சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
சிலுவைப் பாதை என்றால் …?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்உரோமைப் பேரரசன் திபெரியுசின் (Tiberius) பிரதிநிதியாக யூதேய நாட்டில் (அக்காலப் பாலத்தீனம்) பணிற்றினான் போஞ்சு பிலாத்து.(Pontius Pilate). அவன் ஆட்சியில், இறை மகன் இயேசுவைச் சிறைப் பிடித்த கயவர் கூட்டம், இல்லாத பொல்லாத குற்றங்களை அவர் மேல் சுமத்தி அவரை அவன் முன் நிறுத்தியது.யூத குருக்களையும் மக்களையும் திருப்திப் படுத்த எண்ணிய பிலாத்து, இயேசுவை அடித்து உதைத்து வதைத்துச் சிவப்பு ஆடையை அணிவித்துக் கொண்டு வந்து நிறுத்தச் செய்கிறான்.
அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று உணர்ந்த பிலாத்து, அவரை விடுவிக்க வழி தேடினான்.
(யோவான் நற்செய்தி 19 -ஆம் அதிகாரம் 12 -ஆம் திருவசனம்.)
ஆனால், குருக்களால் தூண்டப்பட்ட மக்கள் கூட்டம் இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக் கூக்குரல் இடுகிறது.தொடை நடுங்கிப் பிலாத்துவும் அவரை அம்மக்களிடம் கையளிக்கிறான். அந்த நிகழ்ச்சி முதல் சிலுவையில் உயிர் விட்ட யேசுவின் திரு உடலைப் புதிய கல்லறையில் அடக்கம் செய்தது வரை உள்ள நிகழ்ச்சிகளைப் பதினான்கு தலங்களாகப் பகுத்து ஒவ்வொன்றாக நினைத்துத் தியானிப்பதையே சிலுவைப்பாதை எனக் கிறித்துவம் உரைக்கும். தவக் கால வெள்ளிக் கிழமைகளில் இந்தச் சிலுவைப்பாதைத் தியானம் செய்வது வழக்கம்.
இந்தப் பாதையில் சந்திக்கும் சில பாத்திரங்களைப் பார்க்கலாம் வாருங்கள்!
இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத புதிய செய்திகளை இதில் காணலாம்.
பாடுகளின் பாதையிலே நம் கவனத்தைக் கவரும் முதல் மனிதன் போஞ்சு பிலாத்து!
பாடுகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துக் கேடுகெட்ட அவப்பெயரைத் தாங்கி நிற்பவன்!
எப்படி எம்பெருமான் இயேசுவின் திருப் பெயர் காலம் காலமாய் நின்று நிலைத்து விட்டதோ அதைப் போலவே இவனுடைய அவப் பெயரையும் நிலைநிறுத்திவிட்டது திருச்சபை!
கத்தோலிக்க மக்கள் தம் விசுவாசத்தை அறிக்கை இடும் ஒவ்வொரு முறையும்,
‘…(இயேசு) கன்னிமரியிடம் உடல் எடுத்து மனு உருவானார்… ‘ என்று சொல்லி முடித்து உடனேயே, ‘போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்” என முழங்குகிறார்கள்!
சிலுவைப் பாதையின் முதல் தலத்திலேயே, இறை மகனுக்கு முறையற்ற தீர்ப்பு வழங்கிக் கறைபட்ட கையனாக வரலாற்றில் இடம் பெற்றுவிடுகிறான் பிலாத்து.
இவன் யார்? கொடிய வழி சென்று நெடிய பழி கொண்ட இவன் யார்?
இவன் குணம் என்ன?
