திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி

0

சு.கோதண்டராமன்

இடம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையம். விஞ்ஞானிகளும் தொழில் வல்லுநர்களும் இரண்டு ஆண்டு காலமாகக் கடுமையாக உழைத்து உருவாக்கிய இன்சாட் விண்கலம் ஏவப்பட நாள் குறித்தாகி விட்டது. இன்னும் சரியாக 30 நாட்கள் உள்ளன. எந்தெந்த நாளில் எந்தெந்த வேலை முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் சரியாக வல்லுநர்கள் முடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்கள் 30, 29, 28 என்று குறைந்து கொண்டே வருகின்றன. 

ஆயிற்று, இன்னும் 24 மணி நேரம் தான் உள்ளது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் பொருத்தப்பட்டு விண்கலம் ஏவப்படத் தயாராக உள்ளது. விஞ்ஞானிகள் கடைசி நேரச் சோதனையில் மூழ்கி இருக்கின்றனர். ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் முழுத் திட்டமும் தோல்வி அடைந்து விடுமே. உலகத்து நாடுகள் எல்லாம் நம் திறமையைத் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு அல்லவா? 

மணிக் கணக்கு முடிந்து நிமிடங்கள் தான் பாக்கி. அதுவும் முடிந்து வினாடிகள் தான் உள்ளன. சோதனைக் கூடம் முழுவதிலும் உள்ள எல்லாக் கடிகாரங்களும் 60, 59, ….10, 9… என்று வினாடி மீதத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அத்தனை பேர் இதயத்திலும் படபடப்பு. பத்திரிகை நிருபர்களும் தொக்காக் காமிராக் காரர்களும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ 5, 4, 3, 2, 1, 0…ராட்சசப் புகையைக் கக்கிக் கொண்டு ராக்கெட் கிளம்பி விட்டது. ஒவ்வொரு தொழில்  வல்லுநரும் தங்கள் தங்கள் கணினிக்கு முன் அமர்ந்து அது சரியான பாதையில் செல்கிறதா என்று கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

புறப்பட்டு 7 நிமிடம் 16 வினாடியில் திட்டமிட்டபடி விண்கலம் சுற்றுப்பாதையில் செல்லத் தொடங்கியதும் இது வரையில் அடக்கி வைத்திருந்த மூச்சு பெருமூச்சுகளாக வெளி வந்து எல்லார் முகத்திலும் புன்னகை மலர்களைத் தூவுகின்றன. நிலையத் தலைவர் தன் உதவியாளர்களைப் பாராட்டிக் கை குலுக்குகிறார். வல்லுநர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்தக் காட்சிகளை நம் வீட்டுத் தொக்கா முன் அமர்ந்து பார்த்துக் கொண்ருக்கின்ற நாமும் சுய நினைவுக்கு வருகிறோம். 

கிட்டத்தட்ட இதே போன்ற பரபரப்பு திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவிலும் காணப்படுகிறது. ஒரு சனிப்பெயர்ச்சி முடிந்த உடனேயே அடுத்தச் சனிப் பெயர்ச்சிக்கான நாள் கணக்கிடப்பட்டு அதற்கான ஆயத்தங்கள் தொடங்கி விடுகின்றன. இன்னும் 6 மாதம் இருக்கிறது என்ற நிலையில் அமைச்சரவை மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. 10 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து அவர்களுக்குத் தேவையான வசதிகள் திட்டமிடப் படுகின்றன.

நாட்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து அந்த நாளும் வந்து விடுகிறது.  பள்ளிகளுக்கு விடுமுறை. எங்கும் காவலர்கள் குவிப்பு. பேருந்துகள் வழித்தடங்களில் மாற்றம். தொலை தூரங்களிலிருந்து பக்தர்கள் பல வகையான வாகனங்களில் வந்து குவிகின்றனர். கோவில் பூராவும் சவுக்கு மரத் தடுப்புகளால் வேலி அமைக்கப்பட்டுப் போக்குவரத்து நெறிப்படுத்தப் படுகிறது. அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் எல்லார் மத்தியிலும் பரபரப்பு.

