ஓரினச் சேர்க்கையில் இந்திய அரசின் நிலை
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் படும் பாட்டைப் பற்றி எழுதிய கையோடு இப்போது இந்தியாவில் இது பற்றிய கோர்ட் வழக்குகளும் இந்திய அரசின் வழ வழ கொழா கொழா நிலையும் செய்தியாக வெளி வந்திருக்கின்றன. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில பழமைவாதிகள் வாதிடுவது போலவே மத்திய அரசைச் சேர்ந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் “மற்ற நாடுகளின் கலாசாரத்திலிருந்து நம் நாட்டுக் கலாச்சாரம் வேறுபட்டது. சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கின்றனர் என்பதற்காகவே நாமும் அதை அங்கீகரிக்கக் கூடாது. ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது. இயற்கைக்கு எதிரானது” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இது எவ்வளவு பிற்போக்கான கொள்கை! இந்தியாவில் ஓரினச் சேர்க்கை பற்றி இலக்கியங்களில் குறிப்பு இருப்பதாகச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் (Evolution) முதலில் தோன்றிய ஓரணு ஜீவிகளிலிருந்து கடைசியாக மனிதன் உருவெடுத்தது வரை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஓரணு ஜீவியாக ஆரம்பித்த உயிரினங்கள் இப்போது பல கோடிக்கணக்கான அணுக்களையுடைய ஜீவராசிகளாக உருவெடுத்திருக்கின்றன. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாத நிலையிலிருந்து – (அமீபா (Amoeba), பரமேசியம் (Paramecium) போன்ற உயிரினங்களிலிருந்து – ஆண், பெண் என்ற இரண்டு வகைப் பால்களாக உருவெடுத்திருக்கின்றன. உயிரினங்களிடையே ஆண், பெண் என்ற பாகுபாட்டை ஏற்படுத்த உருவான Y க்ரோமோசோம் (Y chromosome) சுமார் 35 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவானதென்றும் முதலில் Y க்ரோமோசோமும் அதற்கு ஜோடியான X க்ரோமோசோமும் (X chromosome) ஒரே எண்ணிக்கையான எண்ணூறு மரபு அணுக்களைக் (genes) கொண்டிருந்ததாகவும் காலப் போக்கில் Y க்ரோமோசோம் தன்னுடைய மரபு அணுக்களை இழந்து இப்போது 17 மரபு அணுக்களைக் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்படியே போனால் முழுவதுமாக மறைந்து போய் பெண்கள் மட்டுமே உள்ள மனித சமுதாயம் உருவாகலாம் என்று ஒரு சாராரும், Y க்ரோமோசோம் முழுவதுமாக எப்போதும் அழியப் போவதில்லை, இன்னும் அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மரபு அணுக்களின் எண்ணிக்கை 27 ஆகலாம் என்று இன்னும் சிலரும் அபிப்பிராயப்படுகிறார்கள்*. இதெல்லாம் பரிணாம வளர்ச்சியின் பல படிகள். அதே போல் இப்போது ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் இருப்பதும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமே.
இன்னொரு சிந்திக்க வைக்கும் செய்தி. இப்போது அமெரிக்காவில் சில குழந்தைகளுக்குத் தங்களுடைய பால் இனம் (gender) பற்றிச் சந்தேகம் வந்து குழம்பிப் போயிருப்பதால் அவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
மூளை வளர்ச்சி குன்றியவர்கள், உடல் வளர்ச்சியில் குறை உள்ளவர்கள், இரண்டு பால்களிலும் சேராதவர்கள் (உதாரணமாகத் திருநங்கைகள்) ஆகியோர் அப்படி இருப்பதற்கு அவர்கள் காரணம் இல்லை என்பதோடு அவர்களால் அதை மாற்றவும் முடியாது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்களை மட்டும் அவர்களுடைய அந்த நிலை அவர்களாக வருவித்துக்கொண்டது, அதை அவர்களால் மாற்ற முடியும் என்று ஏன் இப்போது பலர் வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. இது சம்பந்தமாக அட்டர்னி ஜெனரலுக்கு எந்த அறிவுறுத்தலும் கொடுக்கவில்லை என்று இந்திய அரசின் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த கருத்தை மத்திய அரசு மறுத்திருக்கிறது என்று சொல்லலாம். மேலும் இந்தியாவில் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்ற புள்ளி விபரங்களைக் கொடுக்கும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கோரிக்கைக்கு இணங்க அந்தப் புள்ளி விபரங்களைத் தாமதமின்றிச் சேகரித்துக் கொடுக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் டெல்லி ஹைகோர்ட் அளித்த தீர்ப்பைச் சட்டமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தியிருப்பதை மத்திய அரசு ஆதரித்து உடனே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சில ஆப்பிரிக்க நடுகளில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் குற்றவாளிகள் என்று அரசே தீர்மானித்து அவர்களுக்குத் தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். தூக்குத் தண்டனை கொடுக்கலாம் என்ற அளவிற்குக் கூட போவார்கள் போல் தெரிகிறது. இது என்ன கொடுமை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட இப்படி ஒரு அறிவீனமா? இந்தியாவும் ஓரின நாட்டம் உள்ளவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற 1860-ஆம் ஆண்டுச் சட்டத்தை இந்தக் காலத்திலும் வைத்திருக்க வேண்டுமா?