இவனைப் பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
”உலக மயக்கத்திலே உழன்று கிடப்பவன்! எது சரி என்று நன்கு அறிந்த பின்பும் தனிப்பட்ட தியாகம் தேவைப்படாத அளவுக்கே அதைச் செய்யும் சுயநலவாதி! ஆனால் நெருக்கடி கொடுத்தால் போதும், விழுந்தடித்துக்கொண்டு விழுந்துவிடுபவன்! இறைமகனை மிக எளிதாக அவன் விடுவித்திருக்கலாம்! மகிழ்ச்சியோடு விடுவித்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய அரியணைக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சியே அவன் அவரை விடுவிக்கவில்லை!” என அவனை வருணிக்கிறது தி நியு அட்வென்ட் என்ற கத்தோலிக்க ஆங்கிலக் கலைக் களஞ்சியம்
(http://www.newadvent.org/cathen/12083c.htm).
ஆக, ‘அவன் சரியான கோழை, உள்ளீடற்ற மரம் போல் உள்ளத்து உரம் இல்லாதவன்’ என்பது வரலாறு வரைந்து காட்டும் பிலாத்தின் ஓவியம். இவனுடைய இந்த இயல்பை முதுபெருங் கவிஞர் கண. கபிலனார், தம் கர்த்தர் காவியத்தில் ‘கோழைமனம் படைத்ததொரு காட்டுப் பன்றி ‘ (பக்கம் 89) என்றும் ‘பண்படாக் கோழை பிலாத்து’ (பக்கம் 91) என்றும் பொருத்தமாகக் குறிப்பிடுவார்.(இந்த நூலை யாத்தவர் 84 வயதான முது பெருங் கவிஞர்; பிரான்சு நாட்டில் வாழ்பவர்).
உரோமைப் பேரரசின் பிரதிநிதியான பிலாத்து தன்முன் நிற்கும் எம்பெருமான் இயேசுவைப் பார்த்து,
“… நீ அரசன்தானோ?” என்று கேட்டான். (யோவான் 18 : 37). அதற்கு இயேசு,
“…உண்மையை எடுத்துரைப்பதே என் பணி… உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்.” என்றார். பிலாத்து அவரிடம்,
“உண்மையா? அது என்ன?” என்று கேட்டான். (யோவான் அதி 18 : 37 – 38).
பிலாத்தின் கேள்வியை இலத்தின் மொழியில்,’Quid est veritas?” என்று எழுதுவர்!
இவன் கேள்விக்கு மறு மொழி ஏதும் இயேசு கூறமாட்டார். ஆனால் இலத்தின் மொழிக் கேள்வியில் இடம் பெறும் எழுத்துகளை மாற்றிப் போட்டுப் பார்த்தால், ‘Est vir qui adest ‘ என வரும். இதனை ஆங்கிலத்தில் ‘anagram’ என்பர்.
பிலாத்தின் கேள்விக்கு இதுவே பதில்!
இதன் பொருள் : ”உனக்கு முன் நிற்கும் மனிதன்”.
‘வாழ்வும் வழியும்’ ஆன இறைமகன் இயேசுதானே, ‘உண்மையாகவும்’ விளங்குகிறார்.
இயேசு தீர்ப்பிடப்படுகிறார் என்று சிலுவைப் பாதையின் முதல் தலத்தில் குறிப்பிடுகிறோம்;. உண்மையை உரைக்கப் போனால் பிலாத்துவை இயேசுதான் தீர்ப்பிடுகிறார். நீதியரசனாக நிற்க வேண்டிய பிலாத்து அங்கே பீதியரசனாக நிற்கிறான்! நாமும் அவனைப் போலவே செயல்படுகிறோம். இயேசுவின் முன்னால் நின்று அவரைத் தீர்ப்பிட முயலும்போது தீர்ப்பிடப்படுவர் இயேசு அல்லர், நாமே தீர்ப்பிடப்படுகிறோம்! அங்கே பீதி அடைபவன் பிலாத்துவே தவிர இயேசு அல்லர்! அவர் அமைதி காத்தவர்! அவன் அலமரும் போது இறைமகன் திடமாகவே நிற்கிறார்.
‘பண்படாக் கோழையாகப் பிலாத்து’ இருக்கிறான். திண்பட்ட தீரத்தோடு விளங்குபவர் இயேசுவே!
