திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு

சிங்கை விஜயகுமார்

படகுத் துறையில் நல்ல வேளையாக என் பெயர்ப் பலகையுடன் ஒருவன் நிற்பதைக் கண்டு சற்றுச் சுதாரித்துக் கொண்டேன். விமான நிலையத்தின் வெளியில் ஆள் இருப்பான் என்று சொன்னதும் நம்ம ஊரு மாதிரி வெளி வாசலிலேயே நிற்பான் என்று எண்ணினேன். எனினும் இறங்கியவுடன் எதற்கு அவனைக் கடிக்க வேண்டும் என்று மலர்ந்த முகத்துடன் அவனிடம் குசலம் விசாரித்தேன். நல்ல கரிய குட்டையான உருவம், சுருட்டை முடி, முகம் முழுக்கச் சிரிப்பு. எல்லாவற்றிற்கும் தலையை நன்றாக ஆட்டினான்.

ஒரு ஐந்து நிமிடம் பேசிய பிறகு தான் புரிந்தது அவனுக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தை ‘யா யா யா’ தான் என்று. அப்போது முன்னர் ஒருமுறை வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர் வரும்போது வரவேற்க சென்னை விமான நிலையம் சென்றபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. தாஜ் ஹோட்டல் ஊழியர் (அப்போது சென்னையில் இரண்டே நட்சத்திர ஓட்டல்கள்-ஒன்று தாஜ் மற்றொன்று சோலா)- இரவு வேலைதான், இருந்தாலும் சென்னைக்கு அவரது கோட் கொஞ்சம் அதிகம் தான்.வரவேற்க வருபவன் வண்டி ஓட்டுனர் தானே, அவனுக்கு எதற்கு மானேஜர் கெட்அப்? அவனுக்கு அடுத்து சோலாக்காரன், அவனும் கோட் சூட் தான். வெகு நேரம் ஆகியும் அவர்களிடம் யாருமே வரவில்லை. சோலாக்காரன் “டேய்,போர்ட நல்ல தூக்கிப் பிடிடா” என்று தாஜ்காரனைச் சீண்டினான். அதற்கு அவன் போர்டை ஒருமுறை சரி பார்த்தான் – அதில் “வெல்கம் டு இந்தியா” என்று ஆங்கிலத்திலும் அடியில் ஜப்பானிய மொழில் வருபவன் பெயரும் எழுதி இருந்தது. தாஜ் காரன் “டேய் அவனுக்கு அவன் பெயரையே ஆங்கிலத்தில் படிக்கத் தெரியலை. அவனுக்குப் போய் நீ ‘வெல்கம் டு இந்தியா’ போர்டு பிடிக்கிறியா?” என்று நக்கல் செய்தான். அப்போது சிரிப்பு வந்தாலும், பின்னர் யோசிக்கையில் ஜப்பான்காரன் தன் தாய் மொழியை ஆங்கிலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் உலகில் முன்னேறியது நினைவுக்கு வந்தது.

பகல் பத்து மணி. மாலத்தீவிலும் நல்ல வெய்யில்தான். ‘வா’ என்று செய்கை செய்து அவன் நடந்தான், நானும் தொடர்ந்து நடந்தேன். “ஏம்பா இங்கே டாக்ஸி எல்லாம் கிடையாதா,இப்படிப் பொட்டி படுக்கையுடன் நடத்தியே கூட்டிகிட்டுப் போறியே?” என்று கேட்க அவன் மீண்டும் சிரித்தான். ஆனால் சைகை பாஷையில் அடுத்த தெருவில் ஒரு விடுதியைக் காட்டினான். பொதுவாக அங்கே பல மாடிக் கட்டடங்கள் இல்லை, ஒரு மாடி கட்டடங்கள்தான் அதிகம்.