சரியாக 7.51க்கு சனீஸ்வர பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்குப் பெயர்கிறார் என்பதை அனைவரும் நினைத்துக்  கொள்கிறார்கள். வினாடிகள் கரைந்து சரியாக 7.51-ம் வருகிறது. தீபாராதனை நடக்கிறது.  சரியான நேரத்தில் அங்கு இருக்கும் பேறு பெற்றப் பெரும் புள்ளிகள், அமைச்சர்கள், மத்திய, மாநில உயர் அதிகாரிகள் இவர்களுக்குத் தான் அந்த நேரத்தில் அங்கு இடம் இருக்கிறது. தரிசனம் செய்து பிறவிப் பயனை அடைந்து சனீஸ்வரன் அருளைப் பெற்றுக் கொண்டு நகர்ந்த பின், மீதி இருக்கும் அருளைப் பெறச் சாமானியர் கூட்டம் நெருக்கி அடித்துக் கொண்டுச் சன்னிதியை நோக்கி நகருகிறது. தரிசனம் முடிந்து வெளி வந்த பின் சனி தன்னைப் படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையுடன் ஊருக்குத் திரும்புகிறார்கள். அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் இன்றி இன்ப துன்பங்கள் தொடர்ந்தாலும் அடுத்த சனிப் பெயர்ச்சிக்கு மீண்டும் நம்பிக்கையோடு மக்கள் குழுமுவது குறைவதில்லை. 

சனிப்பெயர்ச்சியன்று அந்த நேரத்தில் திருநள்ளாறில் தரிசனம் செய்வதன் மூலம் தங்களது விதிப்பயனை மாற்றி விட முடியும் என்று எண்ணும் பலவீனமான மனம் கொண்டோரின் செயல் இதை எழுதத் தூண்டியது.

சிந்தனைக்குச் சில விஷயங்கள். 

1.திருநள்ளாறில் சனி என்ற பெயரில் வணங்கப்படுவது சனியே அல்ல. அது முருகன். ஆம், சிவன் கோவிலின் கோபுரத்தை ஒட்டிய வடக்குக் கோட்டத்தில் இருக்க வேண்டியவர் முருகனே. திருநள்ளாறில் முறைப்படித் தெற்குக் கோட்டத்தில் விநாயகர் இருக்கிறார். வடக்குக் கோட்டத்தில் இருந்த முருகன் தன் பெருமையை இழந்து மாறுவேடம் அணிவிக்கப்பட்டுத் தொல்லைப் படுத்தப் படுகிறார். யாரோ கற்றுக்குட்டிச் சிற்பி மயிலைக் காக்கை போல் செதுக்கி இருக்கிறான். அவ்வளவு சிறிய இடத்தில் மயிலை மயிலாகக் காட்டத் திறமையான சிற்பியால் தான் முடியும். 

2. ஆகம விதிகளின் படி நவக்கிரகம் இல்லாமல் தனியாகச் சனியின் சிலை அமைக்கப்பட்டால் அது பைரவர், சூரியன் சிலைகளுக்கு இடையில் மேற்கு நோக்கி இருக்க வேண்டும். திருநள்ளாறில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

3. முருகனாகவே இருந்து விட்டுப் போகட்டுமே, வணங்குவதில் என்ன தவறு என்று கேட்கலாம். முருகனை எந்த நாளும் கும்பிடலாமே.  சனிப் பெயர்ச்சியன்று என்ன சிறப்பு? 

4. சிவன் கோவிலில் சிவன், அம்பாள், விநாயகர், முருகன், சண்டேசுரர் தவிர சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று சைவச் சித்தாந்தம் கூறுகிறது. நவக்கிரக வழிபாடு காலத்தால் பிற்பட்டது. இது உண்மையான சைவச் சமய முறை அல்ல.

5. சனீஸ்வர பகவான் என்ற பெயரே தவறு. சனைச்சரன் என்பதே அதன் சரியான பெயர். இந்த வட சொல்லின் பொருள் மெதுவாக நகர்பவன் என்பது. தலைவன் என்று பொருள்படும் ஈசுவரன் என்ற சொல் முழு முதற் கடவுளான சிவனுக்கே உரியது. பகம் என்ற சொல் தலைமைப் பண்பு, வீரம், புகழ், ஞானம், செல்வம், வைராக்கியம் ஆகிய ஆறு பண்புகளையும் ஒருங்கேக் குறிக்கும். பகம் அமைந்தவர் தான் பகவான். சனிக் கோளுக்கு இந்தப் பண்புகள் உண்டெனில் அவரே முழுமுதல் கடவுளாக வணங்கப்பட வேண்டியவராவார். 