பதவி ஆசை பிடித்த சுயநலவாதியாகப் பிலாத்து!
அறத்தின் நாயகனாக அன்பர் இயேசு! சத்தியத்தின் மொத்த உருவமாக அவர், அவனோ? உண்மையை, சத்தியத்தை, மாண்பினை, நீதியை அந்த மாளிகை முற்றத்திலே வீசி எறிந்து விட்டு வெறுங்கையனாக நிற்பவன்!
இந்தக் கோணத்திலே பார்க்கும் போது தீர்ப்பிடப்படுபவன் யார் என்பது தெளிவாகும். பிலாத்துவின் இடத்திலேதான் நாமும் நிற்கிறோம். அவரை நாம் விரும்புவதாக இருந்தாலும் சரி வெறுப்பதாக இருந்தாலும் சரி, அவர் நம்மைத் தீர்ப்பிடுவது இல்லை! ஏனெனில் நம்மைத் தீர்ப்பிட அவர் வரவில்லை! நம்மை நாமே நாம்தான் தீர்ப்பிட்டுக்கொள்கிறோம்! அவருடைய உண்மை ஒளியில் நம் பொய்மை விளங்கும். நம்மீது அவர் காட்டும் அன்பு வெள்ளம் நம் உள்ளத்தின் கள்ளத் தன்மையை ஓட்டும்!
‘பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான் ‘ என யோவான் எழுதுகிறார்.
(யோவான் அதி 19 : 19). அது எபிரேயம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. (யோவான் 19 : 20 ). இக்காலச் சிலுவைகளிலும் இதனை I N R I என்று எழுதி இருக்கக் காணலாம். எத்தனை பேருக்கு இதன் விளக்கம் தெரியும்? « Iesus Nazarenus Rex Iudæorum » என்பதன் முதல் எழுத்துச் சுருக்கமே இது.
‘நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர்’ என்பதே இதன் பொருள்.
இந்த பிலாத்து பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
‘Pontius Pilatus’ என இலத்தின் மொழி இவனை அழைக்கும். உரோமை அரசாட்சிக்கு உட்பட்ட யூதேய நாட்டுக்கு ஆளுநன் இவன்! அந்தக் காலத்துக்கு முன்னும் பின்னும் இவனைப் பற்றிய வரலாற்றுத் தகவல் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், 1961 -இல் யூதேயப் பகுதியைச் சேர்ந்த ‘Caesarea Palaestina’ என்ற இடத்தில் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இது திபேரியூஸ் செசார் ஒகுஸ்துஸ்(Tiberius Caesar Augustus) என்பவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில்தான் பிலாத்துவின் பெயரைக் காண்கிறோம். ஆகவே பிலாத்து வரலாற்று மனிதன்தான் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். யூத வரலாற்று ஆசிரியர் ஜோசெபூஸ் (Josephus) தம் இரண்டு நூல்களில் பிலாத்துவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆனால் செவி வழிச்செய்திகள் சில உண்டு. எருசலேம் நகரின் ஏரோது-பேராலயத்தின் பெருஞ் செல்வத்தை இவன் கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி எருசலேமுக்கு நீர்வழிப்பாதை அமைத்ததாக ஒரு செய்தி புழங்கி வந்தது. இதனை எதிர்த்த யூத மக்களை பிலாத்துவின் ஆட்கள் அடித்து நொறுக்கியதாகவும் தகவல் உள்ளது. அவ்வப்போது எழும் உள் நாட்டுப் பூசல்களை இரும்புக் கரம் கொண்டு இவன் அடக்கியதாகவும் கூறுவர். இவனுடைய கொடுங்கோல் ஆட்சி பற்றிய முறையீடுகள், சிரியாவில் இருந்த உரோமை பிரதிநிதிக்கு எட்டின. அதனால் இவன் உரோமைக்குத் திருப்பி அழைக்கப்பட்டான். அதன் பின் இவனைப் பற்றி வரலாறு பேசவில்லை, வாய் மூடிக்கொண்டது!