அதிஷ்ட வசமாக விடுதி மேலாளர் நன்றாக ஆங்கிலம் பேசினார் – ஆனால் அவரும் கடவுச் சீட்டைக் கேட்டார். என்னடா இது திரும்பவுமா?. “வாடகை கட்டாமல் எஸ் ஆயிடுவேன்னு பயமா? இந்தா,முன்னாடியே கட்டி விடுகிறேன்” என்றேன். “மினி பார் உபயோகம் செய்வீர்களே?” என்றான். “என்னது பாரா! அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை” என்றேன். “இல்லை சார், கோக கோலா,ஐஸ் கிரீம் சோடா கூட இருக்கும்” என்றான்.“என்னது ஐஸ் கிரீம் சோடாவா?” திகைத்தேன். “இந்தா, அதற்கும் சேர்த்து டெபொசிட் வாங்கிக்கோ” என்றேன். மீண்டும் கடவுச் சீட்டு வேண்டும் என்றான். திரும்பவுமா? ‘கோட்டை எல்லாம் அழிங்க’ கதையாக இருக்கே என்று தயங்கினேன்? “இல்லை சார் நகல் எடுத்துக் கொண்டு திரும்பித் தந்து விடுகிறேன்” என்றான். “அனைத்து வெளிநாட்டு விருந்தினருக்கும் இப்படித்தான் செய்வோம்” என்றான். தயங்கித் தயங்கிக் கொடுத்தேன். “நீங்கள் ரூமுக்குப் போங்க, பின்னாலையே அனுப்பி வைக்கிறேன்” என்றான்.“அதெல்லாம் வேண்டாம், நான் இங்கேயே நிற்கிறேன்” என்றேன்.

அப்போது ஒரு தென் கொரிய ஜோடி உள்ளே வந்தார்கள். இளம் ஜோடி, தேன் நிலவுக்கு வந்திருப்பார்கள் என்று யூகித்தேன். பையன் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான். அவனது ஜோடி அவனை விட அழகு. என் தந்தை பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் அவங்க ஊரில் ஒரே துணிப் பஞ்சம் போல. கடலில் விளையாடி விட்டு அப்படியே வந்து விட்டனர் போல. ‘எப்படி ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்படி?’ என்று யோசித்தேன்.

உள்ளூர்வாசிகளுக்கு ஒரு சட்டம், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சட்டம் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நம்மூர் என்றால் இப்படி ஒரு ஷோவுக்கு உடனே கூட்டம் கூடி பஜ்ஜி, முறுக்கு, சொம்பாப்படி கடை எல்லாம் வைத்திருக்கும் அதற்குள்ளே. ஆனால் அங்கே அவர்களை யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மேலும் அவர்களைச் சுற்றிப் பிச்சை கேட்கக் கூட யாரும் இல்லையே என்று வியந்தேன். இவர்கள் நம்மை விட ஏழை நாடு, நம்மிடத்தில் உதவி கேட்டு நிற்கும் நாடு என்று தானே படித்தேன். பிறகு எப்படி?

நான் அவர்கள் பார்ப்பதைப் பார்த்து, வணக்கம் சொன்னார்கள். இதுவும் புதுமையாக இருந்தது. பொதுவாக நம்மவர்கள் தெரிந்தவருக்கு மட்டுமே வணக்கம் வைப்பார்கள். ஆனால் வெளி நாடுகளில் யாரையாவது காலை வாக்கிங் போகும்போது பார்த்தால் கூட வணக்கம் சொல்கிறார்கள். “சுற்றுப்பயணியா?” என்று கேட்டான். “இல்லை, இங்கே வேலை பார்க்க வந்துள்ளேன்” என்றேன். “உலகத்திலேயே நீ தான் மிகவும் அதிஷ்டசாலி” என்று கை குலுக்கினான். தன் மனைவியை இன்ட்ரோ கொடுத்து விட்டு எங்களுக்கு திருமணம் ஆகிப் பத்து ஆண்டுகள் ஆகின்றது. அதைக் கொண்டாட இங்கே வந்துள்ளோம் என்றான். பூ சுற்றுகிறானோ? பார்ப்பதற்கு இருபது அகவை கண்டிப்பாகத் தாண்டி இருக்க மாட்டார்கள் என்று எந்த கோவிலில் வேண்டுமென்றாலும் அடித்துச் சொல்லுவேன். எப்படித்தான் இப்படி உடலைச் சிக்கென்று வைத்துள்ளார்கள் என்று யோசிக்கும் முன்னர் இன்னொரு அதிர்ச்சி. “நான் எங்க ஊரில் ஒரு மின்சார சுடுகாட்டில் வேலை செய்கிறேன்” என்றான். ‘ஒரு வெட்டியான் விடுமுறைக்கு மாலத்தீவுக்கு வந்திருக்கானே’ என்ற வயிற்றெரிச்சல் முதலில் தலை காட்டினாலும் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நாம் வாய் அளவில் கூறுவதைத் தாண்டி அவர்கள் நாட்டில் தனது வேலையைப் பெருமையாக அவன் கூறுவதைக் கேட்டு வியந்தேன்.

