பாஸ்கர பாரதி 

வெற்றி முரசு கொட்டுவது அப்படியொன்றும் கடினமான பணி அல்லதான். ஒரு முரசும், கொட்டுவதற்குக் கரங்களும் இருந்தாலே போதும்தான். ‘வெற்றி’ ‘வெற்றி’ என்று விண்ணதிர முழங்குவதும் வீர முரசு கொட்டுவதும் யாருக்குமே சாத்தியமாகிற சங்கதிதான். ஆனால், பெற்றிருக்கிற ‘வெற்றி’, ஈட்டியிருக்கிற ‘ஜெயம்’ எத்தன்மையது? ஆற்றி முடித்த அலுவல், பன்னிப்பன்னி மாய்ந்து மாய்ந்து செய்து முடித்த பணி என்ன? 

முரசு கொட்டி ஊருக்கும் உலகுக்கும் பறை சாற்றுகிற வகையில் கத்தானதாய் மகோன்னதமானதாய் நற்காரியம் ஏதும் நிறைவேறியிருக்கிறதா? வாய்ச்சொல் வீரர்களாய் முரசொலிப்பதில் வறட்சியும் மிரட்சியும் அன்றி மிஞ்சுவது என்ன? 

‘அச்சம்’ – மனித இனம் வெற்றி கொள்ளவொண்ணா வெறி கொண்ட பேய். அதனை எதிர்த்துப் போராடிக் கொன்று போட்டிருக்கிறோமா? ‘வாய்மையே வெல்லும்’ எனும் வாசகத்தை மட்டும் நியான் விளக்குகளில் ஜொலிக்க விட்டுப் பொய்மை இருளை மனச் சிறையில் பூட்டி வைத்திருக்கிறோமா? உள்ளுக்குள்ளே இருந்து ஆலகால விஷத்தைக் கக்கும் இந்த பொய்மைப் பாம்பை மாய்த்து விட்டோமா?

விண்ணையும் மண்ணையும் கடந்து நின்று மாபெரும் பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் அகன்று பரந்து, விரிந்து விரிந்துச் செல்லும் அண்டத்தின் ஓர் அணுவாய், எல்லாம் தானாய், தன்னுள் எல்லாமாய்க் காணும் ஆனந்தப் பரவச நிலையை அடைவதற்கு வழி கோலும் புனித மறை நூல்களை வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகாட்டிகளாய்க் கொண்டு வாழ்ந்து காட்டினோமா? 

ஞாலம் முழுதும் இருட்கணங்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமாறு வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சி உயிரினங்களை உய்விக்கும் ஞாயிறு நமக்குத் துணையுண்டு. உயிர்களை மாய்த்தொழிக்கும் காலதேவன், கலக்கத்தில் கட்டுண்டு மருண்டு போகச் செய்கிற விதத்தில் உறக்கத்தை விட்டொழித்தோமா? விழிப்புணர்வில்தான் இந்த வையம் உயர்வதற்கான வழி ஒளிந்து கிடக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?  உயர்ந்திருக்கிறோமா? 

இதெல்லாம் கூடப் போகட்டும். அதோ.. தன் ‘கரகர’ குரலில் தன் இனத்தோர்க்கு அழைப்பு விடுத்துக் கிடைத்தது சிறிதளவேனும், தம்முள்ப் பகிர்ந்து உண்ணும் சோஷலிசச் சகோதரர்களாய்ப் பறந்துத் திரியும் காக்கைகளை நாம் வியந்ததுண்டா? இதோ, சன்னல் வழியே நம் வீட்டினுள் நுழைந்துச் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சிட்டுக்குருவியையும் நம்மில் ஒரு சீவனாய்த் தம்பியாய்த் தங்கையாய்ப் பாவிக்கிற, மதித்து நடக்கிற மனப்பக்குவத்தை நாம் பெற்றிருக்கிறோமா? நம்மோடு ஒன்றாய்ப் படித்த, ஒன்றாய்ப் பழகிய, ஒன்றாய்ப் பணி புரிந்த இனிய நண்பர்களிடையேயும் ‘சாதி’ பார்க்கிற கீழ்த்தரமான எண்ணங்களினின்றும் விடுபட்டுக் காக்கை குருவியையும் மனிதச் சாதியில் இணைத்துப் பார்க்கிற மகாகவியின் மகோன்னத நிலையை நாம் எட்டிப் பிடித்து விட்டோமா?  

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம்மால் ‘ஆம்’ என்று உண்மையிலேயே விடை பகர முடியுமானால், தாராளமாய் முரசு அறையலாம். அதுதான் வெற்றி முரசாக இருக்கும். மற்றவை எல்லாம் வெற்று முரசுகளே.

தமிழின் தனிப்பெருங் கவிஞனின் ஜெயபேரிகையின் முழக்கம் நம்மைத் தலை நிமிர வைக்கிறது.

இதோ அந்தப் பாடல்..

ஜய பேரிகை

பல்லவி 

ஜய பேரிகை கொட்டடா – கொட்டடா

ஜய பேரிகை கொட்டடா! 

சரணங்கள் 

பயமெனும் பேய்தனை யடித்தோம் – பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;

வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.  (ஜய பேரிகை) 

 

இரவியினொளியிடைக் குளித்தோம் – ஒளி

இன்னமு தினையுண்டு களித்தோம்;

கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்

காலன் நடுநடுங்க விழித்தோம்.          (ஜய பேரிகை) 

 

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம்.             (ஜய பேரிகை) 

 

படத்திற்கு நன்றி: http://itgoatnp.blogspot.in/2011/09/remembering-great-national-poet.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *