தாய்மை தவறும் அம்மாக்கள்
அவ்வை மகள்
எவரொருவருக்கும் தாய் போல் ஒரு உறவை எவராலும் தர முடியாது. மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவா போகிறோம் என்று, ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்கிடையே பேதமிருப்பினும், அவற்றை ஒதுக்கித் தள்ளி ஒற்றுமையுடன் வாழ்வது கண்கூடு. அன்பென்றாலே அது அம்மா தான். மற்ற உறவுகளெல்லாம் சும்மாதான்!!
ஆனால் மாறி வருகின்ற உலகச் சூழல்களில் – அம்மாக்களின் பாரம்பரியக் குணாதிசயங்களான பொறுப்புணர்வு, கடைமையுணர்வு – கட்டுப்பாட்டுக் கோட்பாடு ஆகியன மெல்ல மெல்ல அரிமானம் தொற்றி, ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன!
கொடுக்கப் பட்டிருக்கிற சுதந்திரமா? அல்லது எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிற சுதந்திரமா? என்பது கேள்வி இல்லை-கிடைத்திருக்கிற சுதந்திரத்தை-முறையாகவும் சரியாகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் – பெண்கள் – தமக்குத் தாமே இழிவையும் பேராபத்துக்களையும் சுலபமாய் உண்டாக்கிக்கொண்டு விட முடியும். இவை “மாதர் தம்மை இழிவு செய்யும்” மடைமைகளா என்றால் இல்லை. இவை :மாதர் “தம்மை” இழிவு செய்து கொள்ளும் மடைமைகள்.
பள்ளியில் – கல்லூரியில் உடன் படித்த மாணவனோடு எத்தனை தூரம் பழக முடியும் என்பதிலிருந்து – உடன் பணிபுரியும் ஆடவனோடு எத்தனை தூரம் பழக முடியும் என்பது வரை – இடையில் எத்தனை எத்தனை விஷயங்கள் உள்ளனவோ அத்தனை விஷயங்களிலும் எச்சரிக்கையோடு செயல்படாவிட்டால் விளையும் பிரச்சினைகள் நூறாயிரம்!
குறிப்பாகப் பெண்கள் எவரை வீட்டிற்கு அழைக்கிறோம் என்பதிலே மிகுந்த எச்சரிக்கை காட்டவேண்டும்.
அம்மாவை ஒட்டிக் கொண்டு வரும் நபர்கள் — நண்பர்கள் – நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என வீட்டில் – குழந்தைகள் நம்புவார்கள் – இது இயற்கை – ஆனால் இந்த நம்பிக்கையை – அம்மாவின் அலுவலக நண்பர்களோ – உடன் படித்தவர்களோ தமக்குச் சாதகமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்! இத்தகைய தொல்லைகள் வரும் போது அவற்றை எடுத்துச் சொல்லவும் கூடக் குழந்தைகள் அசௌகரியப்படுவார்கள் – அச்சப்படுவார்கள்.
அவர்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டிருப்பது தெரிய வரும்போது – விஷயம் கைக்கு மீறிப் போயிருக்கும்.
இன்றைய நிலையிலே வீட்டிற்குள் வரும் வெளி நபர்களால் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுகின்ற பயங்கரமான குற்றம் அதிகரித்து வருகிறது. இவ்வாறான குற்றங்களுக்குத் தண்டனை பெறுவது என்பது கடினம் – ஏனெனில் – இவை பற்றிப் புகார் செய்வதென்பதே கடினம்! அது மட்டுமல்ல – புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும் கூட அது குழந்தைக்கு – உடல் ரீதியாக – உள்ள ரீதியாக – நியாய தர்ம ரீதியாக ஏற்பட்டிருக்கிற காயத்திற்கும் – பாதிப்பிற்கும் ஈடாகுமா? அக்குழந்தையின் எதிர் காலமும் அல்லவா கேள்விக்குறியாகிறது?
இன்று அம்மாக்களின் போக்கு கொஞ்சம் தலைவிரி கோலமாகப் போவதாக – நமது சமுதாயத்திலே ஒரு புதிய பிறழ்வை அம்மாக்களே அரங்கேற்றுவதாக – பலதரப்பிலிமிருந்து வரும் தகவல்கள் காட்டுகின்றன.