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியு ஹேம்ஷையர் என்னும் மாநிலத்தில் இப்போது ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும். இதை மாற்றி அமைக்கக் கோரி சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது புதுமைக் கருத்துக்களை எதிர்நோக்கத் தயங்கும் பழமைவாதிகளின் அறியாமை. அமெரிக்காவில் இப்போதும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பல முற்போக்கு வாதிகள் இருந்தாலும் பரிணாம வளர்ச்சியைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிறைய பழமைவாதிகளும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் இருப்பதால் பழமைவாதிகள் நிறைந்த மாநிலங்கள் இவர்களுடைய செல்வாக்கிற்கு இணங்கச் சட்டங்கள் இயற்றிக்கொள்கின்றன. ஆனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை ஆதரித்து அதை எதிர்ப்பது அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தால் அது நாடு முழுவதும் சட்டமாகி விடும்.
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் குற்றமுள்ளவர்கள், அதனால் தண்டனைக்கு உரியவர்கள் என்று சில தீவிரப் பழமைவாதிகளை தவிர மற்ற யாரும் நினைப்பதில்லை. இவர்கள் ஈரினச் சேர்க்கையாளர்கள் போல் திருமணம் செய்து கொள்ளலாமா, அவர்களுக்குரிய உரிமைகள் இவர்களுக்கும் உண்டா என்பதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது.
இதே அமெரிக்காவில் சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையும் வெறுப்பதன் காரணமாகவே அவர்களுக்குத் தீங்கிழைத்தால் அதற்குத் தண்டனை உண்டு. இதை hate-crime என்கிறார்கள். இப்போது இந்தியாவிலிருந்து குடியேறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் மீது வழக்கு நடந்து வருகிறது. இவனோடு இவன் அறையைப் பகிர்ந்துகொண்ட ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடைய இன்னொரு மாணவன் தன் ஓரினச் சேர்க்கை நண்பனோடு உறவு கொண்டதை இந்திய மாணவன் வெப்காம் (webcam) என்ற கருவி மூலம் படம் பிடித்து ட்விட்டரில் (Twitter) வெளியிட்டதால் அந்த மாணவன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான். அவன் இறப்பிற்கு இந்திய மாணவன் காரணம் என்பதால் இப்போது அவன் மீது வழக்கு நடந்து வருகிறது. அவனுடைய வழக்கறிஞரோ “இந்திய மாணவனுக்கு ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்கள் மீது எந்த வித வெறுப்பும் இல்லை. சிறுபிள்ளைத் தனமாகத் தவறு செய்து விட்டான்” என்று வாதிட்டு வருகிறார்.
ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது, இயற்கைக்கு எதிரானது என்று வாதிட்டிருக்கும் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இவர்கள் இயற்கையால் படைக்கப்பட்டவர்கள் என்பதை மறுக்கிறாரா? யார் இவர்களைப் படைத்தார்கள் என்கிறார்? இவர்கள் தாங்களாகத் தங்களை இப்படிப் படைத்துக்கொண்டார்கள் என்று இவரால் வாதிக்க முடியாது. மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்தவர்களையோ கை கால் இன்றி ஊனமாகப் பிறந்தவர்களையோ, சரியான பால் இனப் பாகுபாடு இல்லாமல் பிறந்தவர்களையோ இவர்கள் இயற்கைக்குப் புறம்பாகப் பிறந்தவர்கள் என்று இனம் பிரித்துத் தண்டிக்க வேண்டும் என்று இவர் கூறுவாரா? அப்படியிருக்க ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்களை மட்டும் ஏன் இயற்கைக்குப் புறம்பானவர்கள் என்று கருத வேண்டும்?
இந்திய கலாச்சாரம் தொன்மையானதுதான். ஆனால் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு புதிய சமுதாயம் அமைப்போம் என்று உலகிற்கு இந்தியா எடுத்துச் சொல்லலாமே. ஒரு சமுதாயத்தின் கலாச்சாரம் என்பது அதன் உறுப்பினர்கள் யாவரும் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காமல் எல்லாரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதுதானே.
•இதைப் பற்றி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை http://www.nytimes.com/2012/02/23/science/y-chromosome-though-diminished-is-holding-its-ground.html?_r=1&scp=1&sq=Genetic%20Maker%20of%20Men%20Is%20Diminished%20but%20Holding%20Its%20Ground,%20Researchers%20Say%20&st=cse என்னும் வலைத்தள இணைப்பில் படிக்கலாம்.
படத்திற்கு நன்றி:http://www.onislam.net/english/family/your-society/gender-and-society/451118-same-sex-families-a-new-fact-of-life.html?Society=
ஓரின சேர்க்கை தவறான விசயமாக கருத முடியாது. அது பல காலமாக பாரத நாட்டில் இருந்த ஒன்று தான். அதே நேரத்தில் அதற்கு அரசியல் அங்கிகாரமும் கொடுக்கப்பட முடியாது.
ஓரின சேர்க்கை விசயத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே அனைவருக்கும் நல்லது.
இந்த விசயத்தில் மத்திய அரசு சொதப்பியது ஆச்சரியமான விசயம் ஒன்றும் இல்லை. அவர்கள் எல்லா விசயத்திலும் இப்படி தான்.