்கு அதில் அதிகம். வேறு யாரிடமும் விஷயத்தைச் சொல்லிவிடக் கூடாது என்று கிராமத்தில் இருந்த அத்தனை சாமிகள் மீதும் சத்தியம் வாங்கிக்கொண்டான். குளக்ககரையில் இருந்த நாக தேவதையைக்கூட விடவில்லை அவன். நாங்களும் யாரிடமும் மூச்சு விடாமல் சத்தியம் காத்தோம். கொஞ்சம் கேவலமான ஐடியாவாகத் தோன்றினாலும் அதை விட்டால் வேறு வழியேயில்லை என்ற நிலை. நாங்கள் ஆவலோடும் பயத்தோடும் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. கொஞ்சம் கூட மழை வருவதற்கான அறிகுறியே இல்லை.

சினிமாக்களில் வருகிற மாதிரி எங்கள் கிராமமே ஒன்றும் வண்டி கட்டிக்கொண்டு வரவில்லை. நாங்களும் ஆம்பூர் அணியும்தான் இருந்தோம். களமிறங்குமுன் எங்கள் கேப்டன் எங்களைத் தயாராக இருக்கும்படி செய்கை காட்டினான். எங்களுக்கு உள்ளூர திக் திக் என்று இருந்தாலும் வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லை. எங்கள் அணி நாற்பது ரன்களில் ஆல் அவுட்.

ஆம்பூர் அணி பேட் செய்ய ஆரம்பித்த பிறகுதான் எங்கள் வேலையைக் காட்டினோம். பௌண்டரி லைனில் இருந்து கொண்டு எந்த ஒரு பாலையும் வெளியில் செல்ல விடமாட்டோம். பயங்கரமாகக் கத்தி கலாட்டா செய்வோம். ஆம்பூர் அணி ஆட்களின் பெயர்களைச் சொல்லிக் கேலி செய்வோம். என் அண்ணனின் சூழ்ச்சி புரிந்ததல்லவா? ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, இரண்டு அணிகளும் பேட்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த நேரத்தில் எங்களை வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார்கள். அங்கே பிடித்த ஓட்டம், வீட்டில்தான் வந்து நின்றோம்.

அந்த மாட்ச் டிரா தான். என்றாலும் குட்டி சங்கர் எங்களை எல்லாம் அடித்து நொறுக்குவதாகக் கத்திவிட்டுப் போயிருந்ததால் கொஞ்ச நாட்கள் எங்கள் அண்ணன்கள் புடைசூழ, பள்ளி சென்றோம். சில நாட்களிலேயே அடுத்த சீசனான பம்பரம் விளையாட்டு தொடங்கவே, கிரிக்கெட்டைப் பற்றியும் குட்டி சங்கர் பற்றியும் மறந்து போனோம்.

மழை நின்ற பின்னும் வரும் மண் வாசனை மாதிரி, கிரிக்கெட் பார்க்கும்போதெல்லாம் இந்த இனிய நினைவுகளில் மூழ்கிக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்!!!

(மேலும் நனைவோம்…

===================================

படத்திற்கு நன்றி – http://www.travelpod.com

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 3

  1. Congrats to Srija Venkatesh. It has been really a nice experience to read her stories. I am going back to my olden days(nostalgic memories). I want her to continue the good work.I wish her all the best.

  2. Cricket is a game which is enjoyed by almost all Indians. Playing cricket especially during the childhood days is a pleasant experience and lovable memory. The Writer has very beautifully described the happenings in her village. Good work.

  3. Madam, nice article. well written. I’m going back to my school days. I know that kutty shankar very well. because I’m also from kizha ambur. I think now he is in mumbai. congrats.

    Egnath raj.
    aadumaadu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.