மகளிருக்காக!
தலையங்கம்
ஒரு ஆண் மகன் கல்வி கற்கும் போது அக்கல்வி அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெறக்கூடிய வாய்ப்பு கிட்டும். சமுதாயத்திலுள்ள அனைத்துப் பெண்களும் கல்வி கற்று தேறும் போது, சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது; அதனால் தேசம் முழுவதுமே வளர்ச்சி அடைகிறது என்று தேசப்பிதா மொழிந்ததை நினைவு கூறுதல் நலம். பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மிகத் தெளிவான சிந்தனை கொண்டிருந்தார் அண்ணல் காந்தியடிகள்.
காலனிய ஆட்சியில் இருந்ததற்கு மாறாக இன்றைய பெண்களின் நிலை, பொருளாதாரச் சுதந்திரம், அரசியல் மற்றும் உயர் பதிவிகளில் சுயசார்புத்தன்மையுடன் செயல்பட்டு சாதனைகள் புரிவது என்று பல வகையில் முன்னேறியிருந்தாலும், கல்வி பெற்ற மகளிரின் சமூக அங்கீகாரம் என்பது பல நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் தங்கள் கல்விக்கான தேடலில் உளவியல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். பெண்கள் எவ்வளவுதான் தங்கள் கல்வித்தரத்திலும், தொழில் திறனிலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், அதற்கேற்றார் போன்று ஆண்களின் போக்கிலும் மாற்றம் தேவைப்படுவதும் இயற்கை. அவர்களுக்குப் பெண்களிடம் உள்ள எதிர்பார்ப்புகள் பழைய நிலையிலேயே உள்ளதால் அதைச் சமாளிக்கும் முயற்சியில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. சில விதமான வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. நம் கல்வித் திட்டத்தில் இதற்கான எந்த தீர்வும் இல்லாததும் ஒரு காரணமாகிறது. இது போன்று சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் விதமாக நம் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது. மத்திய, மாநில அரசுகள், கல்வித்திட்டங்களில் அத்தகைய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
நம் அரசாங்கம் வறுமை நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக பல நலத்திட்டங்களை ஏற்படுத்தியிருப்பினும், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு சிலத் திட்டங்கள் மேம்படுத்தப்படும் வகையில் பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட்டு, உயர்கல்வி கற்கத் தயங்கும் கிராம்ப்புற மகளிருக்காக விசேசமான சலுகைகள் வழங்கலாம். குறிப்பாக வட்டியில்லா கடனுதவி, பகுதி நேர வேலை வாய்ப்புகள் போன்றவைகளை செயல்படுத்தலாம். மாவட்டம் தோறும் பெண்களுக்கான அனைத்துத் துறைகளுக்குமான ஆய்வு மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தலாம்.
அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி இருக்கும் விடுதிகளின் நிறுவனங்களுக்கு அவர்தம் உயர் கல்விக்கு பயன்படும் வகையில் அரசு உதவித்தொகை வழங்க வேண்டியதும் அவசியம். பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அளிக்கும் பட்சத்தில் மகளிரின் இளவயது திருமணங்களும் தவிர்க்கப்படலாம்.
1881ஆம் ஆண்டின் தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்களான 1,57,49,588 பேரில் 39,104 பெண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்ததாகவும் 94,571 பெண்களே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களென்பதும் ஆச்சரியமான தகவலாக உள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமாக 2,13,428 பெண்கள் மட்டுமே கல்வி கற்றிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
ஆயினும் இன்றைய நிலையே வேறு. ஆண்களின் கல்வி விகிதத்தைக் காட்டிலும் பெண்களின் கல்வி விகிதம் அதிகரித்திருப்பதை 1971 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 22 விழுக்காடாக இருந்த பெண்களின் கல்வி 2001ஆம் ஆண்டில் 55 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்களின் கல்வி வளர்ச்சி 11.72 விழுக்காடு என்றும் பெண்களின் கல்வி வளர்ச்சி கிட்டத்தட்ட 15 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதை இக்கணக்கீடு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலான குடும்பங்களில் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை எப்படியும் கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதே இதற்கு காரணமாகிறது.
ஆக அரசு உதவி மேலும் கிடைக்கும் பட்சத்தில் பின் தங்கிய கிராமப்புற மகளிரின் கல்வி நிலையும், வாழ்க்கைத் தரமும் மேலும் உயர்வடையும் என்பதும் நிதர்சனம்.