முடிவாக அறைக்குச் சென்றேன். இரண்டாவது மாடி. மொத்தம் மூன்று மாடிகள். மாலத்தீவில் இதுவே இரண்டாவது உயரமான கட்டிடம். முதல் இடம் ஆறு மாடி. ஜன்னல் அருகே சென்று வெளியில் பார்த்தேன். ஒரு சில மாடி வீடுகளே இருந்தன. ஆனால் எல்லா வீட்டு மொட்டை மாடிகளும் வெள்ளை வெளேர் என்று மின்னின. வெளியில் சென்று விடு விடு என நடந்தேன். இரண்டு மணிக்குள் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து விட்டேன்! அவ்வளவுதான் தலை நகரம் !

அறைக்குச் சென்றேன். அங்கே ஒரு சீட்டு இருந்தது. முன்னதாக நாளை அங்கிருந்து பாக்டரி இருந்த தீவுக்குச் செல்ல பிளான் மாறி விட்டதாகவும், ஒன்பது மணிக்கு ஆடிட்டர் அலுவலகத்தில் சந்திப்பு என்றும் அதை அடுத்துப் பத்தரை மணிக்கு வருவாய்த்துறை அமைச்சருடன் அடுத்த வருட பாக்டரி நிலக் குத்தகை சம்பந்தமான சந்திப்பு இருக்கிறது. “நான் வருவதாக இருந்தது, ஆனால் கடைசி நிமிடத்தில் வேறு வேலை வந்து விட்டது நீ பார்த்துக் கொள்” என்று முதலாளியிடம் இருந்து செய்தி. ஏதாவது வேண்டும் என்றால் ரேடியோ மூலம் தொடர்பு செய். எல்லா வீட்டிலும் ஓட்டல்களிலும் ரேடியோ இருக்கும் என்றும் பின்குறிப்பு இருந்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆடிட்டர் பெரிய விஷயம் இல்லை !சேரி அமைச்சுடன் தானே சமாளிப்போம். கால் புக் பண்ணி வீட்டுக்குப் பேசினேன். அப்பா வேலை பற்றி விசாரித்தார். அம்மா சாப்பாடு பற்றி… “நாளை கூப்பிடுகிறேன்” என்று சொல்லிக் கட் செய்தேன். பில் டாலர் கணக்கில் வந்தது.

புது இடம் – இரவு முழுக்க உருண்டு பிரண்டு ஒரு வழியாகக் காலை எட்டு மணிக்கு எழுந்து குளிக்கச் சென்றேன். குழாயில் வந்த தண்ணி வாயில் பட்டவுடன் …அப்பா ஒரே உப்பு. உப்பு மட்டும் அல்ல அழுகிய முட்டை வாசனை. இது என்னடா என்று ரிசப்ஷனுக்குப் போன் செய்து கேட்டேன். ஸல்பர் என்றான். “இங்கே மட்டும் இல்லை சார், மாலத்தீவில் எங்கும் இப்படித்தான். நாங்களாவது குடிக்க மினரல் வாடர் தருகிறோம், வெளியில் மொட்டமாடியில் பிடிக்கும் மழை நீர் தான் என்றான். ஓஹோ! அதனால் தான் எல்லா மொட்டை மாடிகளும் சுத்தமாக வெள்ளை அடித்து இருக்குதா ! கஷ்டப்பட்டு உப்புத் தண்ணீரில் குளித்தேன் – எவ்வளவு முயன்றும் சோப்பு நுரை மட்டும் வரவே இல்லை. மெட்ராஸில் கார்பரேஷன் தண்ணீரைக் கிண்டல் அடித்தது நினைவுக்கு வந்தது.