திருச்சபையின் முதல் வரலாற்று ஆசிரியரான யூசெபியூஸ்(Eusebius) சில தகவலகளைத் தருகிறார். அவற்றுக்குச் சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை. அவர் தரும் தகவல்படி,
கி.பி 37 – 41 -இல் கலிகூலாவின் ஆட்சிக் காலத்தில் பிலாத்துவின் அதிகாரம் சரிந்தது, சிதைந்தது! கோல்(Gaul = la France) நாட்டுக்கு அவன் நாடு கடத்தப்பட்டானாம். அங்கே, வியன் என்ற ஊரில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். வேறு சில செவி வழிச்செய்திகள் : அவன் உடல் (இத்தாலி நாட்டு) தைபர் நதியில் எறியப்பட்டதாகவும், தீய ஆவிகளின் பேயாட்டத்தால் அந்த நதியின் நீர் பாதிக்கப்பட்டதால், அவனுடைய உடலை மீட்டெடுத்து வியன் நகரில் ரோன் நதியில் ஆழ்த்தினார்களாம்! அங்கே உள்ள பிலாத்துவின் கல்லறையை இன்றைக்கும் காணலாமாம். அந்த நதியின் நீரும் அவன் சடலத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம்! அதனால் மீண்டும் அதனை மீட்டுச் சுவிசில் உள்ள லொசான் நகர் ஏரியில் அமிழ்த்தினார்களாம்! மறுபடி அங்கிருந்தும் மீட்டு எடுத்த அவன் சடலத்தை லுசெர்ன் மலைப் பகுதியில் உள்ள ஆற்றில் இறுதியாக அடக்கம் செய்தார்களாம். ஒவ்வொரு புனித வெள்ளியின் போதும், அவன் சடலம் நீரிலிருந்து எழுந்து தன் கைகளைக் கழுவிக் கொள்வதாக ஓர் ஐதிகம் நிலவுகிறது. (மாசற்ற இயேசுவின் ரத்தப் பழிக்கும் தனக்கும் தொடர்பில்லை என எண்பிக்கத் தன் கைகளைக் கழுவி அவரைக் கைகழுவிவிடுகிறான் பிலாத்து! இதனை மத் 27 : 24 இல் காண்க).
இவனுடைய மனைவி பற்றிய குறிப்பு ஒன்றைப் புனித மத்தேயு தம் நற்செய்தியில் அதிகாரம் 27 திருவசனம 19 -இல் தருகிறார் ; ”பிலாத்து நடுவர் இருக்கையின் மீது அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ”அந்த நேர்மையாளான் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.’ ஆனால் புனித மத்தேயு அவன் மனைவி பெயரைக் குறிப்பிடவில்லை. அந்த அம்மாள் பெயர் குளோதியா புரோகுயுலா(Claudia Procula) எனச் செவிவழிச் செய்திகளால் அறிகிறோம். எம்பெருமான் இயேசுவுக்குச் சார்பாகப் பேசிய காரணத்தால், கீழ்த்திசைத் திருச்சபையில் குளோதியா புரோகுயுலா புனிதவதியாகக் கொண்டாடப்படுகிறார். மாசற்ற இயேசுவுக்குத் தான் விதித்த மரண தண்டனையை நினைத்து நினைத்து மனம் மறுகிய பிலாத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கீழ்த்திசைத் திருச்சபை குறிப்பிடுகிறது.