6. சனிப் பெயர்ச்சித் தேதிக்கும் நேரத்துக்கும் அளவு கடந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் உண்மையில் சனி அந்த நேரத்தில் பெயர்வதில்லை. பஞ்சாங்கம் கணிப்பதில் திருக்கணிதம், வாக்கியம் என்று இரு வகைகள் உண்டு. இவற்றில் திருக்கணிதம் திருத்தமானது. பிழைபட்ட முறையான வாக்கிய முறையே திருநள்ளாறில் பின்பற்றப் படுகிறது. 

7. பெயர்தல் என்ற சொல் அது வரையில் அசையாமல் இருந்த ஒரு பொருள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இடம் நகருவதைக் குறிக்கும். சனிக் கிரகம் ஓயாமல் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ராசிகளுக்கு இடையே மனிதர் வகுத்து வைத்துள்ள எல்லைக் கோட்டைக் கடக்கும் அந்த வினாடியில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

8. சோதிட நூல்களின்படி சனி ஒரு ராசியில் நுழைவதற்கு 6 மாதம் முன்பே அந்த அடுத்த ராசியின் பலனைக் கொடுக்க ஆரம்பித்து விடுவார். எனவே சனிப் பெயர்ச்சியன்று தரிசிப்பதால் விசேடப் பலன் என்பது மாயையே.

9. நளன் திருநள்ளாறுக்கு வந்து கலி நீங்கப் பெற்றதாக எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை, புராண ஆதாரமும் இல்லை. நளன் கதை முதன் முதலாகக் காணப்படுவது பாரதத்தில். அதில் திருநள்ளாறு, தர்ப்பாரணியேசுவரர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பின்னர்த் தோன்றிய வடமொழி நைடதத்தில் தான் அப்படிப்பட்டக் குறிப்பு இல்லை என்றால் 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புகழேந்தி எழுதிய தமிழ் நள வெண்பாவில் கூடத் திருநள்ளாறு பற்றியக் குறிப்பு இல்லை. 

10. மகாபாரதத்திலும், நைடதத்திலும், நள வெண்பாவிலும் நளனைக் கலி பிடித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. கலி என்பது கலியுகத்தின் பிரதிநிதி. நளனைப் பிடித்ததில் அவனுடைய அண்ணன் துவாபரன் உதவுகிறான். கலிக்கும் சனிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நளன், ருதுபன்னன் என்ற அயோத்தி மன்னனுக்குத் தன் தேரோட்டும் கலையைக் கற்றுக் கொடுத்து விட்டு அவனிடம் சூதாடும் கலையைக் கற்றான். அதனால் தான் கலி அவனை விட்டு நீங்கினான் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவனைத் தரிசித்துக் கலி நீங்கியதாகக் கூறப்படவில்லை.

11. நளனையும் திருநள்ளாறையும் தொடர்பு படுத்தும் ஒரே குறிப்பு சம்பந்தரின் தேவாரம் ஒன்று. விளங்கிழை என்று தொடங்கும் இது நளன் கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாறே என்று முடிகிறது. நளன் நாள் தோறும் வழிபாடு செய்தான் என்று இருப்பதால் கலி நீங்குவதற்காக இங்கு வந்து ஈசனைத் தரிசித்தாகக் கூறப்படும் நிடத நாட்டு மன்னனைத் தான் இது குறிக்கிறதா என்பது தெரியவில்லை. தேவாரத்திலோ மற்ற திருமுறைகளிலோ வேறு எங்கும் இவ்வரலாறு குறிப்பிடப் படாததால் அது (நலம் கெழுவி போன்ற) வேறு சொல்லாக இருந்து ஏடெழுதுபவரின்  தவறால் நளன் என்று மாறியதா என்பதும் தெரியவில்லை.