தலை சீவி, டை கட்டிக் கோட் போட்டு வெளியில் நடந்தேன் – மீண்டும் அனைவரும் என்னையே பார்த்தார்கள். நீச்சல் உடையில் அலையும் இடத்தில கோமாளி போல இருந்தேன். ஆடிட்டர் சந்திப்பு நன்றாகப் போனது. ஓரளவுக்கு என்ன நிலவரம் என்று புரிந்து கொண்டேன். அமைச்சுடன் ஆன சந்திப்புக்குத் தேவையான தஸ்தாவேஜுகள் அனைத்தும் எடுத்துக் கொண்டு விரைந்தேன். முன்னதாகவே எனது விசிடிங் கார்ட் அடித்து வைத்திருந்தார்கள். பெருமையுடன் கையில் எடுத்துக் கொண்டேன். அம்மா பார்த்தால் மிகவும் சந்தோசப் படுவார்கள் என்ற எண்ணத்துடன் பார்லிமென்ட் ஹவுஸ் தேடிச் சென்றேன் .அங்கே கெடு பிடி ஒன்றும் பெரிதாக இல்லை.

சற்றுத் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன். கல்லூரி ஒன்றில் மீண்டும் செல்வது போன்ற ஒரு பயம் ( படிப்பு என்றாலே பயம் தானே !) வருவாய் அமைச்சு என்ற பலகை கண்டு உள்ளே சென்றேன். அங்கே ஒரு குமாஸ்தா பெரிய மேஜையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் பத்தரை மணிக்கு அமைச்சுடன் சந்திப்பு என்று சொல்லி எனது கார்டைக் கொடுத்தேன். அவர் எழுந்து கை குலுக்கி, “வருக வருக” என்று கூறித், தங்க நிறத்தில் பார்டர் போட்ட ஒரு கார்டைத் தந்தார். ஒரு நிமிடம் தலை சூர் என்று சுற்றியது – அவர் தான் மாலத்தீவின் வருவாய்த்துறை அமைச்சர்.

ஏதோ மளிகை சாமான் கடையில் பில் போடும் ஆள் மாதிரி இருக்கும் இவரா அமைச்சர்! நம்ப முடியவில்லை. அமைச்சுடன் சந்திப்பு என்று தானே சொன்னார்கள், அமைச்சருடன் சந்திப்பு என்று சொல்லவில்லையே! வெளியில் ஒரு அட்டெண்டர் கூடவா அமைச்சருக்கு இருக்காது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. முடிவில் அவர் ஒரு மணியை அடித்து ஒரு ஆளை வரவழைத்தார் .அவன் உடனே சூடான காப்பியும், பாக்டரியின் பைலையும் எடுத்து வந்தான். அவரும் பொறுமையாகப் பேசத் துவங்கினார். நன்றாக ஆங்கிலத்தில் பேசினார். முடிவில் அடுத்த ஆண்டு குத்தகை விலையை ஏற்றாமல் அப்படியே கண்டின்யூ பண்ண ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தைப் பிரிண்ட் செய்து கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார். ஒரே கேர்ராக இருந்தது. மெதுவாக வெளியில் நடந்தேன். திடீரென ஒரே கெடு பிடி – அதிபர் மதிய உணவுக்கு வீட்டுக்குப் போகிறார் என்றார்கள். ஒரு மெர்சிடிஸ் வண்டி, முன்னால் நான்கு புல்லட் , பின்னால் இரண்டு புல்லட் பைக் ! அவளவு தான். அதிபர் கான்வாய்.

அருகில் ஒரு ஓட்டலில் நுழைந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குச் சென்றேன். பாக்டரிக்கு ரேடியோ மூலம் தகவல் சொல்லித் தோணியை ( படகு)அனுப்பச் சொன்னேன். பிறகு உடைகளை மாற்றிக் கொண்டு புகழ் பெற்ற கடற்கரையைப் பார்க்கச் சென்றேன். அருகிலேயே ஒரு ரிசார்ட் இருந்தது. அப்படி என்ன இருக்கும் என்று உள்ளே நுழைந்தேன். அங்கே முன்பு அமைச்சர் அலுவலகத்தில் பார்த்த அதே பைல் ஆசாமி. இங்கே அரை நிக்கர் அணிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் வணக்கம் கூறிக் கை குலுக்கினான். தொண்டை வரை கேள்வி வந்து விட்டது. “நீ எப்படி இங்கே?” என்று?. கேட்டே விட்டேன். அவன் நகைத்துக் கொண்டே , “சார் மாலத்தீவில் வேலை அப்படி ஒன்றும் அதிகம் இல்லை, அரசு வேலை அரை நாள் தான். அதற்குப் பின்னர் நாங்கள் வேண்டும் என்றால் வேறு இடத்தில வேலை பார்க்கலாம்” என்றான் !