சிலுவைப் பாதையின் ஐந்தாம் தலத்தில் புதிய மனிதர் ஒருவரைச் சந்திக்கிறோம். பிலாத்துவிலிருந்து முற்றிலும் மாறு பட்டவர், வேறுபட்டவர்! பெரும் பாரச் சிலுவையைத் தனதிரு கரங்களால் தழுவித் தோளில் தூக்கி வரும் இயேசு பெருமான் மிகவும் களைத்துப் போகிறார்! ”அப்போது அலெக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்’;. (மாற்கு 15 : 21). இச்செய்தியை மத்தேயுவும் (மத் 27:32) லூக்காவும் (23:26) குறிப்பிடுகின்றனர். உதவி செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டவரின் ஊரையும் பேரையும் மூவருமே குறிப்பிடுகிறார்கள்.
சிரேன் என்ற ஊர், வட ஆப்பிரிக்கக் கண்டத்தில், தற்பொழுதைய லிபியாவில் இருந்தது. திருத்தூதர் பணிகள் 13 -ஆம் அதிகாரத்தின் முதல் திருவசனத்தில் நீகர் எனப்படும் சிமியோனைப் பற்றிப் புனித லூக்கா குறிப்பிடுகிறார். நீகர் என்றால் கறுப்பு இனத்தவர் என்பது பொருள். லிபியா வெப்பம் மிகுந்த நாடு. அங்கே தோன்றிய சீமோன் கறுப்பினத்தவர் என்பது பொருத்தமாகத்தான் உள்ளது. இவர் யூதராகவே இருக்க வேண்டும். முதலாம் தாலமி காலத்திலிருந்தே (கி.மு 367 – 283), சிரேன் ஊரில் யூதர்களின் குடிஇருப்பு இருந்திருக்கிறது. எனவே அந்த ஊரில் பிறந்த சீமோன் எருசலேமில் குடி ஏறி இருக்கக் கூடும்.
இவரைப் பற்றிக் குறிப்பிடும் புனித மாற்கு இவரை அலெக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தை என்ற குறிப்பையும் தருகிறார். தெரிந்ததைச் சொல்லித் தெரியாததை விளக்க வேண்டும். சீமோன் யார் என்பதைக் குறிப்பிட விரும்பும் புனித மாற்கு, சீமோனின் பிள்ளைகளைக் குறிப்பிடுகிறார் என்றால் அனைவருக்கும் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும். உரோமையர்களுக்காகவே தம் நற்செய்தியை எழுதினார், மாற்கு. ஆகவே, அவர் குறிப்பிடும் அப்பிள்ளைகள் இருவரும் உரோமையர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இதில் ரூபு என்ற பெயர் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இடம் பெறுகிறது. உரோமையர்களுக்கு எழுதிய திருமுகத்தின் 16 -ஆம் அதிகாரம் 13 -ஆம் திருவசனத்தில்,
“ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்து கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.” எனப் புனித பவுலடிகள் எழுதுகிறார். ஆனால் அலெக்சாந்தர் என்ற பெயர் பல இடங்களில் வருவதால் எந்த அலெக்சாந்தர், சீமோனின் மகன் எனச் சரியாக அறிய முடியவில்லை! சீமோன் என்பது கிரேக்கப் பெயர். சிமியோன் என்ற யூதப் பெயரின் கிரேக்க வடிவம். அலெக்சாந்தர் என்பது முழுக்க முழுக்கக் கிரேக்க பெயரே! ரூபு எனபதோ உரோமப் பெயர். இவற்றை எல்லாம் அலசிப் பார்க்கும் போது, சீமோன் யார் என்பதை நாம் அறியலாம். சுருங்கச் சொன்னால், அவர் சிரேன் ஊரைச் சேர்ந்த யூதர், இயேசு பாடுபட்ட காலத்தில், எருசலேமில் இருந்தவர், உரோமைக் குடி உரிமை பெற்றவர். உரோமில் புகழ் பெற்று விளங்கிய கிறித்துவர்கள் நடுவில் பெரும் பணியாற்றிப் புகழ் பெற்ற இருவரின் தந்தை.
இறைவன் மானிட வர்க்கத்துக்கு அளித்த மாண்பு மிகு பெருமைகள் இரண்டு.