இவ்வகையான போக்கிற்கு ஒரு முழுமையான முற்றுப் புள்ளியை அம்மாக்கள் வைத்தேயாக வேண்டும். அன்றேல் சம்மருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை நம்மூரில் – சாந்தாவும் பூஜாவும் நாளை சந்திக்க வேண்டியிருக்கும்:
“மம்மா, மம்மா” என்று தனது அன்னையைச் சுற்றி வந்தபடி வளர்ந்து வந்த சம்மர் எனும் இந்தப் பெண்ணுக்கு அன்னையே கேடு விளைவிக்கிறாள்.
அம்மாவைத் தேடி வீட்டுக்கு வரும் அம்மாவின் பாய் பிரண்ட், பத்து வயதேயான சம்மரிடமும் நயமாக நடந்து கொண்டு மெல்ல மெல்ல அவளையும் தகாத உறவுக்கு அடிமையாக்கி விடுகின்றான். போதைப் பொருட்கள் ருசி காட்டப்படுகின்றன. பாலியல் உறவோ – போதைப் பொருட்களோ – இவையெல்லாம் சம்மருக்குத் தண்ணி பட்ட பாடு. சம்மரின் மம்மா இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக் காட்டவில்லை – உடந்தையாக இருக்கிறாள்.
குற்றங்கள் செய்வதில் கில்லாடியாகிறாள் சம்மர். தொடர்க் குற்றங்கள் – திருடுவது – வீடு புகுந்து கொள்ளையடிப்பது – கிரெடிட் கார்ட் மோசடி என – அடிக்கடி ஜெயிலுக்குப் போவது என்பது அவளுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று.
பதினைந்தே வயதாகும் அவளுக்குச் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை பால் குடிக்க மறுக்கிறது – நீர் குடிக்க மறுக்கிறது – தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தை பராமரிக்கப் பட்டு வரும் நிலையில் – அக்குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை நடத்துகிறார்கள். திடுக்கிடும் தகவல் கிடைக்கின்றது. கர்ப்பமாய் இருக்கும் போது சம்மர் சாப்பிட்ட போதைமருந்துகள் யாவும் – கருவில் வளர்ந்து வந்த சிசுவிற்கும் போக – இக்குழந்தை பிறப்பதற்கு முன்னரேயே போதை மருந்துக்கு அடிமையாகி விட்டது. இரத்தத்திற்குள் நேரடியாக போதை மருந்துகள் கலந்து வந்த நிலையில் அக்குழந்தைக்கு போதைமருந்தே உணவாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.
இப்போது, பிறந்து வெளி வந்து விட்டாதால் தாயின் போதை சப்ளையிலிருந்து பிரிக்கப்பட்டு அக்குழந்தைக்கு, போதைக்காக அலையும் வெறி நிலை ஏற்பட்டுத் துன்பப்படுகிறது!
வாழையடி வாழையென வந்த மரபு என்பார்களே! அது போல பல அம்மாக்கள் செய்யும் பிறழ்வுகளும் குற்றங்களும், தொடர்கின்றன – தொடர்கின்றன என்று சொல்வதைவிட – ஒவ்வொவொரு – தலைமுறையிலும் – அவை பன்மடங்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இன்று மருத்துவமனையில் இருக்கின்ற பெண்குழந்தை பிழைக்குமா? பிழைத்தாலும், அவளால் இயல்பாக வளர முடியுமா வாழ முடியுமா? அப்படியே வாழ்ந்தாலும் அவளால் உருப்படியான சந்ததியை உருவாக்க முடியுமா?
மம்மாவோ! அம்மாவோ! அன்னையாக இருப்பதல்லவோ தாயின் பண்பு? கலாச்சாரங்கள் கடந்த கடமையல்லவா இது?
தாய்மை என்பது தவவலிமை – இதில் தவறுவோர் – பெண்கள் எனும் அடிப்படைத் தகுதி இழந்தவர்கள்!!
மம்மிகளாய்- டம்மிகளாய் – தாழ்வுறும் – இழிவு நீக்கி – மானம் பெரிதென வாழும் மனிதகுல மாந்தர்களாய் – மாணிக்கங்களாய் வாழ்பவர்களே மாதர்கள் – மற்றவர் யாவரும் மனிதக் குலப் பதரே என்றால் தவறில்லை!!
படத்திற்கு நன்றி: http://content.usatoday.com/communities/Religion/post/2011/06/abortion-gay-marriage-tea-party-millennials/1#.T1YSSM0_-4U