மாலை பாக்டரி தோணி வந்தது. எனக்காக வந்த படகு என்று நினைத்திருந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி . உள்ளே இருந்து சுமார் இருபது பேர் இறங்கிச் சென்றனர்.கூடவே நாலு கோழி, ஒரு சேவல், நாலு மூட்டைக் கருவாடு, ரெண்டு பைக், மூணு சைக்கிள் என்று ஒரு சின்ன ஊரே இறங்கியது. அது மட்டும் அல்ல அதே போல இந்தப் பக்கத்தில் இருந்து அதே அளவு ஏற்றுமதி ! ‘இது என்னடா பாக்டரி படகா? இல்லை பல்லவன் பஸ்ஸா?’என்று நினைக்கும் போதே படகு புறப்பட்டது. டீஸல் வாசமும் கருவாடு நாற்றமும் நீயா நானா போட்டி போட்டன. சற்றுத் தூரம் சென்றவுடன் எனக்கு இந்த விவாதத்துக்கு நடுவர் வேலை பார்க்கப் பிடிக்கவில்லை, எழுந்து படகின் முன் பக்கம் சென்று அமர்ந்தேன். முகத்தில் சில்லென சாரல், மெதுவாகக் கதிரவன் மறைந்தான். நிலவு மேலே வந்தது. நிலவின் ஒளியில் அந்தக் கடல் பரப்பு கண்ணைப் பறித்தது. நிலவின் ஒளி நம்ப முடியாத வண்ணம். முப்பது அடி ஆழத்துக்கு நீரினுள் பிரகாசித்தது. திரும்பிப் பார்த்தேன். படகை ஓட்டும் மாலுமியைக் காணவில்லை. அதிர்ந்து போய் எழுந்து நின்றேன். அங்கே, ஒரு ஆறு பேர் சேர்ந்து சீட்டுக் கட்டு ஆடிக்கொண்டு இருந்தனர். அதில் மிகவும் தீவிரமாகப் படகின் மாலுமியும் ஆடிக் கொண்டு இருந்தான். பதறிப் போய் அவனைச் சைகையில் ‘ஏன் ஸ்டீரிங் செய்யவில்லை?’ என்று கேட்டேன். அவன் சிரித்து விட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தான். பின்னால் சென்று பார்த்தேன். அங்கே திசை திருப்பும் கருவி ஒன்றுமே இல்லை. படகின் பின்னால் தண்ணீரில் ஒரு பலகை மட்டுமே இருந்தது, அதில் இருந்து ஒரு இரும்புக் கம்பி படகின் மேல் வந்தது. அதன் மேலே ஒரு பொடியன் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழிந்தவுடன், மாலுமி ஒரு டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு கடலில் வெளிச்சத்தைப் பாய்ச்சினான். சிறிது நேரத்தில் நடுக் கடலில் ஒரு சிறு கம்பு தெரிந்தது. பொடியனை நகர்த்தி விட்டுக்,கம்பியைத் தன் காலால் சற்று நகர்த்தினான். ஒரு நிமிடம் கழிந்தவுடன் மீண்டும் கம்பியை நேராகச் செய்து பொடியனை அதன் மேல் உட்கார வைத்து விட்டுச் சீட்டுக் கட்டுக்குத் திரும்பினான். அரை மணி ஆனது. மாலுமி வெளியில் தலையை நீட்டி மேலே எதையோ தேடினான். பின்னர் மீண்டும் பின்னால் சென்று படகைத் திசை திருப்பினான். எங்கும் கும்மிருட்டு.படகின் மோட்டார் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டது.

தொடரும்..

1 thought on “திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு

  1. Semma thrilling boat ride pola..!!! interesting  Vijay..:) waiting for more n more..:)

Leave a Reply

Your email address will not be published.