முதலாவது, கன்னி மரியிடம் உடல் எடுத்து மானிட மகனாகப் பிறந்தது.அடுத்த பெருமை, இறைமகன் சுமக்க வேண்டிய, சுமந்த சிலுவையைத் தூக்கிச் சுமக்கும் பெரும் பேற்றை மானிடர் ஒருவருக்கு அளித்தது.
இந்தப் பெரும் பேறு சீமோனுக்குக் கிடைக்கிறது. அதுவும் அவர் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில்!
மரியாள் எப்படி மானிட இனத்தின் பிரதிநிதியாக இறைமகனைத் தம் மணிவயிற்றில் சுமந்தார்களோ அவர் போல, மனித இனத்தின் பிரதிநிதியாகச் சீமோன் சிலுவை சுமக்கிறார். அதன் வாயிலாக இயேசுவின் மீட்புப் பணியில் பங்கேற்கிறார். அவரைப் போலவே நாமும் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சென்றால் (லூக. 23:26) இயேசுவின் பாடுகளில் பங்கு கொள்வோம், மீட்புப் பணியில் இயேசுவுக்கு உதவியவர்கள் ஆவோம்.
இளைத்துக் களைத்துக் கீழே விழுந்து தள்ளாடிய இயேசு, சீமோனின் உதவிக்குப் பின் ஓரளவு களைப்பு நீங்கித் தெம்பு பெறுகிறார். பின் அழுது புலம்பி வந்த எருசலேம் நகரப் பெண்களுக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுகிறார். நாம் அவருக்குச் செய்யும் இந்தச் சிறு உதவியால் அவர் களைப்பும் இளைப்பும் நீங்குமே! அவருக்கு உதவ வேண்டிய உதவக் கூடிய அதிகாரம் படைத்த பிலாத்து, அதனைப் புறக்கணித்துக் கைகளைக் கழுவி நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறான். அதற்கு நேர்மாறாக, சீமோன் செயல் படுகிறார். படைவீரர்கள்தாம் சீமோன் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள். ஆனாலும் அவர் அதனை ஏற்றுச் சுமக்கிறார். இறைவன் நம் மீது சுமத்தும் சிலுவையைச் சீமோன் போலவே நாமும் சுமக்க வேண்டும். சுமந்தால் பெரும் பேறு பெறுவோம்.
அடுத்து நாம் சந்திக்கும் பாத்திரம் ஒரு பெண். இவரைப் பற்றித் திருமறை நூல் ஏதும் பேசவில்லை, நற்செய்தியாளர்கள் வாய்திறக்கவில்லை! ஆனால் பரம்பரைச் செய்திகளும் காலம் காலமாய் புழங்கி வந்த கதைகளும் இவருக்குத் தனி உலகமே படைத்து விட்டன. இந்தப் பெண்மணியின் கருணைச் செயல் ஆறாம் தலத்திலே இடம் பெற்றுவிட்டது. மாசு மறுவற்ற இயேசுவின் திருமுகம் வியர்வை, இரத்தம் முதலியவற்றால் களங்கப் பட்டுக் கிடக்கிறது. படைவீரர்களுக்குப் பயந்து எவரும் இயேசுவை நெருங்க வில்லை. அப்போது, எவருக்கும் அஞ்சாமல் எவரையும் சட்டை செய்யாமல் வருகிறாள் ஓரு பெண். தன் கைக்குட்டையால் அவரின் திருமுகத்தைத் துடைக்கிறாள். சீமோனின் உதவிக்குப் பின் இயேசுவுக்குக் கிடைக்கும் அடுத்த உதவி இதுதான்.
