மகளிர் வாரம் – தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள்

 தி.சுபாஷிணி

முன்னுரை:

சாதனை என்றாலே வல்லமை என்னும் பொருள்தான் கண்முன் தோன்றுகின்றது. வல்லமையெனின் ஆண்மைதான் முன்னிற்கும். இந்த முன்னிலைதான் பெண்மையை மறைத்து விடுகிறது. ஒரு பிரச்சனை என்று வரும்பொழுதோ ஒரு குறிப்பிட்ட வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையால் ஒதுக்கப்பட்டு, ‘மாண்டு போ’ எனச் சபிக்கும்போது, ‘எதிர்த்து நான் வாழப் பிறந்தவள்; சாதிக்கப் பிறந்தவள்’ என்ற உணர்வு மேலோங்கும்போதோ, நல்ல உள்ளங்கள் கொதித்து எழுகின்றன. அவ்வுள்ளங்களுக்கு ஆண், பெண் என்கின்ற உடை தேவையில்லை. ‘சகமனிதனின் வலிதான் என்வலியும்’ என்கின்ற மனம்தான் வேண்டும். அப்படிப்பட்ட உள்ளங்களின் வரலாற்றுச் செய்திகளும், அநீதி கண்டு பொங்கிய வெம்மையையும், மனிதம் சாகும் போது அதை உயிர்ப்பிக்கத் துடித்த துடிப்பையும், நாட்டின் அடிமைத் தனத்தைக் கண்டு எழுந்த இனத்தையும், அறிவு மறுக்கப்படும்போது ஏற்படும் உரிமைக் குரலையும், அதுவும் அது பெண் மொழிகளாக இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இம்மொழிகளுக்குப் பின்னணி உதவியாய் நின்றவை கல்வி மொழியும், அவரவர் தந்தை, கணவன் என்கின்ற ஆண்கள் மொழியும்தாம். எனவே, உதவும் உள்ளங்கள்தாம் வேண்டுமே யொழிய ஆதிக்க மனங்கள் அல்ல எனில் உண்மையே; மிகையில்லை.

 

ஔவையார் (சங்க காலம்)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டுப் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வி, புலமையில் சிறந்து வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இது சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இதன் முதல் காட்டாய் பெண்களின் பிரதிநிதியாய் ஔவையாரை எடுத்துக் கொள்ளலாம்.

‘ஔவையார்’ என்பது பொதுச் சொல். சங்க காலத்திலும் மூவேந்தர் காலத்திலும் கவிஞராகத் திகழ்ந்த பெண்கள் அனைவரும் ‘ஔவையார்’ என்ற மதிப்புடன் அழைக்கப்பட்டனர் என்கின்ற ஒரு கருத்து உண்டு. சங்க காலத்தில் ஒரு ஔவையாரும் பிற்காலத்தில் 6 ஔவையார்களும் வாழந்தார்கள் என்ற கருத்தும் உண்டு.

ஔவையாரின் பிறப்பு பற்றிய செய்திகள் எல்லாம் செவிவழிச் செய்திகளாகவே இருக்கின்றன. சங்ககால ஔவையார் பாடல்களிலிருந்து, அவர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

சங்க கால ஔவையார், சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப் பாடியுள்ளார். இவர் மன்னர்களுடன் இசைந்த நட்புறவு வைத்திருந்தார் என்பதை இவருடைய பாடல்கள் பகர்கின்றன. அவரது சம காலத்து மன்னன் அதியமான், அதியமான் மகன் பொகுட்டு எழினி, நாஞ்சில் வள்ளுவன், சேரன், சோழன், பாண்டியன் முதலான மன்னர்களோடு தொடர்பு உடையவராக இருந்திருக்கிறார். இவர்களைப் பற்றிப்பாடியும், இவர்களது வாழ்க்கை நிகழ்வுகளைப் பாடல்களில் பதித்தும் இருக்கிறார்.

ஔவையாருக்கு அவர்காலத்து அரசர்களுக்கும், புலவர்களுக்கும் அறிவுரை வழங்கும் அளவிற்கு தகுதியான ஓர் இடம் அவர்களிடையே இருந்திருக்கிறது. அதியமானுக்காகச் சமாதானத் தூதுவராக அவன் எதிரி தொண்டைமானிடம் தூது செல்கிறார். போர் வேண்டாம் என்பதையும், இதனால் வீணான உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார். தொண்டைமானும் இதற்கு உடன்படுகிறான். இதனால் ஔவையாரின் செல்வாக்கு நமக்குப் புலப்படுகிறது.

அதியமானுக்கும், ஔவையாருக்கும் இடையே இருக்கும் சிறந்த நட்பிற்கு ‘நெல்லிக்கனியே’ சாட்சியாகும். ஔவையார் கேட்ட சுட்ட பழக் கதையும் நமக்குத் தெரியும்; தன்பால் பற்றுள்ள பாரியின் மகளிர்க்குத் திருமணம் செய்வித்த கதையும் அனைவரும் அறிந்ததுதான். பிற்கால ஔவையார் பாடியதாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை நல்வழி, விநாயகர் அகவல் போன்ற இன்னும் பல நூல்களும் தனிப்பாடல்களும் மிகவும் சிறப்புப் பெற்றவை.

ஔவையாரைத் தெய்வமாய் வழிபடும் வழக்கம் தென்தமிழகத்தில் உண்டு. ‘ஔவை நோன்பு’ என்கின்றனர். நோன்பு நோற்றால், பெண்கள் வாழ்வும் வளமும் கொழிக்கும் என்கின்ற நம்பிக்கை இன்னமும் மக்களிடையே இருக்கிறது. அவருக்குத் தமிழகத்தில் 7 இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. ஔவையார்தாம் பெண்களுக்கு, கல்விக்கு, புலமைக்கு, நாவன்மைக்கு, இறை பக்திக்கு, ஒழுக்கத்திற்கு, வாழ்வின் முறைக்கு, பண்பிற்கு ஆகிய அனைத்துக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார்.

படத்திற்கு நன்றி : http://www.panoramio.com/photo/43286550

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *