நவீனம்
பிச்சினிக்காடு இளங்கோ
குறியீடுகளைக் காட்டுங்கள்,
படிமப்படுத்துங்கள்
மனவெளி மின்னல்களை.
அகவயத் தேடல்களைச்
சித்திரமாக்குங்கள்,
உங்கள் மொழியில்
நடந்து செல்லுங்கள்.
விருப்பம் போல
நடந்து திரும்புங்கள்,
பத்திரப்படுத்துங்கள்
எந்தத் திறவுகோலுமின்றி.
வீடு கட்டுங்கள்
ஜன்னல்கள் இன்றி,
முட்டி மோதி
ரத்தம் கட்டிய நெற்றியோடு,
அதை
எத்துணை அடைமொழியோடும்
அழைக்க
நாங்கள் தயார்.
கருத்தரங்குகள்
காத்திருக்கின்றன
லாபமுமில்லை
நட்டமுமில்லை யார்க்கும்
ஆனாலும்
உங்கள் கவிதை
எல்லாரின் ஆய்விலும்
எடுத்துக்காட்டாய்
இடம் பெறும் லாபம் உங்களுக்கு.
படத்திற்கு நன்றி: http://thetruthofsmallsteps.com/2010/04/02/write-on-%E2%80%93-the-personal-script