சுற்றுலாப் பொருட் காட்சி – தீவுத் திடல்

0

ஸ்ரீஜா வெங்கடேஷ் 

38-ஆவது சுற்றுலாப் பொருட்காட்சி தீவுத் திடலில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அரசு நடத்தும் பொருட்காட்சி இது. கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.  எப்படித்தான் இருக்கிறது? பார்ப்போமே என்று போயிருந்தோம். எடுத்த எடுப்பிலேயே ராமேஸ்வரம் கோயிலின் பிரம்மாண்டமானப் பிராகாரத்தை அழகாகப் பெரிதாக்கி கட் அவுட் வைத்திருக்கிறார்கள். பஸ்ஸிலிருந்து பார்த்து வரும் போது நாமே அதனுள் நுழைவது போன்ற காட்சிப் பிழையை ஏற்படுத்துவது ஒரு இனிய அனுபவம். 

உள்ளே நுழையப் பெரியவர்களுக்குப் பதினைந்து ரூபாய்க் கட்டணம், சிறார்கள் என்றால் ஐந்து ரூபாய் என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் தமிழக அரசால் நடத்தப்படும் பல துறைகளின் காட்சியரங்குகள் நம்மை அழைக்கின்றன. பொது மக்கள் பல துறைகளையும் சென்று பார்ப்பதேயில்லை. அங்குள்ளவர்களும் அது பற்றிக் கவலைப் படுவதுமில்லை. மக்கள் பெருவாரியாகச் சென்று பார்த்த அரங்குகள் என்று சொல்ல வேண்டுமானால் வனத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, சென்னை மாநகராட்சி,  மின்சாரத் துறை அவ்வளவு தான். இதில் எனக்கு விளங்காதது, மக்கள் ஏன் மின்சாரத் துறையில் ஆர்வம் காட்டினார்கள்? என்பது தான். ஒரு வேளை மின் வெட்டுக்கான காரணம் அறியவோ?

 மேற் கூறிய துறைகள் அனைத்தையும் நாங்களும் சென்று பார்த்தோம். வனத்துறையில் ரிசர்வ் காடுகள் (reserve forest) [ஆமாம் இதற்குத் தமிழ் என்ன? அண்ணா கண்ணன் சார் சொல்வாரா?] என்று சிலவற்றைச் சொல்லியிருந்தார்கள். அங்கே இருக்கும் சில விலங்குகளையும் அட்டவணைப் படுத்தியிருந்தார்கள். ஆனால் உண்மையில் அந்த உயிரினங்கள் அங்கு இருக்கின்றவா? படங்களில் இருப்பது போல நெடிய பசுமையான மரங்கள் இருக்கின்றனவா? என்பது கடவுளுக்கே வெளிச்சம். சந்தன மரத்தின் மாதிரி ஒன்றும் வைத்திருந்தார்கள். பல்கிப் பெருகியிருக்க வேண்டிய தமிழ் நாட்டின் சொத்தான சந்தன மரம் இப்படிக் காட்சிப் பொருளாதல் கொடுமை.

பட்டுத் துறை தான் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. (எல்லாப் பெண்களுக்கும் அது தான் பிடிக்கும் என்று என் கணவர் முணு முணுக்கிறார்) . அங்கே பட்டுப் பூச்சியின் பலப் பருவங்கள், மற்றும் பட்டுக் கூடு எல்லாம் வைத்திருந்தார்கள். பல வகையான சாயமேற்றப் பட்டக் கூடுகளும் பார்வைக்குக் கிடைத்தன.  நவீன ரகப் பட்டுக் கூடுகள் சாயமேற்றப் பட்டேத் தயாராகின்றன. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. விசாரித்த போது சில குறிப்பிட்ட நிறங்களை மட்டுமே அப்படிச் சாயமேற்ற முடியுமாம். எல்லா நிறங்களையும் முடியாதாம். இழைகளாகப் பட்டு நூல்களாக மாற்றப் பட்ட பிறகே எல்லா நிறங்களிலும் சாயமிட முடியும் என்று கூறினார்கள். பட்டு வளர்ச்சித் துறையினரே எல்லா வசதிகளும் செய்து கொடுத்து விளக்கங்களும் அளித்து, சுய தொழில் புரிய விரும்புவோர்க்கு வாய்ப்பு அளிக்கக் காத்திருக்கின்றனர். விருப்பமுள்ளோர் பயன் படுத்திக் கொள்ளலாம்.