12. சற்று நேரம் திருவிடை மருதூர் போய் வருவோம். பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்ட ஒரு சோழ அரசன் மகாலிங்கச் சுவாமியைத் தரிசிக்கச் செல்கிறான். சன்னிதியை அடைந்ததும் அவனைப் பிடித்த பிரம்மஹத்தி அவனிடமிருந்து விலகித் தென்புறக் குடைவரையில் ஒதுங்கி விட்டது. அவன் திரும்பி வரும் போது பிடித்துக் கொள்ளலாம் என்று அது திட்டமிட்டதாம். சோழன் வேறு வழியாகத் திரும்பி விட்டான். பிரம்மஹத்தி இன்னமும் கிழக்குக் கோபுர வாயிலில் காத்துக் கொண்டிருப்பதாக அவ்வூர்த் தலபுராணம் கூறும். பக்தர்கள் இன்றும் கிழக்குக் கோபுர வாயில் வழியே நுழைந்து முழுமுதல் கடவுளைத் தரிசித்து வினை நீங்கப் பெற்றவர்களாய் உணர்ந்து வேறு வாயில் வழியே வெளி வருகின்றனர்.

நளன் தர்ப்பாரணியேசுவரரைத் தரிசித்ததால் சனிப் பீடிப்பு நீங்கப் பெற்றான் என்று ஐதிகம் கூறுகிறது. ஆனால் திருநள்ளாறில் வினை நீக்கிய தர்ப்பாரணியேசுவரர் சன்னிதி வெறிச்சோடிக் கிடக்க, வினையாக வந்த சனியின் சன்னிதியில் கூட்டம் அலை மோதுகிறது.  

13. தன்னைக் குறிப்பிட்ட அந்த நேரத்தில் தரிசித்தவர்களுக்கு மட்டுமே தெய்வம் அருள் பாலிக்கிறது என்பது இறைவனின் அளப்பருங் கருணைக்கு இழுக்கு. 

14. சனிப் பெயர்ச்சி அன்று மட்டுமல்லாது சாதாரணச் சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறில் திரளான மக்கள் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கான பேர் அபிஷேக டிக்கெட் வாங்குகிறார்கள். பத்துப் பத்து பேருக்காகச் சேர்த்துச் செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஐந்து லிட்டர் நல்லெண்ணெய்  விக்கிரகத்தின் தலையில் கவிழ்க்கப் படுகிறது. அரை மணியில் அடுத்த அபிஷேகம். மீண்டும் ஐந்து லிட்டர் நல்லெண்ணெய். மக்களுக்குச் செலவழிக்கும் சக்தி இருக்கிறது என்பதற்காக இப்படிப் பொருளை வீணாக்க வேண்டுமா என்று கேட்பவர்கள் நாத்திகர் என்று முத்திரை குத்தப் படுகிறார்கள். 

விண்ணில் உள்ள கோள்களுக்கும் மண்ணில் உள்ள பொருள்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. சந்திரன் மனத்தோடு தொடர்புடையது என்பது முழு நிலவு நாளன்று மன நோயாளிகள் மிகுதியாகப் பாதிக்கப் படுவதிலிருந்து அறிகிறோம்.

சனி என்பது சூரியனை மெதுவாகச் சுற்றும் கோள். எனவே அது மந்தன் எனப்படுகிறது. குறிப்பிட்டக் காலங்களில் அது மனித மனத்தில் மந்தத் தன்மை ஏற்படுத்தக் கூடும் என்பதைக் கூட நம்பலாம். அதாவது நமக்குச் சோம்பல், தாமதம் செய்யும் மன நிலை ஏற்படலாம். அதனால் நாம் செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்பட்டுத் துன்பங்கள் ஏற்படலாம். எள், எண்ணெய் போன்ற நரம்பு ஊக்கிகள் நம் உடல் தொய்வை நீக்கிச் சுறுசுறுப்பைத் தரக் கூடும். இது பற்றிய ஆய்வு தேவை. விக்கிரகத்தின் மேல் குடம் குடமாக எண்ணெய்யைக் கொட்டுவது இறைவனை எப்படி மகிழ்விக்கும் என்பது தெரியவில்லை.

எப்படியோ சோதிடர்கள் தயவில் சனி ஈசுவரானாகவும் பகவானாகவும் ஆகி விட்டார். தரிசிக்கும் பக்தர்களை அவர் வாழ வைக்கிறாரோ இல்லையோ சிவாச்சாரியார்களையும் கோவிலைச் சார்ந்த வணிகர்களையும் வாழ வைக்கிறார் என்பதில் ஐயமில்லை.

 

படத்திற்கு நன்றி: http://saneeswarantemple.blogspot.in

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.