இக்கைக் குட்டையில் அவர் திருமுகம் பதிந்துவிட்டதாகவும் அதுவே அவரின் மூலப் படம் என்றும் கூறுவர். அதற்குப் பிறகு அது போன்ற பல போலிகள் உலவினவாம். அதனால் ‘மூலப் படம்’ என்ற பொருளில் இலத்தீன் மொழியில் ‘veron icon’ என வழங்கலாயிற்று. இதுவே நாளடைவில், வெரோனிக்கா என அப்பெண்ணுக்கும் பெயராயிற்று! இப்பெண்ணைப் பற்றிய கதைகள் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. இத்தாலியில் வழங்கும் கதை :
பேரரசன் திபேரியுசுவின் அழைப்பின் பேரில் இப்பெண்மணி உரோமை நகருக்கு வந்தாராம். இத்திருச் சீலையைக் கொண்டு, அங்கே அவனுடைய நோயைக் குணப்படுத்தினாராம். புனிதர்கள் பேதுருவும் பவுலடிகளும் வாழ்ந்த காலத்திலேயே இவரும் உரோமையில் வாழ்ந்தாராம். தம் கடைசிக் காலத்தில் இத்திருச் சீலையைப் பாப்பரசர் கிளமெண்ட் அவர்களுக்கும் அவர் வழித்தோன்றல்களுக்கும் விட்டுச் சென்றாராம். இன்றும் இத்திருச் சீலை உரோமை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளதாம். தவக்காலத்தில் மட்டும் மக்கள் வணக்கத்துக்கு வைக்கப்படுகிறதாம்.
பிரான்சில் வேறு வகையான கதை வழங்குகிறது. நற்செய்திகள் குறிப்பிடும் சக்கேயுவை இவர் மணந்துகொண்டாராம். இருவரும் பிறகு உரோமை நகர் சென்றுவிட்டார்களாம். பின்னர் இருவரும் பிரான்சு வந்தார்களாம்! அமாதூர் என்ற பெயரில் இவர் துறவியாகிவிட, அப்பெண்மணி மர்சியால் என்பவருடன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டாராம். மத்தேயு நற்செய்தி (9: 20-22) குறிப்பிடும் பெரும்போக்குள்ள பெண்ணாக இவர் இருக்கக் கூடும் என்றொரு கருத்தும் உண்டு!
இக்கதைகள் எப்படி இருந்தாலும் ஆறாம் தலம் குறிப்பிடும் இப்பெண்மணியும் பிலாத்துவின் குணத்துக்கு எதிர் குணம் கொண்டவராகத் தெரிகிறார். கோழை மனம் படைத்த அவனோ யூத குருக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சுகிறான், எங்கே தன் பதவிக்கு வேட்டு வைக்கப் படுமோ என நடுங்குகிறான். இப்பெண்மணியோ அத்தனை கூட்டத்திலும் படைவீரர்களுக்கு நடுவிலும் அச்சமின்றி இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார்.; எத்தகைய எதிர்ப்புக்கு ஆளானாலும் நாமும் இவர் போல இயேசுவுக்குச் சார்பாகச் செயல்படுகிறோமா? செயல்படுவோமா?
இங்கே நாம் மூவகைப் பாத்திரங்களைச் சந்தித்தோம். எப்படி நாம் இருக்கக் கூடாது, செயல் படக் கூடாது, இயேசுவைக் கைவிடக் கூடாது என்பதற்குப் பிலாத்து பாத்திரம் நல்ல எடுத்துக்காட்டு. மாறாக, இயேசுவைப் பின்பற்ற வேண்டிய முறையையும் அவரை அன்பு செய்ய, அவருக்குப் பணியாற்ற எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய திடத்தையும் மற்ற இரு பாத்திரங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். பிறகென்ன, சீமோனைப் போல சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின் தொடர்வோம், எவர்க்கும் அஞ்சாது வேரோணிக்காவைப் போல் அவர்க்கு அன்பு செய்வோம்.
எனவே, இத்தவக் காலத்தில் இப் பாத்திரங்களைப் பற்றிச் சிந்திப்போமே, சிந்தித்துச் செயல் படுவோமே!
____________________
படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Saint_Veronica
http://www.jesuschristsavior.net/Words.html
http://www.rc.net/wcc/cross.htm