மின்சாரத் துறையில் எல்லாமே மாதிரிகள் தான். சில செய்முறை விளக்கங்களையாவது அவர்கள் வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் கை வைத்தால் குழந்தை அழுவது போலச் சத்தம் வந்தது. எங்களுக்கு முன்னால் ஒரு கைக்குழந்தையோடு வந்திருந்த பெற்றோர் அங்குக் கை வைக்கவே குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு அவர்களுடைய குழந்தையும் அழ ஆரம்பித்து விட்டது. ஏன் குழந்தை சிரிப்பதைப் போல வைத்திருக்கலாம் அல்லவா? இதுவும் என் யோசனை தான்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த அரங்கில் சில அபூர்வக் கறுப்பு  வெள்ளைப் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.  ஆங்கிலேயர் காலத்துச் சென்னையின் சில பகுதிகள் புகைப்படங்களாக இடம் பெற்றிருந்தன. முக்கியமாக மவுண்ட் ரோடு (இன்றைய அண்ணாசாலை). அப்போதும் அங்கு நெரிசல் மிகுதியாக இருந்திருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம் கார்களுக்குப் பதில் மனிதர்கள் நடமாட்டம் அவ்வளவுதான். சில சாலைகள் உதாரணமாக மௌபரீஸ் சாலை. அப்போது மரங்கள் அடர்ந்து ஒரு சோலை மாதிரி இருந்திருக்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாமல் சொர்க்கத்தின் நிழல் போல இருக்கிறது. மவுண்ட் ரோடை மழைக்காலத்தில் புகைப்படம் எடுத்திருந்தார்கள். அப்போதும் ஆட்கள் தொடை வரை நீர் தேங்கியிருந்த சாலை வழியாகவேப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். அது ஒன்று தான் இன்னும் மாறாத காட்சியாக இருக்கிறது. அந்தப் புகைப் படங்கள் மற்ற நாட்களில் எங்குக் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் என்ற கேள்விக்கு விடை யாருக்கும் தெரியவில்லை.

இந்தக் காட்சி அரங்குகளைக் கடந்துக் கூவத்தைப் பாலம் மூலமாக மூக்கைப் பிடித்துக் கொண்டே தாண்டினால், மற்றொரு திடல். அங்கு திறந்த வெளி மேடை அமைக்கப் பட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாங்கள் போயிருந்த போது கிளிமஞ்சாரோ பாடலை மிகவும் அபசுரமாகக் கேட்கவே முடியாதபடி ஏதோ ஒரு குழு பாடிக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் யாரும் பாட்டுக் கேட்க வந்தவர்களாகத் தோன்றவில்லை. கால் வலிக்குச் சற்று நாற்காலிகளில் இளைப்பாறவே உட்கார்ந்திருந்தனர். இந்தப் பக்கம் முழுவதும் உணவுப் பொருட்கள் தான். பொருட்காட்சிகளுக்கே உரித்தான டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி முதல், சாட் ஐட்டங்கள், பானி பூரி, வரை கிடைத்தன. அசைவ உணவுகளுக்கும் பஞ்சமில்லை.

நெய்தல் அமைப்பின் சார்பாகக் கடல் உணவுகள் நிறையவே கிடைத்தன. நாங்கள் சைவம் என்பதால் அதன் பக்கம் போகவில்லை. ஒரு சிலர் அவை சுத்தமாகத் தயாரிக்கப் படவில்லை என்று குறை கூறியது எங்கள் காதில் விழுந்தது. இது ஒன்றும் புதிது இல்லை. இப்போது வெளியில் உணவுப் பொருட்கள் அது சைவமானாலும் சரி அசைவமானாலும் சரி! எங்கே சுத்தமாகத் தயாரிக்கப் படுகின்றன? வாங்கிச் சாப்பிடும் மக்களுக்கு நோயைத் தான் பரப்புகின்றன. அரசுச் சார்பில் நடத்தப் படும் கண்காட்சியிலாவது சுகாதாரத்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாகச் செயல் படலாம் அல்லவா? என்ன செய்ய இது தான் நம் தலையெழுத்து.

