சாந்தி மாரியப்பன்

நறுக்.. துணுக் (18)

கான்சர் எனும் கொடிய நோயை உண்டாக்குவதில் முக்கியப்பங்கை புகையிலையும் புகையிலையைப் பயன்படுத்திச் செய்யப்படும் போதைப்பொருட்களும் வகிக்கின்றன. உடல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கெடுதல் விளைவித்துப் பெண்களைக் கண்ணீர்க் கடலில் தள்ளும் இந்தப் பழக்கத்தை ஒழிக்க அரசு தன்னாலான முயற்சிகளை எடுத்து வந்தாலும் முழுவதுமாக ஒழிக்க முடியாததாகவே இருக்கிறது. அதிலும் 2009-ம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பதின்மூன்றிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறார்களில் 19% சிறுவர்களுக்கும் 8.3% சிறுமிகளுக்கும் புகைக்கும் பழக்கம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

ஆகவே வரும் கல்வியாண்டிலிருந்து ஐந்திலிருந்து ஏழாம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தில் புகையிலையின் தீய விளைவுகளை விவரிக்கும் வகையிலமைந்த பாடங்களும் சேர்க்கப்படுமென்று மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சரான அஜீத் பவார் அறிவித்துள்ளார். விளையும் பயிர்களுக்கு முளையிலேயே புகையிலையின் கெடு நலன்களைச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வைத்து விட்டால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது இந்தப் பழக்கங்களைக் கைக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. மேலும் கல்வித்தலங்களிலிருந்து 100 மீ. சுற்று வட்டாரத்தில் புகைப்பொருட்கள் விற்பனை செய்வதோ, விளம்பரம் செய்யப்படுவதோ தடுக்கப்படுமென்றும், இதை யாரேனும் மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் வசூலிக்கவும் சம்பந்தப் பட்ட கல்வித்தலங்களின் முதல்வர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுமென்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆரோக்கியமானதொரு இளைய தலைமுறை உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், தாங்கள் கற்றுக் கொள்ளும் தகவல்களின் துணை கொண்டு, வீட்டிலிருக்கும் பெரியவர்களையும் போதைப் பழக்கங்களிலிருந்து மீட்பார்கள் என்று நம்புவோமாக.

 

படத்திற்கு நன்றி:http://healthmeup.com/news-healthy-living/want-a-healthy-heart-quit-smoking/8172

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க