மாசிமகத்தின் சிறப்பு!
காயத்ரி பாலசுப்பிரமணியம்
மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பௌர்ணமியும் வரும் நாளில் கொண்டாடப்படுவது மாசி மகம். அன்று கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களில் தெய்வத் திருவுருவங்கள் வைக்கப்பட்டு, அவைகளுக்கு சிறப்பு வழிபாடு செயப்படும். இதனை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வர். ஆதமகாரகனாக விளங்கும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியைத் தாண்டி வருகிறார். ஆகவே 12 மாதங்களில் 12 ராசியை தாண்டி வருவார். இதில் மாசி மாதத்தில்தான், சூரிய பகவான், கும்ப ராசியில் இருந்து ஏழாம் பார்வையாக தன் சொந்த வீடான சிம்மத்தைப் பார்க்கிறார். அதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது.
மனிதனுக்கு உறவு முறைகள் இருப்பது போல் கிரகங்களுக்கும் உறவு முறை இருக்கிறது.! ஜோதிட உலகில்,சூரியனும், சனியும் நெருங்கிய உறவினர்கள்.! என்ன உறவு? சூரிய பகவானின் மகன்தான் சனி! அத்துடன், கும்பம் என்பது சூரியனின் மகனாக விளங்கும் சனியின் வீடு. மகனின் வீட்டில் தந்தை தங்குவது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே ? அத்துடன், தனக்கு சொந்தமான வீட்டைப் பார்க்கும் போது கிரகங்கள் பலம் பெறும். அப்படி பலம் பெறும் போது அவை தரும் பலன்கள் சிறப்பாகவே இருக்கும். அதனால்தான் இந்த நன்னாளில், மனிதனுக்கு இறையருள் பரிபூரணமாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பாக அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுகின்றன.
மகம் நட்சத்திரத்திற்கு என்ன சிறப்பு? மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. ஜோதிட ரீதியாக, கேது ஞானம், மோட்சம் இரண்டையும் குறிக்கும் கிரகமாகும். மனிதனாகப் பிறந்த அனைவரும் ஞானமும், இறையருளும் பெற்று மோட்சத்தை அடைய வேண்டும். அதற்கு ஆத்ம காரகனும், ஞான காரகனும் தேவை. இவை இரண்டும் சேரும் போது மனிதனுக்கு இறையருள் குறைவின்றி கிட்டும்! அவன் செய்த பாவங்கள் குறைந்து , புண்ணியம் பெருகும். இதை அனைவரும் அவரவர் இருக்கும் இடத்திலோ, ஊரிலோ பெற வேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள், இந்த நன்னாளில், பலதரப்பட்ட மக்களும் கூடும் இடமாக விளங்கும் நீர்நிலைகளில், இரவு நல்ல வெளிச்சத்தை தரும் பௌர்ணமி நாளில் இறை வழிபாட்டை வைத்துள்ளனர்! என்னே அவர்களின் மதிநுட்பம்!
இந்த ஆண்டு, மார்ச் 7-ம் தேதியன்று வரும் மாசி மக நன்னாளில், அனைத்து தெய்வங்களையும் கண்ணாரக் கண்டு , வழிபட்டு இறையருளுக்கு பாத்திரமாவோம்!
படத்திற்கு நன்றி: http://img.dinamalar.com/data/uploads/E_1330494694.jpeg