நிறையப் பேய்வீடுகள் சத்தத்தை அலற விட்டபடி மக்களை அழைத்துக் கொண்டிருந்தன. அந்த அரங்குகளின் வெளியே ஒரு சிலர் பேய் வேடம் பூண்டு கத்தியும் நடனமாடியும் பார்வையாளர்களை ஈர்த்தார்கள். இனி போகப் போக நெருங்கி வந்து பயமுறுத்துவார்களோ? என்னவோ? யார் கண்டார்கள்? சில நாட்களுக்கு முன் இத்தகையப் பேய்வீடுகள் பற்றிப் பத்திரிகைகளில் வந்திருந்த செய்தி காரணமாக மக்கள் குறிப்பாகப் பெண்கள் உள்ளே செல்ல மிகவும் தயக்கம் காட்டினார்கள்.

இவை தவிர விளையாட்டு ரயில், பெரிய ரங்க ராட்டினங்கள் எனப் பலவும் இருந்தன.  மொத்தத்தில் சிறுவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. பொதுவாக நாங்கள் கவனித்த ஒரு விஷயம் கழிவறை இல்லை என்பது தான். அப்படியே இருந்திருந்தாலும் அவை சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருக்குமா? என்பது கேள்விக் குறி தான். எக்ஸ்பிரெஸ் அவென்யூ, அபிராமி மால் போன்றவற்றில் கழிப்பறைகள் படு சுத்தமாக பராமரிக்கப் படுகின்றன. அரசு ஏற்று நடத்தும் இடங்களில் மட்டுமே இத்தகைய ஒழுங்கீனங்கள் நடை பெறுகின்றன. 

ஏன்? அரசுப் பொருட்காட்சிகளில் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் மனிதர்கள் இல்லையா? மக்களுடைய ஒத்துழைப்பும் இதில் அவசியம் என்பது எனக்கு ஒரு நிகழ்ச்சி மூலமாகப் புரிந்தது. ஒரு இளைஞர், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாப்கார்ன் பெரிய பாக்கெட்டைத் தீர்ந்து போனவுடன் அப்படியே கீழே போட்டார். அவர் போட்ட இடத்துக்கு வெகு அருகிலேயே குப்பைக் கூடை இருந்தது என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அதே இளைஞர் தான் செல்லும் மால்களில் இவ்வாறு செய்வாரா? நம் அனைவருக்குமே அரசு என்றதும் ஒரு மெத்தனம் , அலட்சியம் தானே வந்து விடுகிறது. இந்த மனப்பான்மை குறைய வேண்டுமானால் பொது இடங்களில் சிற்சில பிழைகள் செய்வோர் உதாரணமாகப் புகை பிடிப்போர், குப்பையைக் கீழே போடுவோர் ஆகியவர்கள் மீது தண்டனை  கடுமையாக்கப் பட வேண்டும். தண்டப் பணம் அதிகரிக்கப் பட வேண்டும். அப்போது மட்டுமே இவை குறையும்.

அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக ஒரு அரங்கு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மையிலேயே சில செய்முறை விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. முடிவில்லாக் கிணறு (due to multiple reflection), மற்ற கிரகங்களிலும் நிலவிலும் நம் எடை என்னவாக இருக்கும்? என்பதைக் கண்டறியும் எடை இயந்திரம், தலை கீழ் பிம்பம் தோன்றும் கண்ணாடிகள். எனப் பல இருந்தன. எங்களைப் போன்றவர்கள் பக்கத்தில் இருந்த விளக்கத்தை (தமிழ், மற்றும் ஆங்கிலம்) படித்துப் புரிந்து கொண்டு சில சோதனைகளை நாங்களே செய்து பார்தோம். ஆனால் பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு விளக்கமளிக்கத் துறையினர் யாரையாவது நியமித்திருக்கலாம். அப்படிச் செய்தால் இந்த அரங்கு மக்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.

இவை தவிரப் பொட்டுக் கடைகள்,  பாத்திரக் கடைகள், துணி மணிகள் எனப் பல அங்காடிகள் காணத் தெவிட்டாதவை.

அரசு ஏழை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், நடத்தும் பொருட்காட்சி இன்னும் சில மாதங்கள் இருக்கும். அதாவது குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை விடுவது வரை நடக்கும். சிற்சிலக் குறைகளைத் தவிர நன்றாகவே இருக்கிறது. நாமும் போய்ப் பார்த்து வரலாமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.